Apr 30, 2017

தோடகாஷ்டகம்




ஆதிசங்கரர் சிருங்கேரியில் இருந்த போது காலநாத கிரி என்ற சிறுவன் அவரை வணங்கினான். பெரிய ஞானத் தேடலோ ஆன்மீக விழைவுகளோ இல்லாது இட்டபணி செய்து கொண்டு இன்பமாக இருந்து வந்தான் கிரி. ஆனால் சங்கரர் பெரிய ஞானி என்பதும் அவருக்குத் தொண்டு செய்வது நல்லது என்பதும் அவனது மனதில் ஆழப்பதிந்து இருந்தது. ஒரு நாள் தன் மூன்று சீடர்களுடன் வேதாந்த வகுப்பிற்கு அமர்ந்தார். கிரி துணிகளைத் துவைத்து உலர்த்திக் கொண்டிருந்தான். பாடத்தைத் தொடங்காது இருந்த குருவிடம் சீடர்கள் ஏனென்று கேட்க கிரி வரட்டும் என்றார் சங்கரர்.

அருகில் அமர்ந்திருந்த பத்மபாதர் ஒரு கல்லைச் சுட்டிகாட்டி அதற்குப் பாடம் சொல்வதும் கிரிக்குப் பாடம் சொல்வதும் ஒன்றே என்றார். சற்றே நகைத்த பகவத்பாதர் கிரியை அழைத்து ஆசீர்வதித்து இதுவரை நீ கற்றதைச் சொல் என்றார். அப்போது கிரி பாடிய எட்டுச் செய்யுட்கள் (அஷ்டகம்) குருவின் மகிமையை விதந்தோதுவதாக இருந்தது. சங்கர தேசிகாஷ்டகம் என்று அதற்குத் தலைப்பிட்டார் கிரி. அப்போதே கிரியை தோடகாச்சாரியார் என்ற சந்நியாசப் பெயருடன் தன் சீடர்களில் ஒருவராக ஏற்றார் பகவத் பாதர். அவர் பாடிய சங்கர தேசிகாஷ்டகம் அவரது பெயரிலேயே தோடகாஷ்டகம் என்று விளங்கட்டும் என்றும் ஆதிசங்கரர் ஆசீர்வதித்தார்.

ஸ்ரீ ஸ்ரீ தோடகாச்சாரியார் பாடிய தோடகாஷ்டக சுலோகமும் அதன் அர்த்தமும் இனி பார்க்கலாம்.

விதிதாகில சாஸ்த்ர ஸூதா ஜலதே
மஹிதோபநிஷத் கதிதார்த்தநிதே!
ஹ்ருதயே கலயே விமலம் சரணம்
பவ சங்கர தேசிக மே சரணம்!!

புகழ்பெற்ற கடல் போன்ற அனைத்து சாஸ்திரங்களையும் அறிந்தவரும், உபநிஷத்துக்களில் கூறி இருக்கும் தத்துவங்களை உணர்ந்து அதில் உறைந்தவரும் ஆன அந்த பரமேஸ்வரனுக்கு நிகரான சங்கர குருவே, உங்கள் பாதங்களில் என்னுடைய ஹ்ருதயத்தைச் சமர்ப்பிக்கிறேன். தாங்களே எனக்கு குரு, வழிகாட்டி (தேசிக என்பதற்கு இங்கே வழிகாட்டி என்ற பொருள்)

கருணா வருணாலய பாலய மாம்
பவஸாகர துக்க விதூன ஹ்ருதம்
ரசயாகிலதர்சன தத்வவிதம்
பவ சங்கர தேசிக மே சரணம்!!

குருவே, எனக்கு எதுவுமே தெரியாதே! நான் நிர்மூடன்! எந்தக் கலையும் என்னால் அறியப் படவில்லை. ஆகையால் என்னால் பிறருக்குப்பயன் தரும் எந்த வித்தையையும் கற்பித்துப் பொருள் ஈட்டித் தங்களுக்கு வேண்டியவற்றைச் செய்து குரு தக்ஷிணையும் தர இயலவில்லை. இப்படி எதுவுமே இல்லாத ஏழையான எனக்குத் தாங்கள் தங்கள் சுபாவமான கருணையாலும், அன்பாலுமே அனைத்தையும் கற்பித்துக் காட்ட வேண்டும். ஹே சங்கரகுருவே, தங்கள் திருவடியே எனக்குச் சரணம்! கருணை நிறைந்தவரே, தங்கள் கருணையாகிய கடலால் இந்தப் பிறப்பு இறப்பு என்னும் சாகரத்தில் மூழ்கித் தவிக்கும் என்னைக் காத்துக் கரை சேருங்கள். 
என்னை ஞாநவானாக ஆக்குங்கள். சங்கர குருவே தாங்களே எனக்குக் கதி! தங்களைச் சரணடைகின்றேன்.

பவதா ஜனதா ஸுகிதா பவிதா
நிஜபோதவிசாரண சாருமதே
கலயேச்வர ஜீவ விவேகவிதம்
பவ சங்கர தேசிகமே சரணம்!!

தாங்களே பரப்பிரும்மம். அதனால் தாங்கள் தெளிந்த ஞானத்தை உடையவராய் இருக்கிறீர்கள். தங்கள் ஞான போதனை எனக்கு மட்டுமின்றி உலகத்து மக்களுக்கும் பயன்பட்டு அதனால் க்ஷேமம் உண்டாகும். என்னை விவேகம் உள்ளவனாக என்னை ஜீவனை அறிந்தவனாக ஈஸ்வரனை அறிந்தவனாக மாற்றுங்கள். ஹே, சங்கர குருவே, தாங்கள் தான் எனக்குச் சரணம்!

பவ ஏவ பவானிதி மே நிதராம்
ஸமஜாயத சேதஸி கெளதுகிதா
மம வாரய மோஹமஹாஜலதிம்
பவ சங்கர தேசிக மே சரணம்!!

தாங்களே அந்த சாட்சாத் பரமேஸ்வரன். என்னுடைய சித்தம் பகுத்து அறிந்து காமத்தை விலக்கும் அறிவை நீங்களே எனக்குத் தரவேண்டும். என்னுடைய விருப்பமே தங்களால் எனக்கு ஞானம் ஏற்படவேண்டும் என்பதே! ஹே சங்கர குருவே சரணம்!

ஸுக்ருதே (அ)திக்ருதே பஹுதா பவதோ
பவிதா ஸமதர்சன லாலஸதா
அதிதீனமிமம் பரிபாலய மாம்
பவ சங்கர தேசிக மே சரணம்!!

தங்களின் எங்கும் பிரும்மமே என்ற கொள்கையே எத்தனைவிதமான புண்ணியங்களைச் செய்ததால் தங்களுக்கு ஏற்பட்டிருக்கும்?? எங்கும் நிறைந்திருப்பது அந்தப் பிரம்மமே தான் என்ற இத்தகைய எண்ணம் ஏற்பட எத்தகைய புண்ணியங்களைச் செய்யவேண்டும்?? அப்படி ஒன்றுமே செய்யாமல் மிகவும் ஏழையாக இருக்கும் என்னை உங்கள் கருணை ஒன்றே காப்பாற்ற வேண்டும். ஹே சங்கர குருவே, தங்கள் திருவடி சரணம்!

ஜகதீ மவிதும் கலிதாக்ருதயோ
விசரந்தி மஹா மஹஸஸ்சலத:
அஹிமாம் சுரிவாத்ர விபாஸி குரோ
பவசங்கர தேசிக மே சரணம்!!

குருவே! தங்கள் உண்மையான ஸ்வரூபத்தை மறைத்துக் கொண்டும் அத்தகைய ஸ்வரூபத்தை மறைத்துக் கொண்டு உலாவும் தேவாதி தேவர்களுக்கு நடுவே தாங்கள் ஒளி விட்டுப்பிரகாசிப்பது சூரியனைப் போல விளங்குகிறது. ஹே சங்கர குருவே, தங்கள் திருவடி சரணம்!

குருபுங்க புங்கவ கேதந தே
ஸமதாம் அயதாம் நஹி கோபி ஸுதீ:
சரணாகத வத்ஸல தத்வநிதே
பவ சங்கர தேசிக மே சரணம்!!

ரிஷபக் கொடியைக் கொண்ட பரமேஸ்வர ஸ்வரூபமே தாங்கள் தானே, குருக்களுக்கெல்லாம் மேலான குரு சிரேஷ்டரே! தங்களுக்கு ஈடு இணை எவரும் இல்லை. எப்படிப் பட்ட புத்திமானும் உங்களுக்கு இணையாக மாட்டானே! உம்மைச் சரணடைந்தால் கருணையுடன் ஆத்ம தத்துவத்தைப் போதித்து இவ்வுலக மாயையான சம்சாரக் கடலில் இருந்து தாண்டச் செய்பவரே! ஹே சங்கர குருவே தங்கள் திருவடி சரணம்!

