Jan 29, 2017

சியாமளா நவராத்திரி விரத முறை


மக அமாவாசை அன்றே வீட்டை சுத்தம் செய்ய வேண்டும். வீடு முழுவதும் கங்கா ஜலம் தெளிக்க வேண்டும். பின் பிரதமை அன்று அதிகாலையில் எழுந்து நீராடி, மாவிலை தோரணங்களை கட்ட வேண்டும். அன்னைக்கு ஒரு மண்டபம் நியமனம் செய்து அதற்கு சிவப்பு வஸ்திரத்தை சாற்ற வேண்டும். அந்த மண்டபத்தில் துர்காதேவி/ ஸ்யாமளா தேவியை கும்பத்தில் ஆவாஹநம் செய்ய வேண்டும். தீபங்கள் ஏற்றி, அன்னைக்கு வளையல், மஞ்சள், குங்குமம், கண்ணாடி, சரடு போன்ற மங்கள பொருட்களை வைக்க வேண்டும். தூப தீப ஆராதனை செய்து அன்னையை வழிபட வேண்டும். மனத்தூய்மையுடன் அன்னை ஒன்பது நாட்களும் வழிபாடு செய்ய வேண்டும். இந்த நவராத்திரி காலங்களில் தேவி மாஹாத்மியம், ஸ்ரீமத் தேவி பாகவதம் போன்ற நூல்களை பாராயணம் செய்ய வேண்டும். மேலும் அன்னையின் நவாக்ஷரீ மந்திரத்தை இடைவிடாமல் ஜபம் செய்ய வேண்டும். பூஜையில் எந்த விதமான ஆடம்பரமும் ஆர்ப்பாட்டமும் இருக்கக் கூடாது.

இந்த நவராத்திரியில் வரும் பஞ்சமி, சரஸ்வதிக்கு மிகவும் விருப்பமான நாளாகும். அந்த பஞ்சமியை பஸந்த் பஞ்சமி என்று அழைப்பார்கள். அன்று மாணவர்கள் அன்னையை வழிப்பட்டால், கல்வியில் சிறந்து விளங்கலாம். மேலும் ரதசப்தமி அன்று அன்னையை குண்டலிநீ ரூபமாக வணங்கினால், உடல் நலம் சீராகும்பீஷ்மாஷ்டமியில் அன்னையை வணங்கினால் புத்ரசாபத்தில் இருந்து விடுபடலாம்; மேலும் சத்யவிரத குழந்தைகளை பெறலாம்.


மஹநவமியில் நவாரண பூஜையும், தசமி அன்று கன்யா பூஜை செய்யலாம்.

முத்தாரம்மே சரணம் !


Posted by Mutharamman Satsangam

சியாமளா நவராத்திரி கதை


ஒருமுறை ப்ரஹஸ்பதி பிரம்மாவிடம் மஹநவராத்திரி விரத கதையைக் கேட்டார். அதற்கு, ப்ரம்மா, ”குரு தேவா! உம்மால் உலக க்ஷேமத்திற்காக நல்ல கேள்வி கேட்கப்பட்டது. அதை உமக்காக சொல்கிறேன்என்று சொல்ல ஆரம்பித்தார். ஸ்யாமளா நவராத்திரியை மக நவராத்திரி என்றும், குப்த நவராத்திரி என்றும் அழைப்பார்கள். மஹநவராத்திரி தை / மாசி மாதத்தில் வரும் வளர்பிறை பிரதமை முதல் நவமி வரை ஒன்பது நாட்கள் செய்ய வேண்டும். இந்த விரதத்தை முதன்முதலாக ஒரு பெண்மணி அனுஷ்டித்து அன்னையின் அநுக்ரஹத்தை பெற்றுள்ளாள். சுனதா என்ற பிராமணனுக்கு துர்கையின் அருளால் ஒரு பெண் குழந்தை பிறந்தது. அதற்கு சுமதி என்று பெயர் வைத்து சீரும் சிறப்பாக வளர்த்து வந்தான்.

