Mar 29, 2017

நவதுர்க்கை - பிரம்ஹசாரிணி



வசந்த நவராத்திரியின் இரண்டாம் நாளில் அன்னை பிரம்மச்சாரிணியாக வணங்கப்படுகிறாள். 'பிரம்ம' என்றால் தபஸ் என்று பொருள். பிரம்மச்சாரிணி என்றால் 'தப சாரிணி ' என பொருள்படும்.


இமயத்தின் மகளான இந்த தேவி மீண்டும் சிவபெருமானை மணந்து கொள்ள வேண்டுமென்று ஆசைப்பட்டாள்.
இதற்காக பிரம்மசரணி தேவி பல்லாயிரம் ஆண்டுகள் கடுந்தவம் புரிந்தாள். ஆயிரம் ஆண்டுகளுக்கு காய்களையும் கனிகளையும் மட்டுமே உண்டு தவம் செய்தாள். அடுத்த நூறு ஆண்டுகளுக்கு இலைகளையும், தழைகளையும் உண்டு தவம் செய்தாள். மூவாயிரம் ஆண்டுகள் பிலவ மரத்தடியில் அமர்ந்து கொண்டு அவள் மீது விழுந்த பிலவ இலையை உணவாகக் கொண்டு கடுந்தவம் புரிந்தாள். அதன் பின் பல ஆண்டுகள் எதுவுமே உண்ணாமல், தண்ணீர்கூட அருந்தாமல் சிவபெருமானையே நினைத்து மனமுருகி பொறுமையோடு கடுந்தவம் புரிந்தாள். இவளின் தவ உக்ரம் மூன்று உலகங்களிலும் எதிரொலித்தது. இறுதியில் சிவன் இவளை மணம் புரிந்தார். பொறுமையும் , தவவலிமையும் பெற்ற பிரம்மசரணி தேவி தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அன்பைப் பொழிகிறாள்.


பரமேஸ்வரனின் திரிபுர தாண்டவத்தின்போது, அவர் இடக்கால் பெருவிரலால் வரைந்த கோலம் அஷ்டவசுக் கோலம் எனப்படும். இதிலிருந்து பிரம்மச்சாரிணி தேவி தோன்றினாள் என்பர். இந்த தேவிக்கு காசியில் "துர்க்காகாட்' படித்துறையில் கோவில் உள்ளது. தென்கோடியில் உள்ள கன்னியாகுமரியில் அன்னை பிரம்மச்சாரிணியாக அருள் செய்கிறாள்.


ஸச்சிதானந்த ப்ரம்மஸ்வரூபத்தை அடையச் செய்பவள் பிரம்மசாரிணி. உடல் சக்ரங்களில் இவள் 'ஸ்வாதிஷ்தானத்தில் 'இருப்பவள்.எனவே, அவளை ஸ்வாதிஷ்டானச் சக்கரத்தில் சித்தத்தை நிறுத்தித் தியானிக்க வேண்டும் என்பர் யோகிகள்.


பிரம்மச்சாரிணி நன்றி, அறிவு, ஞானம் ஆகியவற்றின் வடிவானவள். இவள் மிகவும் எளிமையாக காட்சி தருபவள். இந்தத் தேவி எப்போதும் தவத்திலேயே இருப்பாள். வெண்ணிற ஆடையுடன் வலக்கையில் ஜபமாலையும், இடக்கையில் கமண்டலமும் தாங்கி வீற்றிருப்பாள். அன்னைக்கு வாகனம் ஏதும் இல்லை. பூமியில் நடப்பவளாக இவள் காட்சிப்படுத்தப்படுகிறாள்.


தன்னை வணங்குவோர்க்கு மிகுந்த பொறுமையைத் தர வல்லவள். அவர்கள் தங்களுடைய துன்பமான நேரத்திலும் மணம் தளராது இருக்க அருள்பவள். இவள் அருள் சோம்பலை நீக்கி சுறுசுறுப்பை தரவல்லது. பிரம்மசரணி தேவியைத் தவறாமல் பிரார்த்தனை செய்பவர்கள் ஞானத்தைப் பெறுகிறார்கள். தன்னை பூஜிப்பவருக்கு பிரம்மசரணி தேவி மன அமைதி , வளமான வாழ்க்கை , நிரந்தரமான சந்தோசம் ஆகியவைகளை அள்ளிக் கொடுக்கிறாள்.