விகிதா ந மயா விசதைககலா
நசகிஞ்சன காஞ்சந மஸ்தி குரோ
த்ருதமேவ விதேஹி க்ருபாம் ஸஹஜாம்
பவ சங்கர தேசிக மே சரணம்!!

ஆழமாய் விரிந்த ஞானத்தில் சிறு கிளை அளவிற்கு கூட அறிவில்லாத அடியேனுக்கு அருள் கூர்ந்து வாழும் வழியை போதித்து வீழ்ச்சியில் இருந்து அடியேனை காப்பாற்றுவதற்கு நின் திருவடியை சரணடைந்தேன். ஹே சங்கர குருவே தங்கள் திருவடி சரணம்!

முத்தாரம்மே சரணம் !

Posted by Mutharamman Satsangam

ஆதிசங்கரர் ஜெயந்தி (30.04.2017)




நமது சனாதன தர்மத்தை நிலைநிறுத்துவதற்காக அவதரித்த குருமார்களில் முக்கியமானவர், ஸ்ரீஆதிசங்கர பகவத் பாதர். ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தியின் அவதாரமாகவே கருதப்படும் ஸ்ரீஆதிசங்கரர், இப்போதைய கேரள மாநிலத்திலிருக்கும் 'காலடி' என்னும் புண்ணியத் திருத்தலத்தில், சிவகுரு, ஆரியாம்பிகை தம்பதியினரின் தவத்தின் பலனாக, திருஅவதாரம் செய்தார். 


இவரது காலம், ஏழாம் நூற்றாண்டு. இவரது தந்தை சிவகுரு; பணக்கார குடும்பம், படித்த குடும்பம். சிவகுருவுக்கு எர்ணா குளம் அருகிலுள்ள மேல்பாழூர் மனையைச் சேர்ந்த ஆர்யாம்பாளைத் திருமணம் செய்து வைத்தனர்; இருவருமே சிவ பக்தர்கள்.

இவர்களுக்கு நீண்டகாலமாக குழந்தை இல்லை. திருச்சூர் வடக்குநாதர் கோவிலுக்குச் சென்று, சிவனிடம், குழந்தை வரம் வேண்டி, தீவிர வழிபாடு செய்தனர். அவரது பக்தியின் பலத்தை சோதிக்க முடிவெடுத்தார் சிவபெருமான். சிவகுருவின் கனவில் தோன்றிய சிவன், "உனக்கு தீர்க்காயுள் உள்ள தீய குணங்களையுடைய, 100 புத்திரர்கள் வேண்டுமா அல்லது குறைந்த ஆயுளே உள்ள ஒரே ஒரு சிறந்த புத்திரன் வேண்டுமா?' என்றார்.

"என் மனைவியிடம் கேட்டு சொல்கிறேன்...' என்ற சிவகுரு, தூக்கத்திலிருந்து விழித்து, மனைவியிடம் நடந்ததைச் சொன்னார். "இது, நமக்கு சிவன் வைத்த சோதனை. இதில், நம் தேர்வு ஏதுமில்லை. அவர் ஏதோ முடிவு செய்து தான் இப்படி கேட்கிறார். எனவே, அவர் விருப்பம் எப்படியோ, அப்படியே செய்யட்டும்...' என்றார் ஆர்யாம்பாள்.

இந்த முடிவை திருச்சூர் சென்று, வடக்குநாதரிடம் கூறி, பிரார்த்தித்தனர். சுவாமி மீண்டும் கனவில் தோன்றி, "நானே உங்களுக்கு புத்திரனாக பிறக்கிறேன்; ஆனால், ஆயுள் எட்டு தான்...' என்று சொல்லி விட்டார். இறைவனே தங்கள் வயிற்றில் பிறப்பதாக தெரிவித்ததால், அவர்கள் மனதைத் தேற்றிக் கொண்டனர். ஆர்யாம்பாளின் வயிற்றில் ஐஸ்வரியமான ஒரு தேஜஸ் புகுந்தது; அவர் கர்ப்பமானார்.

சித்திரை மாத அமாவாசை கழித்து வந்த சுத்த பஞ்சமியை, வைகாச சுத்த பஞ்சமி என்பர். அன்று, சிவனுக்குரிய திருவாதிரை நட்சத்திரமும் இணைந்து வந்தது. ஐந்து கிரகங்கள் உச்சமாக இருந்த மதிய வேளையில் அவதரித்தார் சங்கரர்.

குழந்தைக்கு, "சங்கரர்' என்று பெயர் சூட்டப் பட்டது. சங்கரன் என்ற பெயருக்கு, என்றும் நிலையான மங்களத்தைச் செய்பவன்  என்று பொருள். அவரே, நம் சனாதன தர்மத்திற்கு நிலையான மங்களத்தைச் செய்யப் போகிறார் என்பதை அறியாமலேயே, அந்தப் பெயரையே தம் தவக்குழந்தைக்குச் சூட்டி மகிழ்ந்தனர் பெற்றோர். 

அவரது இளம் வயதில், ஒரு நாள், சிவகுரு வெளியூருக்குச் சென்றிருந்தார். ஆரியாம்பிகைக்கும் உடல் நிலை சரியில்லை. குழந்தையிடம், 'ஸ்வாமிக்கு ஏதேனும் நிவேதனம் செய்' என்றாள். உலகநாதனே ஒரு வடிவாகி வந்த சிறு குழந்தை யோசித்தது.... ஆம்!!! சிந்தனைக்கு எட்டாத சிவ வடிவம் யோசித்தது... அப்போது, பால் தரும் பணிமகள், ஒரு கிண்ணம் நிறையப் பாலைக் கொண்டு வந்து கொடுத்தாள்.

பாலை வாங்கிக் கொண்டு, அந்த பிஞ்சுக் குழந்தை, தன் சின்னஞ்சிறு பாதம் எடுத்து வைத்து, 'ஜல், ஜல் ' என கொலுசொலிக்க நடந்து பூஜா கிருகத்தை அடைந்தது. அப்பா பூஜை செய்யும் போது, பாலசங்கரன் அருகிருப்பது வழக்கம். எனவே, பாலை பூஜை கிருகத்தில் வைத்து விட்டு, மனப்பூர்வமாக, 'பாலை நிவேதனமாக அளிக்கிறேன்' என்று கண்களை மூடிக் கொண்டு, கூறியது.

கண்ணைத் திறந்து பார்த்தால்..காணோம் பால்!!. ஒரு கிண்ணம் பாலும் காணவில்லை. கிண்ணம் காலியாக இருந்தது. குழந்தை பதறிவிட்டது. சிறு உதடு துடிக்க, கண்களில் நீர் மழை கொட்ட, 'அழுது அருளினார்'பகவத் பாதர் . அழுகையினூடே திரும்பவும் கிண்ணத்தைப் பார்த்தால்... அது நிரம்ப, நிரம்ப பால் இருந்தது!!!. ஆச்சரியமும் மகிழ்ச்சியும் தாங்க இயலவில்லை குழந்தைக்கும். தன் கண்களைத் துடைத்து விட்டுக் கொண்டு பார்த்தது. கிண்ணத்தில் இருந்த பாலை எடுத்துப் பருகி ஆனந்தமடைந்தது.

அன்னை அன்னபூரணியின் திருவிளையாடலே இது.சங்கரருக்கு, ஞானத்தையே பாலாக அளித்து, பின்னாளில், தம் மேன்மையான கவிதா விலாசத்தால், பல வடமொழி நூல்களை அவர் அருளுவதற்கு வித்தூன்றி விட்டாள் அன்னை.  இதையே,  பகவத் பாதர்,  தம் சௌந்தர்யலஹரியில், 

தவ ஸ்தந்யம் மந்யே தரணிதரகந்யே ஹ்ருதயத:
பய: பாராவார: பரிவஹதி ஸாரஸ்வதமிவ
தயாவத்யா தத்தம் த்ரவிடசிசுராஸ்வாத்ய தவ யத்
கவீனாம் ப்ரெளடானாம் அஜநி கமநீய: கவயிதா

என்று அருளியிருக்கிறார். அக்காலத்தில் தென்னாடெங்கும் திராவிட நாடெனவே அறியப்பட்டது. ஆகவே, 'திராவிட சிசு' என்பது   சங்கரரைத் தான் குறிக்கும் என்பதே பெரும்பாலானோர் கருத்து.