அவளும் அன்னையின் மேல் பக்தி செலுத்து வந்தாள். மேலும் பூஜை செய்வதை விட அவள் தன் அழகை பராமரிப்பிலும், தன்னை அலங்கரிப்பதிலும் அதிக ஆர்வம் கொண்டிருந்தாள். சுனதா பல முறை சொல்லியும் கேட்கவில்லை. எனவே அவளை ஒரு தொழுநோயாளிக்கு மணம் முடித்துக் கொடுத்தான். அதற்கு சுமதி முழு சம்மதம் தெரிவித்தாள். ஏனெனில், அவளுக்கு தெரியும் அன்னையின் அருள் இருந்தால் வாழ்க்கையில் வரும் எந்த துன்பத்தையும் நிக்கி விடலாம் என்று.

திருமணம் முடிந்த பிறகு சுமதி தன் கணவனோடு கானகம் சென்று, அன்னையை வேண்டி, மக நவராத்திரி விரதம் அனுஷ்டித்தாள். ஒன்பதாம் நாள் அன்னை சுமதி முன் தோன்றி, “மகளே ! வேண்டிய வரங்களை கேள்என்றாள். அதற்கு சுமதி அன்னையிடம், “நான் செய்த பாவம் என்ன ?” என்று கேட்டாள். அன்னை புன்னகைத்த படி, பூர்வ ஜன்ம கதையை சொன்னாள். சுமதி முன் ஜன்மத்தில், பதிவிரதையாக இருந்தாள். ஆனால் அவன் கணவனோ திருடன். அவன் ஒரு நாள் சிறையில் அடைக்கப்பட்டான். இவளும் அவனுடன் சேர்ந்து சிறை வாசம் அடைந்தாள். ஒன்பது நாட்களும் அன்ன ஆஹாரம் இல்லாமல் தெரியாமலே விரதம் அனுஷ்டித்தார்கள். அதன் பலனாக, இந்த பிறவியில் உயர்ந்த குலத்தில் பிறந்திருக்கிறார்கள். ஆனால் அன்னையின் விரதத்தை செய்ய மறந்ததால், அன்னை தொழுநோயாளியை கணவனாக கொடுத்தாள். இவ்வாறு அன்னை சொல்லி, “மகளே! உன் கணவன் தொழுநோயில் இருந்து விடுபடுவான். உனக்கு நல்ல சம்பத்துகள் பெருகும்; மேலும் என் அருளால், உனக்கு உத்கல என்ற மகன் பிறப்பான். அவன் மிக்க புகழுடன் விளங்குவான் என்று சொல்லி மறைந்தாள். பின் சுமதி தன் கணவனுடன் மங்களமாக வாழ்ந்தாள் என்று பிரம்மா நவராத்திரியின் பெருமையை குருவுக்கு விளக்கினார்.

எனவே, மக நவராத்திரி விரதம் அனுஷ்டித்தால், மங்கள வாழ்வு கிடைக்கும். மக நவராத்திரி நம்மை ஆபத்துகளில் இருந்து காப்பாற்றும்; மேலும் சாதகனுக்கு சித்தி அளிக்க வழிவகுக்கும். ஸ்யமளா நவராத்திரி கல்வி, கலை, வேள்விகளில் மேன்மை அளிக்கும்.

நாமும் அன்னையை நவராத்திரி காலங்களில் அவளை பணிந்து அவள் அருளைப் பெறுவோம்.


கண்களிக்கும்படி கண்டுகொண்டேன், கடம்பாடவியில் பண்
களிக்கும் குரல் வீணையும், கையும் பயோதரமும்,
மண் களிக்கும் பச்சை வண்ணமும் ஆகி, மதங்கர்க்குலப்
பெண்களில் தோன்றிய எம்பெருமாட்டிதன் பேரழகே

முத்தாரம்மே சரணம் !

Posted by Mutharamman Satsangam

Jan 26, 2017

தை அமாவாசை

முன்னோர் வழிபாட்டில் முக்கிய இடம் பிடிப்பது அமாவாசை தினம். பித்ருக்கள் என்று அழைக்கப்படும் முன்னோர்களுக்கு அமாவாசை தினத்தில் தர்ப்பணம் கொடுத்து, அவர்களை வழிபட வேண்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.  அந்த நாட்களில் தர்ப்பணம் கொடுப்பதால் நம் பாவங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.  

பொதுவாக ஒவ்வொரு அமாவாசையன்றும் நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கவேண்டும் என்பது சாஸ்திரம். அவ்வாறு இயலாத பட்சத்தில் வருடத்தின் முக்கிய அமாவாசை தினங்களான ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை, தைஅமாவாசை ஆகிய மூன்று தினங்களில் அவசியம் தர்ப்பணம் கொடுக்கவேண்டும்.