தியான ஸ்லோகம்:


ததாநாகர பத்மாப்யாம் அக்ஷ மாலா கமண்டலூ |
தேவி ப்ரஸ்தது மயி ப்ரம்ஹசாரிணி அநுத்தமா ||


என்பது ப்ரம்ஹசாரிணி துர்காவின் ஸ்லோகம் ஆகும்.


(கமண்டலமும், தண்டமும் தன் தாமரைக் கரத்தில் ஏந்தியவளும் பிரம்மஸ்வரூபம் அடையும் எண்ணம் கொண்டவளுமாம் அன்னை பிரம்மச்சாரிணி எனக்கு அருள வேண்டும்.)


மந்திரம்: ஓம் பிரஹ்மசாரிண்யை நம:


அபிராமி அந்தாதி:


தவளே இவள் எங்கள் சங்கரனார் மனை மங்கலமாம்
அவளே அவர் தமக்கு அன்னையும் ஆயினள் ஆகையினால்
இவளே கடவுளர் யாவர்க்கும் மேலை இறைவியும் ஆம்
துவளேன் இனி ஒரு தெய்வம் உண்டாக மெய்த் தொண்டு செய்தே


எங்கள் இறைவனாகிய சங்கரனின் இல்லத் துணைவியே! அவருக்கே அன்னையாகவும் (பராசக்தி ஈன்ற பரமசிவம்) ஆனவளே! ஆகையால் நீயே யாவர்க்கும் மேலானவள்! ஆகவே, உனக்கே இனி உண்மையான தொண்டு செய்வேன். ஆதலால், இனி நான் துன்பங்களால் துவள மாட்டேன். தாயே!

முத்தாரம்மே சரணம் !

Posted by Mutharamman Satsangam

நவதுர்க்கை - சைலபுத்ரீ


நவதுர்கையாக வழிபடும் போது முதல் நாள் அகில உலகத்தையும் படைத்தும் காத்தும் அழித்தும் விளையாடும் அன்னையை ஷைலபுத்ரி என்று மலைமகளாக வழிபடுகின்றோம்.


மலை அரசன் இமவானின் மகளாக இருப்பதாலும் அன்னைக்கு இவ்வாறு ஒரு பெயர் உண்டு. ஹிமவானின் மகளாக உள்ளதால் ஹேமாவதி என்ற பெயரும் இவளுக்கு உண்டு. பார்வதி, பர்வதகுமாரி, பவானி என்றெல்லாம் அழைக்கப்படும் இவளே, அனைவரிலும் தேவர், மூவர் என யாவரிலும் சக்தியாக நிறைந்து நிற்பவள். இவள் சக்தியின்றி எந்த இயக்கமும் இல்லை. நடைபெறாது.


இவளின் முன் அவதாரத்தில் இவள் தட்சனின் மகளாக பிறந்ததால் 'தாட்சாயினி ' என்றும் கூறுவர். தக்ஷனின் மகள் சதிதேவி, சிவபெருமானின் முதல் மனைவி, தன்னுடைய கணவனைப் பற்றி இழிவாகப் பேசிய தந்தையின் வார்த்தைகளைத் தாங்க முடியாமல், அவர் நடத்திய யாக குண்ட அக்னியில் குதித்து சாம்பலானாள். சதிதேவி மீண்டும் இமயத்தின் மகள் ஷைலபுத்ரி தேவியாகப் பிறந்தாள். இவளே பார்வதியாகப் பிறந்து சிவனைத் திருமணம் செய்து கொண்டாள்.