மூன்று வயதாகும் போது, தந்தை சிவகுரு காலமானார். ஆர்யாம்பாள் மிகுந்த சிரத்தையுடன் குழந்தையை வளர்த்து வந்தார். ஐந்து வயதிலேயே சகல சாஸ்திரங்களையும் படித்து தேறினார் சங்கரர். படிக்கும் காலத்தில் பிச்சை எடுத்து, தன் குருவுக்கு கொடுத்து விட்டு, மீதியை உண்பது சங்கரரின் வழக்கம்.
ஒருமுறை, ஒரு ஏழைத் தம்பதியின் வீட்டில் பிச்சை கேட்டார். வீட்டில் முதல் நாள் ஏகாதசி விரதம் முடித்து, மறுநாள் துவாதசி விரதம் முடிப்பதற்காக ஒரே ஒரு நெல்லிக் கனியை மட்டும் வைத் திருந்தனர்; அதுவும் உலர்ந்து போயிருந்தது. அதையும், அவ் வீட்டுப் பெண், நிறைந்த மனதுடன் சங்கரருக்கு அளித்தாள். பரம ஏழையாக இருந்தாலும், தர்மம் செய்யும் எண்ணமுள்ள அவளைப் போன்றவர்களிடமே செல்வம் நிறைந்திருக்க வேண்டுமென எண்ணிய சங்கரர், லட்சுமியை வேண்டி, கனகதாரா ஸ்தோத்திரம் பாடினார்.

ல‌க்ஷ்மி தேவியைக் குறித்து, அமுதூறும் சொற்களால் பாமாலை பாடி, அம்பிகையின் திருநோக்கு, அந்த ஏழைத் தம்பதியர் மேல் திரும்ப வேண்டும் என மனமுருக வேண்டினார் ஆதிசங்கரர்.  

தத்யாத்தயானுபவனோ த்ரவிணாம்புதாராம்
அஸ்மின் அகிஞ்சன விஹங்கசிசௌ விஷண்ணே|
துஷ்கர்மகர்மமபநீய சிராய தூரம்
நாராயணப்ரணயினீ நயனாம் புவாஹ:|

("ஸ்ரீமந் நாராயணரின் பிரியத்துக்குகந்த உன் (ஸ்ரீலக்ஷ்மியின்) கடாக்ஷம் என்ற கார்மேகம்,   உனது கருணை என்ற பூங்காற்றின் துணை கொண்டு,  பல காலம்  செய்த  பாவமாகிய கோடை வெயிலை நீக்கி,  செல்வமாகிய பெரும் மழையை, இந்த   சாதகப் பட்சியின் மேல் பொழியட்டும்".)


"கனகம்' என்றால், "தங் கம்!' "தாரை' என்றால், "பொழிதல்!' லட்சுமி, அவர் முன் தோன்றி, "அந்தப் பெண், முற்பிறவியில் புண்ணியம் ஏதும் செய்யவில்லை; அதனால், அவள் ஏழ்மையையே அனுபவித்தாக வேண்டும்...' என்றாள். இருப்பினும், லட்சுமியிடம் வாதாடினார் சங்கரர். உடனே, அவ்வீடு முழுவதும் தங்க நெல்லிக்கனிகள் நிறைந்தன.

துறவறம் மேற்கொள்ள தாயிடம் அனுமதி கேட்டார் சங்கரர். ஆனால், தாயார் சம்மதிக்கவில்லை. ஒரு முறை தன் தாயுடன் நதியில் குளிக்கச் சென்றார். ஒரு முதலை அவரது காலைக் கவ்வியது. "துறவறம் பூண சம்மதித்தால், முதலை காலை விட்டு விடும். இல்லாவிட்டால், நான் இப்போதே முதலைக்கு இரையாகி விடுவேன்...' என்றார் சங்கரர். குழந்தை உயிரோடு இருந்தால் போதுமென தாயார் சம்மதிக்க, முதலை, காலை விட்டது. அவர் காசிக்கு சென்று தங்கினார்.

adi_sankara_chelas-1+(2).jpg (1131×1600)தன் ஆயுட்காலம் முடிந்ததை எண்ணிய அவர், கங்கையில் மூழ்கச் சென்றார். வியாசர் அவரைத் தடுத்து, " நீ செய்ய வேண்டிய புண்ணியச் செயல்கள் எவ்வளவோ உள்ளன; அவற்றை செய்ய இன்னும் சில ஆண்டுகள் வாழ்வாய்...' என்றார். அதன் பின், பல அற்புதங்களைச் செய்தார் சங்கரர். இறந்து போன மகனின் உடலுடன், மூகாம்பிகை கோவிலுக்கு வந்த ஒரு தம்பதியின் மகனுக்கு, உயிர் கொடுத்தார். சைவம், வைணவம், காணாபத்யம், சாக்தம், கவுமாரம், சவுரம் என்று பிரிந்து கிடந்த மதங்களை இணைத்து, "சனாதன தர்மம்' என்ற பெயரில் ஒரே மதமாக்கினார். 

இந்து சமயத்தின் மூன்று அடிப்படை நூல்கள் என்று அறிப்படும் பத்து உபநிடதங்கள், பிரம்ம சூத்திரம் மற்றும் பகவத் கீதைக்கு விளக்கவுரை அளித்து அவை போதிக்கும் அத்வைத வேதாந்தம் அதாவது இரண்டற்றது என்கிற அத்வதை தத்துவத்தை உலகத்திற்கு எடுத்துக்காட்டியவர்.

மேலும் விஷ்ணு சஹஸ்ரநாமம் போன்ற சமய நூல்களுக்கும் இவர் விளக்கவுரை நிருவியுள்ளதாக பொதுக் கருத்து உள்ளது. சிவானந்த லஹரி, கோவிந்தாஷ்டகம், பஜ கோவிந்தம், சித்தாந்த சாங்கியம், விவேகசூடாமணி, ஆத்மபோதம், உபதேச சாஹஸ்ரி, கனகதாரா ஸ்தோத்திரம், சுப்ரஹ்மண்ய புஜங்கம் போன்ற நூல்களை இயற்றியுள்ளார். 

சங்கரர் பாரதம் முழுவதும் பயணித்து தெற்கில் சாரதா பீடம், சிருங்கேரி, மேற்கில் துவாரகா பீடம், துவாரகை, வடக்கில் ஜோஷி மடம் மற்றும் கிழக்கில் கோவர்தன பீடம், புரி என நான்கு அத்வைத பீடங்கள் நிறுவி தன் சீடர்களான அஸ்தாமலகர், சுரேஷ்வரர், பத்மபாதர் மற்றும் தோடகர் என்பவர்களை ஒவ்வொரு பீடத்திற்கும் மடாதிபதிகளாக நியமித்தார். காஞ்சிபுரத்தில் சர்வக்ஞான பீடம் எனும் வேதாந்த கல்வி நிலையத்தை நிறுவினார். 32 வயது வரை அவர் வாழ்ந்தார்.

நாம் அவரது ஜயந்தி நாளன்று அவரை நினைக்காமலிருந்தால், அவரது பூஜையைச் செய்யாமலிருந்தால், அவர் காட்டிய வழியை கடைப்பிடிக்காமலிருந்தால் நம்மிடத்தில் செய்நன்றி காட்டாத தோஷம் ஏற்படும். இத்தோஷம் வராமலிருக்கட்டும் என்று நாம் இந்த சங்கர ஜயந்தி மஹோத்ஸவத்தைக் கொண்டாடுகிறோம். ஸ்ரீசங்கரர் காட்டிய பாதையில் சென்று நாம் ச்ரேயஸ்ஸை அடைய வேண்டும் என்பது நம் கடமையாகும்.

ச்ருதி ஸ்ம்ருதி புராணானாம் ஆலயம் கருணாலயம் |
நமாமி பகவத்பாத் சங்கரம் லோக சங்கரம் || (1)

(ச்ருதிகள், ஸ்ம்ருதிகள் மற்றும் புராணங்கள் ஆகியவற்றிற்கு இருப்பிடமானவரும், கருணைக்கு இருப்பிடமானவரும், போற்றத்தக்க பாதாரவிந்தங்களை உடையவரும், உலகத்திற்கு நன்மை செய்பவருமான சங்கரரை நமஸ்கரிக்கிறேன்.)

முத்தாரம்மே சரணம் !

Posted by Mutharamman Satsangam

Apr 27, 2017

அட்சய திருதியையால் அமைந்த நிகழ்வுகள்


ஸ்ரீமகாலட்சுமி விஷ்ணுவின் மார்பில் இந்நாளில்தான் இடம் பெற்றாள்; நிரந்தரமாகத் தங்கினாள். அஷ்ட லட்சுமிகளில் ஐஸ்வரிய லட்சுமியும், தான்ய லட்சுமியும் தோன்றிய நாளும் இதுதான்.

இந்த அட்சய திரிதியை நாளில்தான் பிட்சாடனரான சிவபெருமான் தன் கபால (பிரம்ம கபாலம்) பிட்சை பாத்திரத்தில் நிரம்பும் அளவு உணவை காசியில் அன்னபூரணியிடமிருந்து பெற்றுக் கொண்டார். 