தமிழகத்தின் தென்மாவட்டங்களில் தை அமாவசை சிறப்பாக வழிபடப்படுகிறது. கன்னியாகுமரி, பாபநாசம், குற்றாலம், ஏரல், திருச்செந்தூர் ,உள்ளிட்ட பகுதிகளிலும், வடக்கே வேதாரண்யம், உள்ளிட்ட கடல் சார்ந்த பகுதிகளிலும்,மறைந்த நம் முன்னோர் களுக்கு தர்ப்பணம் செய்து புனித நீராடி இறைவனை வழிபடுவது மரபு.

எனவே போற்றுதலுக்கு உரிய நம் முன்னோர்களை தை அமாவாசையன்று வழிபட்டு புண்ணியத் தலங்களில் நீராடினால் எண்ணற்ற பலன்களும் புண்ணியங்களும் கிடைக்கும் என்கின்றன புராணங்கள்.


தை அமாவாசை அன்று என்ன செய்ய வேண்டும்? 


மறைந்த பெற்றோர் மற்றும் மூதாதையரை மனதில் நினைத்து இந்த  நாளில், ஆறு, கடல் போன்ற புனித நீர்நிலைகளில் நீராடி மூதாதையர்களுக்குப் தர்ப்பணம் செய்ய வேண்டும்.  இதற்கு உகந்த நேரம்  மதிய வேளை. அதேபோல இந்நாளில் புரோகிதர் மூலமாக தர்ப்பணம் செய்வது சிறப்பு. அவ்வாறு இயலாத பட்சத்தில், பக்தியுடன் மனதார பித்ருக்களை வழிபட்டு அரிசி, காய்கறி, பழம், தட்சிணை, புத்தாடை முதலானவற்றை படைத்து வழிபாடு செய்யவேண்டும். அந்த ஆடை மற்றும். உணவை ஏழைகளுக்கு தானமாகக் கொடுப்பதன் மூலம் அளவற்ற நன்மைகள் நம் வாழ்வில் உண்டாகும்.


மேலும் தடைபட்ட திருமணம், வேலையின்மை, நீண்ட நாள்பட்ட நோய்நொடிகள், மன வருத்தம் ஆகியவை விலகி சந்தோஷமும், மனநிறைவும் கிடைக்கும். அன்று பசுக்களுக்கு பழம், அகத்திக்கீரை கொடுப்பது இன்னும் நல்ல பலன் தரும். அதேபோல பித்ரு பூஜையைச் முழுமனதோடு, முறையாக செய்யாவிட்டால் முன்னோர்களின் சாபத்துக்கு உள்ளாக நேரிடும்  என்றும் சாஸ்திரம் சொல்கிறது.


தர்ப்பணம் முடிந்ததும், முன்னோர்களுக்கு படையல் போட்டு வழிபடவேண்டும். பிறகு முன்னோர்களின் பிரதிநிதிகளாகச் சொல்லப்படும் காகத்துக்கு உணவு தரவேண்டும். உயிரினங்களில் கூடி வாழ்ந்து, சேர்ந்து உண்ணும் வழக்கமுள்ள உயர்ந்த குணம் கொண்டது காக்கை இனம். அப்படிப்பட்ட உயர்ந்த ஜீவனான காகத்திற்கு உணவிடுதன் மூலம் பித்ருக்களின் ஆசியைப் பெற முடியும் என்று சாஸ்திரம் கூறுகிறது. எனவே காகத்திற்கும் அமாவாசை தினத்தில் உணவளிப்பது சிறப்பு.

முத்தாரம்மே சரணம் !

Posted by Mutharamman Satsangam

Jan 24, 2017

சௌந்தர்யலஹரி பாடல் - 1



ஸிவ: சக்த்யா யுக்தோ ,யதி பவதி சக்த: ப்ரபவிதும்
சேதேவம் தேவோ, கலு குசல: ஸ்பந்திது-மபி
அதஸ்-த்வா-மாராத்த்யாம், ஹரி-ஹர-விரிஞ்சாதிபி-ரபி
ப்ரணந்தும் ஸ்தோதும் வா, கத-மக்ருத-புண்ய: ப்ரபவதி

தமிழாக்கம்:

ஓம் ஜடைமுடி அழகன் சிவனிடம் தாயே நீயும் அன்புடன் இணைய
அவனும் தொழில்புரியும் சக்தியும் உன்னையன்றி இயங்கவும் முடியாதே
மும்மூர்த்திகளும் போற்றும் உன்னை பேறு செய்யாதவன் துதிப்பது இயலுமோ ?