பிறப்பே இல்லாதவள், விளையாட்டுக்காக ஹிமவானுக்கு மகளாக பிறந்தாள். இதையே,  “உமையே! இமயத்து அன்றும் பிறந்தவளே!” என்றும்


“பிறவியும் வம்பே! மலைமகள் என்பதும் நாம் மிகையே இவள்தன் தகைமையை நாடி விரும்புவதே!” என்றும் அபிராமி அந்தாதி கூறுகிறது.


இறைவனின் ஆனந்த தாண்டவத்தின்போது, வலக்காலை தரையில் ஊன்றி இடக்காலைத் தூக்கி ஆடும் நிலையில் வரையப்பட்ட கோலம் மிகவும் போற்றப்படுகிறது. இதை ரிஷிமண்டல கோலம் என்பர். இதிலிருந்துதான் எழுத்துகள் வெளிப்பட்டன. அவற்றுக்குரியவளாக- அந்தக் கோலத்திலிருந்து வெளிப்பட்ட சக்தியை சைலபுத்ரி என்பர். இத்தேவிக்கு காசியிலுள்ள வருணை நதிக்கு அருகில் கோவில் உள்ளது. நவராத்திரியின் முதல் நாளில் இத்தேவியை தரிசிப்பதை மக்கள் பெரும் பேறாகக் கருதுகிறார்கள். மேலும், உத்தர பிரதேசத்தில் உள்ள மர்ஹின காட் என்னும் இடத்தில் சைலபுத்ரீக்கு தனிக்கோவில் உண்டு.


இவள் ஒன்பது சக்ரங்களில் முதல் சக்கரம் மூலாதாரமாக இருக்கிறாள். யோகிகள் தங்களுடைய யோக சாதனைகளை இவளை வணங்கியே துவங்குவர். அதனால் இவளே முதல் சக்தியாகப் போற்றப்படுகிறாள்.


சக்தியின் மூலதாரத்தை அடக்கி ஆளும் ஷைலபுத்ரிதேவி சூலத்தை ஒரு கரத்திலும், தாமரையை இன்னொரு கரத்திலும், பிரம்மா, விஷ்ணு, சிவபெருமான் மூவரின் சக்திகளை இணைத்து உருவாகிய காளையை வாகனமாகக் கொண்டு காட்சியளிக்கிறாள்.


இவளை வழிபட மங்களகரமான  வாழ்வு கிட்டும்; திருமணத்தடை நீங்கும். ஆஸ்துமா, நீரிழிவு நோய்கள் தீரும். துக்கம் ஏழ்மை அகலும். பொருள், ஆயுள் பலம் விருத்தியாகும்.


பசுமை வர்ணத்தவளாக அதாவது இயற்கை ரூபிணியாக வணங்குகின்றோம் ஷைலபுத்ரி துர்காவை.




தியான ஸ்லோகம் :


வந்தே வாஞ்சித லாபாய சந்த்ரார்த்த க்ருத சேகராம் |
வ்ருஷாரூடாம் சூலதராம் சைல புத்ரீம் யசஸ்விநீம் ||


என்பது ஷைலபுத்ரி துர்காவின் ஸ்துதியாகும்.


( பிறை நிலவை முடியில் சூடி, நந்தி வாகனமேறி பவனி வரும், திரிசூலதாரி, இமவான் மகளாக அவதரித்த ஒப்புயர்வற்ற ஷைல புத்ரியை என்னுடைய எண்ணங்கள் ஈடேற அடியேன் வணங்குகின்றேன். )


மந்திரம்: ஓம் சைலபுத்ர்யை நம:


அபிராமி அந்தாதி :


நன்றே வருகினும், தீதே விளைகினும், நான் அறிவது
ஒன்றேயும் இல்லை, உனக்கே பரம், எனக்கு உள்ள எல்லாம்
அன்றே உனது என்று அளித்து விட்டேன், அழியாத குணக்
குன்றே, அருட்கடலே, இமவான் பெற்ற கோமளமே


உலகமெல்லாம் பெற்றெடுத்த தலைவியாகிய அபிராமி அன்னையின் திரு மார்பகங்களைத் தாமரை மொட்டு என்கிறார்கள். கருணை ததும்பி நிற்கும் முதிர்ந்த கண்களை, மருட்சி மிக்க மான் கண்கள் என்கிறார்கள். முடிவில்லாதவள் என்றெல்லாம் பக்தர்கள் கூறுகின்றார்கள். இவையெல்லாமே மாறுபட்ட கூற்றுகள். இவைகளை நினையும் போது எனக்கு நகைப்பே உண்டாகிறது. இனிமேல் நாம் செய்யக்கூடியது இத்தகைய கற்பனைகளைத் தள்ளி அவளின் உண்மை நிலையை அறிதலேயாகும்.