முற்காலத்தில் வைசியன் ஒருவன் மிகவும் ஏழ்மையான நிலையில் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தான். அன்றாட உணவுக்கே வழியில்லை. ஆயினும், அவன் மிகவும் பக்தியுடன் வாழ்ந்து வந்தான். அவன் பக்தியைக் கண்ட பெரியோர், அவனிடம் அட்சய திருதியை வழிபாடு பற்றிக் கூறினார்கள். அவன் ஓர் அட்சய திருதியை நன்னாளில் அதிகாலை எழுந்து நீராடி, பாத்திரத்தில் அன்னம் வைத்து தண்ணீர், கோதுமை, சத்துமாவு, கரும்புச்சாறு, பால், தட்சிணை முதலானவற்றை ஏழை அந்தணர்களுக்குத் தானம் கொடுத்தான். அன்றைய வழிபாடுகளையும் முறைப்படி அனுசரித்தான். வறுமையின் காரணமாக அவனது மனைவி அவனைத் தடுத்தும்கூட, குறைவில்லாது அட்சய திருதியை நன்னாளை அனுசரித்தான் வைசியன். இதன் பயனாக அவன் தனது மறுபிறவியில் குஷபதி சக்ரவர்த்தியாகப் பிறந்து புகழ் பெற்றான் என புராணங்கள் பேசுகின்றன.

யுகங்களுள் இரண்டாவது யுகமான திரேதாயுகம், ஓர் அட்சய திருதியை திருநாளில்தான் ஆரம்பாமாயிற்றாம். தன் குருகுல நண்பனான ஏழைக் குசேலன் தன்னைப் பார்க்க வந்தபோது அவன் கொடுத்த மூன்று பிடி அவலைத் தின்று, பதிலாக கோடி கோடி செல்வங்களைக் கொட்டிக் கொடுத்து குசேலனை கிருஷ்ண பரமாத்மா குபேரனாக்கிய திருநாளும் இந்த அட்சய திருதியை நன்னாளில்தான்! 

பரசுராமர் அவதரித்த நன்னாள், பலராமர் தோன்றிய பொன்னாள் அட்சய திருதியையே!

துரியோதனனின் சூழ்ச்சியினால், பஞ்ச பாண்டவர்கள் வனவாசத்தை மேற்கொள்ளக்கூடிய நிலை ஏற்பட்ட போது, ஆகாரத்துக்கு அவர்கள் கஷ்டப்படாமல் இருக்க அவர்களின் முக்கிய ஆலோசகரான கண்ணன், திரௌபதியிடம் இருந்து அந்த அட்சய பாத்திரத்தை வாங்கி அவர்களிடம் கொடுத்தார். அவர்களுக்குத் தேவையானபோது அந்த அட்சய பாத்திரத்தின் மூலம் அள்ள அள்ளக் குறையாத அன்னங்களை, அவர்கள் விருப்பப்பட்ட உணவுப்பொருட்களைப் பெற்று சந்தோஷமாகப் புசித்து வந்தார்கள். இதை நினைவுபடுத்தும் வகையிலும் இந்த அட்சய திருதியை கொண்டாடப்படுகிறது. 

Image result for கண்ணன் பாஞ்சாலி அட்சய திருதியைகௌரவர்கள் சபையில் துச்சாதனன் பாஞ்சாலியின் உடையை உருவி மானபங்கப்படுத்தினான். அப்போது கண்ணபிரான் அட்சய என்று கூறி கைகாட்டி அருள, துச்சாதனன் உருவ உருவ புடவை வளர்ந்து கொண்டே இருந்த நாள் இந்த அட்சய திரிதியை நாளில்தான். இதனால் தான் பாஞ்சாலி மானம் காப்பாற்றப்பட்டது. 

இத்தகைய சிறப்பு வாய்ந்த திருநாளில், அம்பிகையை சரணடைந்து வாழ்வில் என்றும் வளம் பெறுவோம் !

முத்தாரம்மே சரணம் !

Posted by Mutharamman Satsangam

அட்சய திருதியை (28.04.2017)

பவுர்ணமி அல்லது அமாவாசைக்குப் பிறகு வரும் மூன்றாவது திதி நாள் திருதியை. சயம் என்றால் தேய்தல் என்று பொருள். அட்சயம் என்றால் தேயாது, குறையாது, வளர்தல் என்று பொருள். 

சித்திரை மாத வளர்பிறையில் வரும் திருதியை நாளே அட்சய திருதியை எனப்படுகிறது. எல்லா நலன்களையும் குறைவிலாது அள்ளிக் கொடுக்கும் இந்தத் திருதியை நன்னாளை அட்சய திருதியை என அழைத்துப் போற்றிக் கொண்டாடுகின்றனர்.

அமாவாசைக்குப் பிறகு வரும் மூன்றாவது திதி நாளான திருதியைத் திருநாள் திருமகளுக்குரிய நாளாகத் திகழ்கிறது. அதிலும் தமிழ் மாதத்தில் , சித்திரை மாத அமாவாசைக்குப் பிறகு வரும் 3-வது பிறையான அட்சயத் திருநாள் மிகவும் மகிமைமிக்கது என சாஸ்திரங்கள் கூறுகின்றன. 

அட்சய திருதியை அன்று என்ன செய்ய வேண்டும்?

அட்சய திருதியையில், எதைச் செய்தாலும் வளர்ந்துகொண்டே இருக்கும். அன்று கொடுக்கும் தானம், அளவற்ற புண்ணியத்தைக் கொடுக்கும். அன்று பித்ருக்களுக்கு பிதுர்பூஜை என்று சொல்லக்கூடிய தர்ப்பணங்களைச் செய்து அவர்களின் ஆசியைப் பெற்றால், குடும்பமும் வாரிசுகளும் வளர்ச்சியடைவார்கள்.

இந்நாளில் வாங்கப்படும் எந்தப் பொருளும் இல்லத்தில் குறைவின்றி நிறைந்திருக்கும் என்பது நம்பிக்கை. எனவேதான் இந்நாளில் தங்கம் வாங்க விரும்புகின்றனர். ஆனால் இவ்வளவு விலை உயர்ந்த பொருளை அனைவராலும் வாங்க இயலாது. அதற்காக மனம் தளர வேண்டாம். நமக்கு மிகவும் உபயோகமான பொருட்களை வாங்கிப் பயனடையலாமே. அன்று உப்பு, அரிசி மற்றும் தேவையான ஓரிரு ஆடைகள், ஏதாவது ஒரு சிறு பாத்திரம் என வாங்கலாம். எப்படியும் நாம் மாதாமாதம் மளிகைப் பொருட்கள் வாங்கி ஆக வேண்டும். அதனை இம்மாதத்தில் மட்டும் இந்த அட்சயதிரிதியை நாளில் வாங்கி வளம் பெறலாமே. 

ஸ்ரீலட்சுமியானவள் வைகுண்டத்தில் மகாலட்சுமியாகவும், பாற்கடலில் ஸ்ரீலட்சுமியாகவும், இந்திரனிடம் சுவர்க்க லட்சுமியாகவும், அரசர்களிடம் ராஜ லட்சுமியாகவும், வீரர்களிடம் தைரிய லட்சுமியாகவும், குடும்பத்தில் கிரக லட்சுமியாகவும், பசுக்களில் கோமாதாவாகவும், யாகங்களில் தட்சிணையாகவும், தாமரையில் கமலையாகவும், அவிர்பாகம் அளிக்கும்போது ஸ்வாகா தேவியாகவும் விளங்குகிறாள். இப்படி சகல யோகங்களுக்கும் ஆதாரமாக விளங்குபவள் லட்சுமிதான். எனவே, அட்சய திரிதியை அன்று ஸ்ரீமன் நாராயணனின் இணைபிரியாத தேவி ஸ்ரீலட்சுமியைப் பூஜிக்க வேண்டும். 

நம் இல்லத்தில் சாஸ்திரப்படி பூஜை செய்பவர்களுக்கு திருவருளும் லட்சுமி கடாட்சமும் கிட்டும். அன்று செய்யும் தானதர்மத்தால் மரண பயம் நீங்கி உடல் நலம் உண்டாகும். அன்னதானத்தால் விபத்து விலகும். ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவினால் நம் குடும்ப குழந்தைகளின் கல்வி மேம்படும். தானதர்மங்கள் செய்தால் எம வேதனை கிடையாது. நலிந்தவர்களுக்கு உதவி செய்தால் மறுபிறவியில் ராஜயோக வாழ்க்கை அமையும். ஆடைகள் தானம் செய்தால் நோய்கள் நீங்கும்; பழங்கள் தானம் செய்தால் உயர் பதவிகள் கிடைக்கும். மோர், பானகம் அளித்தால் கல்வி நன்கு வளரும்; தானியங்கள் தானம் கொடுத்தால் அகால மரணம் ஏற்படாது. தயிர் சாதம் தானம் அளித்தால் பாவ விமோசனம் ஏற்படும். முன்னோருக்கு தர்ப்பணம் செய்தால் வறுமை நீங்கும். அட்சய திருதியை அன்று ஆலிலையில் மிருத்யுஞ்ஜய மந்திரத்தை ஜபித்து, அதை நோயாளிகளின் தலையணையின் அடியில் வைத்தால் நோய் விரைவில் குணமாகும் என்பது நம்பிக்கை.