அம்மே சரணம் !!

களக்காடு ஸ்ரீ முத்தாரம்மன் - திருக்கல்யாணக் காட்சி


Posted by Mutharamman Satsangam

( Related to Kulasai Mutharamman Temple )

Jan 20, 2017

ஸ்ரீ முத்தாரம்மன் கதை - 2 - ஸம்சார பங்க நிர்மக்ந ஸமுத்தரண பண்டிதா

அகில புவனத்தையும் படைத்து அருளாட்சி புரிந்து வரும் அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகியாம் அன்னைக்கு இவ்புவனத்தில் தான் எத்தனை கோவில்கள். தக்ஷயஞ்யத்தில் தேவியின் உடல் உறுப்புகள் சிதறி விழுந்த இடங்கள், நம் பாரத தேசத்தில் சக்தி பீடங்களாக உருப்பெற்றன. அவற்றில் மிகவும் சிறப்புமிக்க ஒருசக்தி திருத்தலம் திருச்செந்தூருக்கு அருகாமையில் உள்ள குலசேகரப்பட்டிணம்.

லலிதா சகஸ்ரநாமத்தில், “ஸுதா சாகர மத்யஸ்தா காமாக்ஷி காமதாயினீ” என்று ஒரு நாமம் வருகிறது. அதாவது, அமிர்த கடலின் நடுவில் வீற்றிருந்து தன் அழகான கண்களால் பக்தர்களின் விருப்பத்தை நிறைவேற்றி வைக்கிறாள் என்பதாகும். அவ்வாறே அன்னை முத்தாரம்மன் அலைப்பாயும் கடலோரம் கோவில் கொண்டு தன் விழிகளாலே பக்தர்களின் விருப்பத்தைப் பூர்த்தி செய்கிறாள்.

மற்றொருக் கோணத்தில் பார்த்தால், ஸாகரம் என்னும் கடல் நம் ஸம்சார வாழ்க்கையை நினைவுப்படுத்தும். இந்த ஸம்சார சாகரத்தில் ஜீவாத்மாக்களாகிய நாம் விடப்பட்டு வாழ வழித்தெரியாமல் தத்தளித்து வருகிறோம். சிலர் மூழ்கும் நிலையில் உள்ளோம். அப்படி அலைப்பாயும் சம்சார சாகரத்தில் அவதிப்படுபவர்களையும், புதைந்தவர்களையும் கரையேற்றி ஞானத்தை அளித்து, முக்தியை வழங்குவதற்காகவே அம்மை ஞானமூர்த்தீஸ்வரருடன் சேர்ந்து அருள்பாலிக்கிறாள் அன்னை முத்தாரம்மன். இதை, ஸம்சார பங்க நிர்மக்ந ஸமுத்தரண பண்டிதா” என்னும் அவள் ஸகஸ்ரநாமம் உறுதிப்படுத்துகிறது.

அன்னையை வழிபடுவோம் ஸம்சார சாகரத்தில் இருந்து விடுபடுவோம் !

……………………….(அன்னை அருள் பொங்கும்)

(ஸ்ரீ முத்தாரம்பிகை மாஹாத்மியம் என்னும் தொடரில் இருந்து எடுக்கப்பட்டது)


Posted by Mutharamman Satsangam

ஸ்ரீ முத்தாரம்மன் கதை - 1 - வரசித்தி விநாயகர் துதி

திருவும் கல்வியும் சீரும்சிறப்பும் உன்

திருவடிப் புகழ் பாடும் திறமும் நல்
உருவும் சீலமும் ஊக்கமும் தாழ்வுறா
உணர்வும் தந்து எனது உள்ளத்து அமர்ந்தவா !
குருவும் தெய்வமும் ஆகி அன்பாளர் தம்
குறை தவிர்க்கும் கு ணப்பெருங் குன்றமே
வெருவும் சிந்தை விலகக் கஜானனம்
விளங்கும் சித்தி விநாயக வள்ளலே!!