முத்தாரம்மே சரணம் !

Posted by Mutharamman Satsangam

நவதுர்க்கை தரிசனம்


 

சக்தியின் கோலமான துர்கா தேவி தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு தைரியம், துணிச்சல், நம்பிக்கை, அமைதி, சந்தோசம் போன்ற சகல சௌபாக்கியங்களும் கொடுத்து அருள் பொழிகிறாள். துர்கா தேவி தர்மத்தைக் காப்பதற்கும், தீமைகளை ஒழிப்பதற்கும் அந்தந்த காலகட்டத்தில் நவதுர்க்கைகளாக அவதாரம் எடுத்து அருள் புரிகிறாள்.


நவதுர்க்கை என்பது துர்க்கா தேவியின் ஒன்பது வடிவங்களைக் குறிக்கும். சைலபுத்ரி, பிரமசாரிணி, சந்திரகாண்டா, கூஷ்மாண்டா, ஸ்கந்தமாதா, காத்யாயினி, காளராத்திரி, மகாகௌரி, சித்திதாத்திரி என அன்னை ஒன்பது வடிவம் கொண்டிருக்கிறாள்.


தஸ்யாஸ்து ஸாத்விகீ சக்தீ ராஜஸீ தாமஸீ ததா |
மஹாலக்ஷ்மி: ஸரஸ்வதீ மஹாகாளீதி ச ஸ்திரிய: ||


தாஸாம் திஸ்ருணாம் சக்தீதாம் தேஹாங்கீகார லக்ஷணாத் ||


படைக்கும் பிரம்மா, காக்கும் மஹா விஷ்ணு, சம்ஹாரிக்கும் சிவன் ஆகியோரின் சக்தியான மஹா சரஸ்வதி, மஹா லக்ஷ்மி, மஹா காளி ஆகிய மூன்று சக்திகள் மேலும் மூன்று தேவிகளாக பிரிந்து நவதுர்க்கைகள் ஆயினர்.


சிவபெருமான் திருநடனம் புரிந்தபோது, அவர் தன் கால் விரல்களால் வரைந்த கோலங்களிலிருந்து நவராத்திரி தேவியர் தோன்றினர் என்று புராணங்கள் கூறுகின்றன. இந்த ஒன்பது தேவியருக்கும் வடநாட்டில்- குறிப்பாக காசி மாநகரில் கோவில்கள் உள்ளன.


பல்வேறு வேதங்களும், வராஹ புராணமும் துர்க்கைக்கு ஒன்பது வடிவங்கள் உள்ளதாக கூறுகின்றன.


மார்க்கண்டேயர் பிரும்மாவிடம் "மனிதர்களைப் பலவிதங்களிலும் காக்க உதவும் மிக ரகசியமான சாதனம் எது?' என்று வினவினார்.


அதற்கு பிரும்மா "தேவியின் பாதுகாப்புக் கவசம் ஒன்று மட்டுமே சிறந்த சாதனம். அது புனிதமானது. உயிர்களைக் காப்பது... எனவே, அவளைப் பூஜிப்பது ஒன்றே போதுமானது... சக்தியைப் பூஜிப்பவர்கள் தேவியை, சைலபுத்ரி, ப்ரம்மசாரிணீ, சந்தர காண்டா, கூஷ்மாண்டா, ஸ்கந்தமாதா, காத்யாயனீ, காலராத்ரி, மஹாகௌரி மற்றும் ஸித்திதாத்ரி என்ற ஒன்பது வடிவங்களில் பூஜிப்பார்கள். இதைச் செய்வதால் சகலவிதச் சித்திகளும் நம்மை வந்தடையும்.' என்றார்.