அட்சய திருதியை நாளில், பூஜையறையில் குலதெய்வ - இஷ்ட தெய்வங்களை வணங்கி வழிபடும் போது, பூஜையில் தொழில் ஆவணங்கள், பணம் இவற்றையெல்லாம் வைத்து அவர்களுக்குரிய மந்திரங்களையும் உச்சரித்து, வலம்புரிச் சங்கில் தீர்த்தம், பால் போன்றவை வைத்து சாமிக்கு நிவேதனம் செய்ய வேண்டும். மேலும் இத்துடன் அருகம்புல், வில்வம், துளசி, மரிக்கொழுந்து, மல்லிகை, செந்தாமரை மலர்களாலும் வீட்டிலும் வியாபார ஸ்தலங்களிலும் வழிபட்டால், தொழில் முன்னேற்றமும் குடும்ப விருத்தியும் ஏற்படும். 

இந்த நாளில் ஏழை, எளியவர்களுக்கு அன்னதானம் செய்வது, நல்ல காரியங்களுக்கு உதவுவது, எந்த வகையிலாவது பிறருக்கு உறுதுணையாக இருப்பது இவற்றினாலும் தர்மதேவதையின் அருளைப் பெற்று, இந்த அட்சய திருதியையில் புண்ணியங்களைச் சேர்த்துக் கொள்ளலாம். 

திருமகள் அம்சமாக நல்ல மனைவி அமைய விரும்புவோர், தங்களுக்கு நல்ல மருமகள் வர விரும்பும் பெற்றோர், அட்சய திருதியையில், திருக்கோயிலில் வைத்து பெண் பார்க்கும் வைபவத்தையோ நிச்சயதார்த்தத்தையோ நடத்தினால் விரும்பியபடி மணமகள் அமைவாள்.

இவ்வளவு சிறப்பு வாய்ந்த திருநாளில், திருமகளைப் போற்றிப் பாடி அவள் கருணையை பெறுவோம் !

முத்தாரம்மே சரணம் !

Posted by Mutharamman Satsangam

Apr 22, 2017

முத்தாரம்மன் துதிகள்


(அபிராமி அந்தாதியில் முத்தாரம்மனுக்குரிய துதிகள்)

சின்னஞ்சிறிய மருங்கினில் சாத்திய செய்யபட்டும்
பென்னம்பெரிய முலையும் முத்தாரமும் பிச்சி மொய்த்த     
கன்னங்கரிய குழலும் கண் மூன்றும் கருத்தில் வைத்துத்
தன்னந்தனியிருப்பார்க்கு இது போலும் தவமில்லையே !

பார்க்கும் திசைதொறும் பாசாங்குசமும், பனிச் சிறை வண்டு
ஆர்க்கும் புதுமலர் ஐந்தும், கரும்பும், என் அல்லல் எல்லாம்
தீர்க்கும் திரிபுரையாள் திரு மேனியும், சிற்றிடையும்,
வார்க் குங்கும முலையும், முலைமேல் முத்து மாலையுமே.

கருத்தன எந்தைதன் கண்ணன,வண்ணக் கனகவெற்பின்
பெருத்தன, பால் அழும் பிள்ளைக்கு நல்கின, பேர் அருள்கூர்
திருத்தன பாரமும், ஆரமும், செங்கைச் சிலையும், அம்பும்,
முருத்தன மூரலும், நீயும், அம்மே. வந்து என்முன் நிற்கவே.

நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பது உன்னை,
என்றும் வணங்குவது உன் மலர்த் தாள்.-எழுதாமறையின்
ஒன்றும் அரும்பொருளே. அருளே. உமையே. இமயத்து
அன்றும் பிறந்தவளே. அழியா முத்தி ஆனந்தமே.

சொல்லும் பொருளும் என, நடம் ஆடும் துணைவருடன்
புல்லும் பரிமளப் பூங்கொடியே. நின் புதுமலர்த் தாள்
அல்லும் பகலும் தொழுமவர்க்கே அழியா அரசும்
செல்லும் தவநெறியும், சிவலோகமும் சித்திக்குமே.

உடையாளை, ஒல்கு செம்பட்டுடையாளை, ஒளிர்மதிச் செஞ்
சடையாளை, வஞ்சகர் நெஞ்சு அடையாளை, தயங்கு நுண்ணூல்
இடையாளை, எங்கள் பெம்மான் இடையாளை, இங்கு என்னை இனிப்
படையாளை, உங்களையும் படையாவண்ணம் பார்த்திருமே.

முத்தாரம்மே சரணம் !

Posted by Mutharamman Satsangam


முத்தாரம்மன் ஸ்லோகம்

(ஆதிசங்கரர் சௌந்தர்யலஹரியில் இருந்து எடுக்கபட்டது. இதில அன்னை முத்து ஹாரம் அணிந்தவள் என்று குறிப்பிடுகிறார்) 
வயத்யம்ப ஸ்தம்பேரம தநுஜ கும்ப ப்ரக்ருதிபி:
ஸமாரப்தாம் முக்தா மாணிபிரமலாம் ஹாரலதிகாம்
குசாபோகோ பிம்பாதர ருசிபிரந்த: சபளிதாம்
ப்ரதாப வ்யாமிச்ராம் புரதம்யிது: கீர்த்திமிவ தே
பொருள்: தாயே! உன்னுடைய ஸ்தனங்களின் மத்ய ப்ரதேசத்தில் கஜாஸுரனுடைய கும்பத்திலிருந்து உண்டான முத்துக்களால் கோர்க்கப்பட்ட ஹாரமானது விளங்குகிறது. அந்த முத்துக்களில் உன்னுடைய சிவப்பான அதர காந்தியானது படுவதால் வெளியில் சிவப்பாகவும், உள்ளுக்குள்ளே பலவித விசித்ர வர்ணன்களுடனும் இருக்கிறது. இந்த ஹாரமானது பரமசிவனுடைய பராக்ரமத்தை/கீர்த்தியை சொல்வதாக இருக்கிறது என்பது இந்த ஸ்லோகத்தின் பொருளாகும்.
நமக்குத் தெரிந்தவரையில் முத்து என்பது சிப்பியிலிருந்து தோன்றுவது மட்டும் தான். ஆனால் கஜகும்பம், மூங்கில், பாம்புப்படம், மேகம், முத்துச் சிப்பி மற்றும் கரும்பு ஆகிய ஆறு இடங்களில் முத்துக்கள் விளைவதாகச் சொல்வர். இவற்றில் யானையிடத்திருந்து கிடைக்கும் முத்துக்கள் பல நிறங்கள் கலந்தவை என்றும் கூறப்படுகிறது.கஜாஸுரனைப் பரமசிவன் ஸம்ஹாரம் பண்ணியபின் அவனுடைய கும்பத்திலிருந்து கிடைத்த முத்துக்களை கோர்த்து அம்பிகை மாலையாக அணிந்ததாக சொல்லப்படுகிறது. அம்முத்துக்கள் பலவகையாக இருப்பினும் அவள் கழுத்தில் இருக்கும் போது அவளது அதரங்களின் அத்யந்த சிவப்பு நிறமானது சிவப்புடன் கூடி பல வர்ணங்களாக மாறுகிறதாம்.
சாதாரணமாக கீர்த்தி/புகழ் என்பதற்கு வெண்மை நிறத்தை குறிக்கிறார்கள். அதேபோல பராக்ரமம்/வெற்றி போன்றவைகளுக்கு சிகப்பை குறிப்பது கவிகளின் வழக்கமாம். இங்கே கஜாஸுரனுடைய ஸம்ஹாரம், த்ரிபுர சம்ஹாரம் போன்றவை பரமசிவனது பராக்ரமத்துக்கும், அவரது கீர்த்திக்கு ஸமமாக முத்து மாலையையும் குறித்திருக்கிறார் ஆதி சங்கரர்.

முத்தாரம்மே சரணம் !

Posted by Mutharamman Satsangam

ஸ்ரீ முத்தாரம்பிகை ஷோடச நாமாவளி


ௐ பகவத்யை நம:

ௐ பவநாசின்யை நம:

ௐ முக்திதாயை நம:

ௐ மஹிஷாசுரமர்த்தின்யை நம:

ௐ வ்யாதிநாசின்யை நம:

ௐ பயநாசின்யை நம:

ௐ பக்த சௌபாக்யதாயின்யை நம:

ௐ பாபநாசின்யை நம:

ௐ க்ரோதசமன்யை நம:

ௐ சிவாங்கர்யை நம:

ௐ புண்யகீர்த்யை நம:

ௐ தனதான்ய விவர்த்ன்யை நம:

ௐ தர்மஸம்வர்த்ன்யை நம:

ௐ வாஞ்சிதார்த்த ப்ரதாயின்யை நம:

ௐ ராஜ ராஜேஸ்வர்யை நம:

ௐ முத்தாரம்பிகாயை நம: நாநாவித பரிமள பத்ர புஷ்பாணி ஸமர்ப்பயாமி !