அடியார்கள் வேண்டும் வரங்களைக் கொடுத்து, அஷ்டமாசித்திகளையும் அளிக்க வல்ல ஸ்ரீ வரசித்தி விநாயகரை பணிந்து, குலசேகரபட்டிணத்தில் குடிக்கொண்டிருக்கும் அன்னை முத்தாரம்மனின் மாஹாத்மியத்தை எழுத ஆரம்பிக்கின்றேன்.

(ஸ்ரீ முத்தாரம்பிகை மாஹாத்மியம் என்னும் தொடரில் இருந்து எடுக்கப்பட்டது)

Posted by Mutharamman Satsangam

Jan 18, 2017

Kulasai Mutharamman Dasara Video - 2013



Dressed up as Chamundeshwari during Kulasai Muthramman Dasara 2013

Posted by Mutharamman Satsangam

Jan 17, 2017

2017 ஜனவரி மாத காலாண்டர்


Posted by Mutharamman Satsangam

2017 குலசேகரப்பட்டிணம் முத்தாரம்மன் கோவில் மாத திருவிழா நாட்கள்


Posted by Mutharamman Satsangam

2017 குலசேகரப்பட்டிணம் முத்தாரம்மன் கோவில் திருவிழா நாட்கள்


Posted by Mutharamman Satsangam

முத்தாரம்மன் சத்சங்கம் என்றால் என்ன?

சத்சங்கம்” என்றால் உண்மையான பக்தர்கள் கூடும் இடம் என்று பொருள்படும். அவ்வகையில், முத்தாரம்மன் சத்சங்கம் என்பது முத்தாரம்மன் மீது உண்மையான பக்தி கொண்ட அடியவர்கள் இணையும் குழு.

இறைவியைத் தொழும் பழக்கம் வருவதற்குமுன், தொழுது வாழ்த்தித் தியானிப்பவர்கள் கூட்டத்தில் கலந்து பழகவேண்டும். அந்தச் சத்சங்கச் சிறப்பினால் மெல்ல மெல்லப் பக்தி உணர்ச்சி உண்டாகும், தென்ன மரத்தில் இளநீர்க் காய்க்குள் நீர் நிரம்புவதுபோல, நம்மை அறியாமல் உள்ளம் பண்படும்; பக்தியுணர்வு படியும். அப்படி பட்ட சத்சங்கம் அமைய நான் என்ன புண்ணியம் செய்தேன் என்று சிலிர்க்கிறார் அபிராமிபட்டர்.

கண்ணியது உன்புகழ் கற்பதுன் நாமம் கசிந்துபத்தி
பண்ணியது உன்னிரு பாதாம்புயத்தில்-பகல் இரவா
நண்ணியது உன்னை நயந்தோர் அவையத்து -நான்முன்செய்த
புண்ணியம் ஏதுஎன் அம்மே புவி ஏழையும் பூத்தவளே

எனவே, சத்சங்கம் என்பது  மிகவும் முக்கியம். அதுவே முக்தி அளிக்க வல்லது. இதனை ஆதி சங்கரர் தனது  பஜகோவிந்தத்தில், சத்சங்கத்தை பற்றி

சத்ஸங்கத்வே நிஸ்ஸங்கத்வம் நிஸ்ஸங்கத்வே நிர்மோஹத்வம்
நிர்மோஹத்வே நிஸ்சல தத்வம் நிஸ்சல தத்வே ஜீவன் முக்தி

என்று கூறியுள்ளார் . 

அதாவது, அடியவர், நல்லவர், உண்மைப் பொருளை அறிவதிலும் அடைவதிலும் நாட்டமுடையவர் கூட்டமான சத்சங்கம் , பற்று இல்லாத நிலையை அளிக்கும்.  பற்று இல்லாத நிலையை அடைந்தால் மயக்கங்கள் இல்லாத நிலை கிடைக்கும். மயக்கம் இல்லாத நிலையை அடைந்தால் என்றும் நிலையான மறைப் பொருளை அடைய முடியும்.  அப்படி நிலையான மறைப் பொருளை அடைந்தால் இங்கேயே இப்போதே முக்தி நிலையை அடையலாம். 

ஆக, முக்திக்கு முதல் படியாக இருப்பது சத்சங்கம் ஆகும்.

முத்தாரம்மே சரணம் !

Posted by Mutharamman Satsangam