ப்ரதமம் சைல புத்ரீ ச த்விதீயம் ப்ரஹ்மசாரிணீ !
த்ருதீயம் சந்த்ரகண்டேதி கூஷ்மாண்டேதி சதுர்த்தகம் !!
பஞ்சமம் ஸ்கந்தமாதேதி ஷஷ்டம் காத்யாயனீதி ச !
ஸப்தமம் காலராத்ரீதி மஹாகௌரீதி சாஷ்டமம் !!
நவமம் ஸித்தி தாத்ரீ ச நவ துர்கா ப்ரீகீர்த்திதா !

உக்தான்யேதானி நாமானி ப்ரஹ்மணைவ மஹாத்மனா.!!
அந்த நவதுர்க்கை அவதாரங்களை பற்றி வரும் பதிவுகளில் தொடர்ந்து சிந்திப்போம் ...

முத்தாரம்மே சரணம் !


Posted by Mutharamman Satsangam

வசந்த நவராத்திரி விரத கதை

 வசந்த நவராத்திரி மிகவும் பழமையான வழிபாடு. இதை அம்பிகையை சொல்லி இருக்கிறாள். இந்த நவராத்திரியின் பின்னனி கதையை பார்ப்போம். கோசல நாட்டை ஆண்டு வந்த த்ருவசிந்து என்னும் மன்னன் வேட்டைக்குச் சென்ற போது சிங்கத்தினால் கொல்லப்படுகிறான். அவனுக்குப் பிறகு அவனுடைய இரு மனைவிகளுள் ஒருத்தியான மனோரமவிர்க்குப் பிறந்த சுதர்சனனை அரசனாக்க ஏற்பாடுகள் நடக்கின்றன. அப்பொழுது  துருவசிந்துவின் மற்றொரு மனைவி லீலாவதி மூலம் பிறந்த மகனுக்கே பட்டம் சூட்டப் பட வேண்டும் என்று லீலாவதியின் தகப்பனாரான உஜ்ஜைனி அரசர் யுதாஜித் கலகம் செய்கிறார். அவரோடு போரிட்ட மனோரமாவின் தந்தை கலிங்க தேச அரசர் வீரசேனர் யுத்தத்தில் மாண்டு போகிறார். இதை கேள்விப்பட்ட மனோரமா தன் மகன் சுதர்சனனையும் உதவிக்கு ஒரு அடிமையையும்  அழைத்துக்கொண்டு கானகம் சென்று பரத்வாஜ முனிவரிடம் தஞ்சம் அடைகிறாள். 

லீலாவதியின் தகப்பனார் யுதாஜித்  அவர்  விரும்பியபடி  தன்  பேரனான  ஷத்ருஜித்திர்க்கு பட்டம் சூடிய பிறகு  மனோரமாவையும்  அவள்  மகன் சுதர்சனனையும் கொல்வதற்காக காட்டிற்கு வருகிறான்.  அவர்களை தன்னிடம் ஒப்படைக்கும்படி பரத்வாஜரிடம் வேண்ட,தன்னிடம் அடைக்கலமாக வந்தவர்களை தான் கை விட முடியாது என்று கூறிவிடுகிறார். அவரோடு  யுத்தம்  செய்ய  முற்பட்டவனை  அவரின்  மகத்துவத்தைக் கூறி அமைச்சர் தடுத்து விட நாடு திரும்புகிறான்.