முத்தாரம்மே சரணம் !

Posted by Mutharamman Satsangam

ஸ்ரீ ஞானமூர்த்தீஸ்வரர் ஷோடச நாமாவளி




ௐ ஸிவாய நம:

ௐ மகேஸ்வராய நம:

ௐ வாமதேவாய நம:

ௐ கபர்திநே நம:

ௐ ஸங்கராய நம:

ௐ அம்பிகாநாதாய நம:

ௐ பக்தவத்ஸலாய நம:

ௐ ஸிவா ப்ரியாய நம:

ௐ ஸர்வஜ்ஞாய நம:

ௐ விஸ்வேஸ்வராய நம:

ௐ ம்ருத்யுஜயாய நம:

ௐ பாஸவிமோசகாய நம:

ௐ ம்ருடாய நம:

ௐ ஹராய நம:

ௐ அபவர்கப்ரதாய நம:

ௐ ஞானமூர்த்தீஸ்வராய நம: நாநாவித பரிமள பத்ர புஷ்பாணி ஸமர்ப்பயாமி !


முத்தாரம்மே சரணம் !

Posted by Mutharamman Satsangam

ஸ்ரீ முத்தாரம்பிகை அஷ்டகம்




முத்தாரம்பிகை மேல் அடியேன்  எழுதி இருக்கும் இந்த அஷ்டகத்தில் பிழை ஏதும் இருந்தால், அதை பொறுத்து என்னை திருத்துமாறு வேண்டிக் கொள்கிறேன்.

ஸ்ரீ முத்தாரம்பிகை அஷ்டகம்

ஞானப்ரதாயினி நிர்மலே தயாவிபவ காரிணீம் |
வங்கஸாகர க்ஷேத்ரநிலயே முத்தாரம்பிகே நமோஸ்துதே  ||  1

(ஞானத்தை வழங்குபவளும்; மாசற்றவளும்; பக்தர்களிடம் தயைக் காட்டுபவளும்; வங்கக் கடலின் கரையில் கோவில் கொண்டிருப்பவளுமான முத்தாரம்மனை வணங்குகிறேன்.)

மாயா ஸ்வரூபிணி தேவி மனசோக விநாசினி |
விஸ்வபிரமனகாரிணீ  தேவி  முத்தாரம்பிகே நமோஸ்துதே || 2

(மாயையின் வடிவானவளும், பக்தர்களுடைய மனத்தில் இருக்கும் சோகங்களை நீக்குபவளும், உலகம் முழுவதும் உண்டாவதற்கு காரணமானவளான முத்தாரம்மனை வணங்குகிறேன்.)

மஹிஷாஸுர நிர்நாச விதாத்ரி வரதே ஹர்ஷிணி |
தர்மசம்வர்த்தினி தேவி முத்தாரம்பிகே நமோஸ்துதே || 3

(மஹிஷாசுரனை சம்ஹரித்தவளும்; வரங்களை அள்ளித்தருபவளும், பக்தர்களுக்கு சந்தோஷத்தை தருபவளும், அறம் வளர்த்த நாயகியுமான  முத்தாரம்மனை வணங்குகிறேன்.)

உத்யத்பானு ஸஹஸ்ரேணே நயத்ரயசோபிதே |
கலிதோஷஹரே தேவி முத்தாரம்பிகே நமோஸ்துதே ||  4 

(ஆயிரம் கோடி சூர்ய பிரகாசத்தில் ஜ்வலிப்பவளும்; மூன்று கண்களுடன் அழகாக காட்சி தருபவளும்; பக்தர்களுடைய கலிதோஷங்களை போக்குபவளுமான   முத்தாரம்மனை வணங்குகிறேன்.)

ஸர்வார்த்ததாத்ரி  சாவித்ரீ  பக்த சௌபாக்யதாயினி  |
ஸர்வவியாதிநாசினி தேவி முத்தாரம்பிகே நமோஸ்துதே || 5

(பக்தர்களுக்காக அனைத்தையும் அளிக்கும் சாவித்ரியானவளும், அனைத்து சௌபாக்கியங்களையும் அளிப்பவளும்;  அனைத்து வியாதிகளையும் நீக்குபவளுமான முத்தாரம்மனை வணங்குகிறேன்.)

முக்தாஹார ஸர்வாபரண சோபிதே பகவதி  சிவ ரஞ்சினி|
கைவல்யப்ரதே தேவி முத்தாரம்பிகே நமோஸ்துதே ||  6     

(முத்து மாலைகளாலும், பலவிதமான ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டு அழகாக காட்சி அளிக்கும் கல்யாண குணங்கள் நிறைந்தவளே! சிவனுக்கு ப்ரியமானவளும்; பக்தர்களுக்கு முக்தி அளிக்கும் முத்தாரம்பிகையே! உன்னை வணங்குகிறேன்.)

சிம்மவாஹினி சிவவாமபாகநிலயே விசாலாக்ஷி பயஹரி |
பக்த சந்தோஷகாரிணீ  தேவி முத்தாரம்பிகே நமோஸ்துதே || 7

(சிம்மத்தை வாகனமாக கொண்டவளும்; சிவனின் இடப்புறம் அமர்ந்திருப்பவளும்; விசாலமான கண்களுடன் பக்தர்களுடைய பயத்தை போக்கி, சந்தோஷத்தை அளிப்பவளுமான முத்தாரம்மனை வணங்குகிறேன்.)    

தாரித்ர்ய துக்கசமநி பவதுக்க விநாசினி  |
கருணாம்ருத சாகரே தேவி முத்தாரம்பிகே நமோஸ்துதே  ||   8

(இம்மையில் தாரித்திரத்தையும், துக்கங்களையும் நீக்கி, மறுமையில் முக்தி அளித்து, பிறவிப்பிணியை போக்குபவளுமான சுந்தரியே! கருணைக்கடலாக விளங்கும் முத்தாரம்பிகையே! உன்னை வணங்குகிறேன்.)

பலஸ்ருதி:    (நூற்பயன்)

பாலிசேந மயா ப்ரோக்தம் அபிவாத்சல்ய சாலிதோ:
ஆனந்தம் ஆதிதம்பத்யோரின்மாவர்தந்து வாங்கிர:

(அறியாத அறிவில்லாத சிறுவன் சொல்லியிருந்தாலும், அன்புவயப்பட்ட ஆதி தம்பதியருக்கு இந்த சொற்கள் ஆனந்தத்தை கூட்டுவிப்பதாக இருக்கட்டும்)

முத்தாரம்பஷ்டகம் ஸ்தோத்ரம் ய: படேத் பக்திமான் நர:
ஸர்வபாப விநிர்முக்தோ ஸ்ரீபுரம் ஸ கச்சதி

(முத்தாரம்பிகை அஷ்டகம் என்ற இந்த ஸ்தோத்திரத்தை பக்தியுடன் படிக்கும் பக்தன் சகல பாபங்களில் இருந்து விடுபட்டு, முடிவில் தேவியின் ஸ்ரீபுரத்தில் வாசம் செய்வான்.)

பூஜாகாலே படேத் யஸ்து ஸ்தோத்ரமேதத் ஸமாஹித:
தஸ்ய கேஹே ஸ்திரா பகவதீ ஜாயதே நாத்ர ஸம்சய:

(பூஜை நேரங்களில் இந்த ஸ்தோத்ரத்தை ஒரு மனதுடன், தேக சுத்தியுடன் படிப்பவனுடைய வீட்டில் பகவதியான முத்தாரம்பிகை நித்ய வாசம் புரிவாள் என்பதில் சந்தேகமில்லை)


முத்தாரம்மே சரணம் !

Posted by Mutharamman Satsangam

Apr 13, 2017

சித்திரை விஷு 14.03.2017


தமிழர் காலக்கணிப்பு முறையின்படி ஒரு ஆண்டுக்குரிய பன்னிரெண்டு மாதங்களில் சித்திரை முதலாவது மாதமாகும். 

மங்களம் பொங்கும் இந்த மாதத்தினை சைத்ரா என்றும்; சைத்ர விஷு என்றும் போற்றுகிறார்கள். இந்த நாளன்றுதான் நான்முகன் இப்பூவுலகைத் தோற்றுவித்தார் என்று புராணம் சொல்கிறது.