பரத்வாஜரின் ஆஸ்ரமதிற்கு வருகை புரிந்த சில ரிஷி குமாரர்கள் மனோரமாவின் அடிமையை அவனுடைய பெயராகிய   க்லீபன் என்று அழைக்கிறார்கள். இதை கேட்ட சிறுவனாகிய சுதர்சனனுக்கு க்லீபன் என்று கூப்பிட வராததால், 'க்லீம்' என்று அழைக்கத் தொடங்குகிறான். க்லீம் என்பது அம்பாளின் பீஜ மந்த்ரமனத்தால் அதை மீண்டும் மீண்டும் உச்சரித்த சுதர்சனனுக்கு அம்பிகை காட்சி அளித்ததோடு சக்தி வாய்ந்த  வில் மற்றும் எடுக்க எடுக்க குறையாத அம்புராத்துனியையும் அளிக்கிறாள். நாளடைவில் அழகிய யுவனாக வடிவெடுத்த சுதர்சனனைக் கண்ட காசி தேச அரண்மனை ஊழியர்கள் காசி தேச  இளவரசியான  சசிகலாவிற்கு  நடக்கவிருக்கும் சுயம்வரத்தில் கலந்து கொள்ள அவனுக்கு அழைப்பு விடுகிறார்கள்.

அங்கு சென்ற சுதர்சனனை விரும்பி சசிகலா மாலை இடுகிறாள். அப்பொழது அங்கு வருகை  புரிந்திருந்த  யுதாஜித்  அதற்க்கு  எதிர்ப்பு  தெரிவிக்கிறான்.  தேவியின் துணையோடு யுதாஜித்தை எதிர்க்கிறான் சுதர்சனன். சுதர்சனனுக்கு உதவி புரியும் அம்பிகையை யுதாஜித் இழிவு படுத்த கோபம் கொண்ட தேவி அவனை சாம்பலாக்குகிறாள். பிறகு சுதர்சனனையும்  சசிகலாவையும் வாழ்த்திய அம்பிகை தன்னை வசந்த நவராத்ரியில் முறைப்படி பூஜிக்கும்படி கட்டளை இடுகிறாள்.

சசிகலாவோடு  பரத்வாஜரின் ஆஸ்ரமதிற்கு  திரும்பிய  சுதர்சனனை  வாழ்த்தி கோசல நாட்டு அரசனாக முடி  சூட்டுகிறார்  பரத்வாஜர். பிறகு அரசனான சுதர்சன் தான் மனைவி சசிகலாவோடு  விதிவத்தாக அம்பிகையை  பூஜித்து  சகல  பாக்கியங்களும்  பெற்று  வாழ்ந்தான்.  அவன் வழி தோன்றல்களான ராம லக்ஷ்மனர்களும் வசந்த   நவராத்ரியில் அம்பிகையை  பூஜித்திருக்கிறார்கள்.  

சாரதா நவராத்திரி போகம் எனும் மகிழ்வைத் தருவது, வசந்த நவராத்திரி யோகம் எனும் பக்தி நிலையை தரக் கூடியது. ஒவ்வொரு நாளும் தேவியை நவதுர்க்கா ஸ்வரூபத்தில் வழிபடுவது சிறப்பு.



மேலும் இந்த நவராத்திரியில் அம்பிகையை வழிபடுவோர் கடன் தொல்லைகளில் இருந்து விடுபவர். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை சிறக்கும்.

நவராத்திரி வழிபாட்டால், பெண் குழந்தைகள் பெறுவது மகிழ்ச்சியின் பயன். கன்னியர்கள் பெறுவது திருமணப் பயன். சுமங்கலிகள் பெறுவது மாங்கலயப் பயன். எல்லோரும் பெறுவது பரிபூரண திருப்தி.

வாழ்வில் வசந்தம் வீசச் செய்யக்கூடிய வசந்த நவராத்திரி காலத்தில் அம்பிகையை வழிபட்டு, அம்பிகையின் பரிபூரண அருளைப் பெறுவோம்.

இதைப் படிக்கும் எல்லோருக்கும் எல்லாம்
வல்ல அம்பிகையின் அருள் கிடைக்க வேண்டுகிறேன்!

யா தேவி சர்வ பூதேஷு மாத்ரு ரூபேண சம்ஸ்திதா:
நமஸ் தஸ்மை! நமஸ் தஸ்மை! நமஸ் தஸ்மை! நமோ நம:

முத்தாரம்மே சரணம் !


Posted by Mutharamman Satsangam