மீன ராசியிலிருந்து, மேஷ ராசிக்கு சூரியன் நுழைகின்ற தொடக்கமே தமிழ் புத்தாண்டாகும். இதன்பிரகாரம் திருவள்ளுவர் ஆண்டு 2049, ஆங்கிலமாதம் ஏப்ரல் 13ஆம் (13.04.2017) தேதி, வசந்த ருதுவுடன், உத்தராயன புண்ணிய காலம் நிறைந்த வியாழனன்று நள்ளிரவு (விடிந்தால் வெள்ளிக்கிழமை) 12 மணி 43 நிமிடத்துக்கு, கிருஷ்ண பட்சம் திருதியை திதி, விசாக நட்சத்திரம் 3-ம் பாதம், துலாம் ராசியில், மகர லக்னத்தில், நவாம்சத்தில் கும்ப லக்னம், மிதுன ராசியில், சித்தி நாமயோகம், பத்தரை நாமகரணத்தில், புதன் ஓரையில், சுப மங்களகரமான ஹேவிளம்பி வருடம்  பிறப்பதாக வாக்கிய பஞ்சாங்கமும், அன்றைய தினம் பின்னிரவு 02:02 மணிக்கு மங்களகரமான ஹேவிளம்பி வருஷம் பிறப்பதாக திருக்கணித பஞ்சாங்கமும் கணித்துள்ளன.

வழிபாடு

சித்திரை விஷு திருவிழா என்று கொண்டாடும்  இந்நாளில் நம் வீட்டில் வழிபாடு செய்வது பற்றி தெரிந்து கொள்வோமா! 

முதல் நாள் இரவு, ஒரு மேஜையில் சுத்தமான துணி விரித்து, ஒரு கண்ணாடியை வைக்க வேண்டும். கண்ணாடியின் முன்னால் நிறைநாழி நெல், தென்னம்பாளை, மா, வாழை, ஆப்பிள், ஆரஞ்சு, வெள்ளரி பழங்கள், செவ்வந்தி அல்லது கொன்றைப்பூ, நகைகள், தங்கக்காசுகள் வைக்க வேண்டும். 

சித்திரை விஷுவன்று காலையில், வீட்டிற்கு பெரியவர் எழுந்து அதைப் பார்க்க வேண்டும். பின், அவர் ஒவ்வொருவராக கண்ணை மூடி அழைத்து வந்து பழங்களை பார்க்கச் செய்ய வேண்டும். அனைவரும் நீராடியதும், திருவிளக்கேற்றி பூஜை செய்ய வேண்டும். 

ஹேவிளம்பி வருடத்தின் ராஜாதிபதி செவ்வாய். ஆகவே, இவ்வருடத்தில் அங்காரக சதுர்த்தி தினங்களில் விநாயகரை வழிபடுவதால், செவ்வாய் தோஷ குறைபாடுகள் நீங்கும். வாழ்வு செம்மையாகும்.

அம்பாள் கோயிலுக்கு சென்று வரலாம். புத்தாண்டு அன்று அனைத்து காய்கறிகளும் சேர்த்த கூட்டாஞ்சோறு சமைக்கலாம். வேப்பம்பூ பச்சடி, மாங்காய் பச்சடி, வாழைப்பூ மசியல் சமைப்பது வழக்கம். பால்பாயாசம் வைக்க வேண்டும். இதை முன்னோர்களுக்கு படைத்த பிறகு சாப்பிட வேண்டும். ஏழைகளுக்கு முடிந்தளவு தானம் செய்ய வேண்டும்.

சித்திரை மாத சிறப்புகள்

  • குலசேகரப்பட்டிணம் ஸ்ரீ முத்தாரம்மன் திருக்கோவிலில் சித்திரை விஷு அலங்கார தீபாராதனையுடன் சிறப்பாக கொண்டாடப்படும்…
  • சித்திரை முதல் தேதியன்று ஸ்ரீரங்கத்தில் பஞ்சாங்கம் படிக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
  • சித்திரை மாத பௌர்ணமி நாளில் சிவபெருமான் தங்கப் பலகையில் சித்திரம் ஒன்றினை வரைய, அதிலிருந்து சித்திரகுப்தன், அதாவது, எமதர்மனின் கணக்கர் தோன்றினாராம். அதே மாதத்தில், சித்திரை நட்சத்திர தினத்தன்று தான் நீலாதேவி மற்றும் கர்ணிகாம்பா ஆகியோரை சித்ரகுப்தன் மணந்ததாகப் புராணம் சொல்கிறது.
  • சித்திரை மாத திருதியை திதியில் மகாவிஷ்ணு மீன் (மச்சம்) அவதாரம் எடுத்ததாக இதிகாசங்கள் கூறுகின்றன.
  • சித்திரை சுக்கில பட்ச அஷ்டமியில் அம்பிகை அவதரித்ததாக தேவி பாகவதம் கூறுகிறது.
  • சித்திரையில்தான் அம்மன் கோவில்களில் பால்குடங்கள் எடுப்பது, திருவிளக்கு பூஜை செய்வது போன்ற இறை வழிபாடுகள் நடக்கின்றன.
  • சித்திரை மாதத்தில் வளர்பிறை காலத்தில் மூன்றாவது பிறை தோன்றும் நாளே அக்ஷய திரிதியை என்று அழைக்கப்படுகிறது.
  • சொக்கநாதர் - மீனாட்சியைத் திருக்கல்யாணம் செய்து கொள்ளும் விழா மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சித்திரையில்தான் நடைபெறும். கள்ளழகர் வைகை ஆற்றில் எதிர்சேவை விழாவும் மதுரையில் சித்ரா பௌர்ணமியன்று சிறப்பாகக் கொண்டாடப் படுகிறது.
  • சித்ரா பௌர்ணமியன்று தான் தேவேந்திரன் சொக்கநாதரை வழிபட்டுப் பேறுகள் பெற்றதாக புராணத் தகவல் உண்டு.
  • சித்ரா பௌர்ணமி அன்று திருவண்ணாமலையில் கிரிவலம் செய்வது விசேஷம். காரணம், அங்கே ஈசனை வணங்க வரும் தேவர்களின் அருளாசியும் அன்றைய தினத்தில் கிடைக்கும் என்பது ஐதீகம்.

முத்தாரம்மே சரணம் !

Posted by Mutharamman Satsangam

Apr 9, 2017

சுடலை மாடசாமி வழிபாடு



சிவபுத்ராய ரக்தஷாய கிராம பாலாய
அக்னிஸ்வரூபாய தயாமூர்த்தியே
சுடலைமாடஸ்வாமி நமோஸ்துதே!


சுடலை மாடனுக்கு உள்ள பல்வேறு பெயர்கள் இசக்கி மாடன், இருளப்பசாமி, பூல் மாடன், சுடலை மாடன் சாமீ, சுடலை ஈஸ்வரன், மாடசாமி, மாடன், மகாராஜா, சுடலேஷ்வரன், சுடலையாண்டி, சுடலை முத்து, மாசான முத்து, முண்டன் சாமி, மயாண்டீஸ்வரர், மாண்டி, பலவேசகரன் சுவாமி, ஊசிக்காட்டு சுடலை, முத்து சுவாமி, பத்மா பரம ஈஸ்வரன், வெள்ளை பாண்டி, ,தளவாய் மாடசாமி இரட்டைசுடலை மாடசாமி, பண்றி மாடன், பூக்குழி மாடன், சங்கிலி மாடன், ஆகாச மாடன் ,உதிர மாடன், என பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறார்.

சுடலை மாடன் சிவன் பார்வதியினால் படைக்கப்பட்டு அவர்களது மகனாக ஏற்கப்பட்டவர் என்பது நம்பிக்கை. பார்வதி தேவி தாய்ப் பாலைத் தராமல் அமிர்தத்தை ஊட்டி வளர்த்து வந்ததால் அந்தக் குழந்தை நாளடைவில் அதிக பசி கொண்டு அலைய துவங்கியது. கைலாசத்தின் மயானத்தில் இருந்த (மயானத்தை சுடலை என்றும் கூறுவார்கள்) எரிந்து கொண்டு இருந்த பிணங்களைத் தின்னத் துவங்கியது.
அதன் பிறகும் பசி அடங்காமல் போய் விலங்குகள், மரங்கள், பேய்கள் என அனைத்தையும் தின்னத் துவங்கியது. அந்த குழந்தை பிணம் தின்னும் பேயாகவே மாறி விட்டதால் அதை இனியும் தேவலோகத்தில் வசிக்க முடியாது என்று எண்ணிய சிவபெருமான் அதை பூலோகத்திற்குப் போய் அங்கு மக்களை ரட்சித்து வருமாறு பூலோகத்திற்கு அனுப்பினார் என்பது வரலாறு.
சீவலப்பேரி சுடலை

சுடலை மாடன் பிறப்புக் குறித்து உள்ள மற்றொரு கதை உள்ளது. திருநெல்வேலியில் உள்ள பாளையங்கோட்டையில் இருந்து பன்னிரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

சீவலப்பேரி எனும் கிராமம். அங்கு சுடலை மாடனின் ஒரு ஆலயமும் உள்ளது. தன்னுடைய பிள்ளையான முருகப் பெருமான் தங்கள் மீது கோபம் கொண்டு பழனிக்கு சென்று விட்டதும் பார்வதிக்கு இன்னொரு குழந்தை வேண்டும் என்ற ஆசை தோன்றியது.
அவள் தனது கணவர் சிவபெருமானிடம் அதை பற்றிக் கூற அவரும் அவளை மரகதக் கல்லினால் ஆன விளக்கில் தீபம் ஏற்றுமாறும் அது எரிந்து கொண்டே இருக்க வேண்டும் என்றார்.
ஆகவே சிவபெருமான் பிரம்மாவை அழைத்து அதற்கு குழந்தை உரு கொடுக்குமாறுக் கூற அதுவும் குழந்தையாக மாறி சுடலை என்ற பெயர் பெற்றது.
அது பெரியவனானதும் பசி பசி என எப்போதும் பசியால் துடித்து கைலாயத்தில் சுடுகாட்டில் இருந்த உடல்களைத் தின்னத் துவங்கியது. ஒரு நாள் அதன் உடலில் பிண வாசனை அடிப்பதைக் கண்ட பார்வதி, அதைப் பற்றி சிவனிடம் கூற கோபமுற்ற அவர் அதை கைலாசத்தில் இருந்து அனுப்பி விடுமாறு கூறினார்.
ஆகவே பார்வதி அதனுடன் இருபத்தி ஒரு பிடி சமைத்த உணவை தந்து வனப் பேச்சியை அழைத்து அதை அங்கிருந்து அழைத்துப் போய் விடுமாறு கூறினாள்.
அந்தக் குழந்தையும் தாமிரபரணியின் அருகில் இருந்த சீவலப்பேரியை அடைந்தது. அங்கு சென்றதும் அந்த சிறுவனுக்கு பசி எடுக்க அங்கு வந்த மசானம் என்ற ஆட்டு இடையனிடம் அவன் கொண்டு வந்த ஆட்டின் பாலைக் கறந்து தருமாறு கேட்க மசானமோ அது பால் தர முடியாத மலடி ஆடு என்றான்.
சுடலை விடவில்லை அதன் பாலைக் கரக்குமாறு கூற மசானமும் பாலைக் கறக்கத் துவங்க மலட்டு ஆடு நிறைய பாலை தந்ததும் அதை அந்த சிறுவன் குடித்தப் பின் அங்கேயே தங்கத் துவங்கியது.
சுடலை மாடனின் ஆலயங்களில் மாசிக்களரி என்ற வருடாந்திர விழா நடைபெறும். மூன்று நாட்கள் நடைபெறும் அந்த விழா குறிப்பிட்ட ஒரு தினத்தில் ஒரு வருடத்திற்கு ஒருமுறை, அல்லது இரண்டு வருடத்துக்கு ஒருமுறை அல்லது பல வருடங்களுக்கு ஒருமுறைதான் நடைபெறுமாம். அதில் பல சடங்குகள் உண்டு.
அதில் ஒன்று நாடு இரவில் மயானத்திற்கு போய் பூஜித்தல். அதை சுடலை மாட சாமி வேட்டைக்குப் போகுதல் என்பார்கள். அதில் கோமாரத்தாண்டிகள் எனப்படுபவர்கள் கலந்து கொண்டு தீப்பந்தங்களை ஏந்திக் கொண்டு வினோதமான முறையில் உடையை அணிந்து கொண்டு நடு இரவில் மயானத்துக்குச் செல்வார்கள்.
அவர்களை வழி நடத்திச் செல்பவரை கனியான் என்று கூறுவார்கள். கனியான் வழி முழுவதும் இரு புறமும் முட்டைகளை வீசிக் கொண்டே செல்வார். அதை பலி தருதல் என்கிறார்கள்.
அது சுடலை மாடனின் எல்லையைக் குறிக்குமாம். அதைக் கடந்து எந்த தீய ஆவிகளுமே வந்து கோமாரத்தாண்டிகளுக்கு இடையூறு செய்ய மாட்டார்களாம்.
அதன் பின் மயானத்துக்குச் சென்று சாமி ஆடியதும், அவர்களை வழி நடத்திச் செல்லும் கனியான் சாமியாடிகளுடன் மயானத்துக்குச் சென்று அங்கு வாழை இலையை போட்டு அதில் உணவுகளை வைத்தப் பின், சில சடங்குகளை செய்துவிட்டு அந்த உணவை உருண்டையாகப் பிடித்து நாலு பக்கமும் வீசுவார்.
அதற்கு முன்னால் அவர் தனது கையை கீறிக் கொண்டு அதில் இருந்து வெளிவரும் ரத்தத்தை அங்கு ஒரு பாத்திரத்தில் பிடித்து வைக்கப்பட்டுள்ள மிருகங்களின் ரத்தத்துடன் கலந்து அதை சுடலைக்குப் படைப்பார்.
தன் ரத்தத்தை இலையில் வைக்கப்பட்டு உள்ள உணவுடன் கலந்து அதற்குப் பிறகுதான் நாலு பக்கமும் வீசுவார். அந்த உணவுகள் பூமியில் விழாது என்றும் அவற்றை அங்கு சுற்றித் திரியும் பேய் பிசாசுகள் அப்படியே அவற்றை பூமிக்கு மேலேயே பிடித்துக் கொண்டு போய் விடும் என்றும் நம்புகிறார்கள்.
ஆகவேதான் சுடலை மாடனை பேய் பிசாசுகளின் அதிபதி என்றும், அவரால் மட்டுமே அவற்றைக் கட்டுப்படுத்தி வைக்க முடியும் என்றும் நம்புகிறார்கள்.
சுடலை மாடசாமி கோயில்களில் அசைவ உணவு வகைகள் படைக்கப்படுவதால் புரோகிதர்கள் மூலம் பூசைகள் செய்யப்படுவதில்லை. ஒரு சில கோயில்களில் மட்டும் ஓதுவார்கள் பூசைகள் செய்து கொண்டிருக்கின்றனர்.
அவர்கள் இந்தப் மிருகங்களைப் பலியிடும் நடைமுறைகளில் கலந்து கொள்வது இல்லை. ஆனால் இக்கோயில்களில் அதிகமாக அந்தக் கோயில் வைத்திருக்கும் சமூகத்தைச் சேர்ந்தவர்களே பூசைப் பணிகளைச் செய்து வருகின்றனர்.
சுடலை மாடசாமி கோயில்களுக்கு பெரும்பாலும் கூரை வேயப்படுவதில்லை. அப்படியே கூரை வேயப்பட்டிருந்தாலும் அவை எளிமையாகவே இருக்கிறது.
சுடலை மாடன் அன்னை பகவதியின் காவலனாகவும். ஏவலனாகவும் பணிபுரிந்து வருகிறார்.
அங்கிருந்து பிடி மண் மூலம் தென் தமிழ்நாடு முழுக்க இன்று சுடலை ஆண்டவன் பரந்து விரிந்து தன் ஆட்சியை நடத்தி வருகிறான்.
சுடலை ஆண்டவன் சன்னதியில் பொய் சத்தியம் செய்பவர்களுக்கும் அவர்கள் குடும்பத்தின் தலைமுறையும் பூண்டற்று போய்விடும் என அசைக்க முடியாத நம்பிக்கை இன்னும் மக்களிடம் ஆழமாக வேறூன்றி உள்ளது.
எல்லா தெய்வங்களுக்கும் போலவே பிரத்யேகமான வழிபாட்டு முறைகள் சுடலைக்கும் உண்டு. இவருக்கு நடு ஜாம படைப்பு என்பது மிக விசேஷமானது ஊன் கலந்த சோறு அர்த்த ஜாம பூஜையில் படைக்கப்பட்டாலும் முட்டை தேங்காய் கலந்த சாவாப்பலி என்ற உணவு இவருக்கு உண்டு.
இவருக்கு ஜாதி பேதமின்றி யார் வேண்டுமென்றாலும் பூஜை செய்யலாம் ..


முத்தாரம்மே சரணம் !



Mutharamman Satsangam


Apr 5, 2017

ஸ்ரீ ராம நவமி (04.05.2017)



"தாயிற் சிறந்த கோயிலுமில்லை;
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை…"

- என்பவற்றிற்கு இலக்கணமாக வாழ்ந்து காட்டியவர் ஸ்ரீராமர். ஏக பத்தினி விரதனாகவும், அவதாரப் புருஷனாகவும் இருந்து வாழந்து காட்டியர்.

ஸ்ரீராமபிரான் அவதரித்த புண்ணிய நாளை ஸ்ரீராம நவமியாகக் கொண்டாடி வருகிறோம். அதர்மத்தை அழித்து நல்லோரைக் காக்கவே அவதாரங்கள் நிகழ்கின்றன. அந்த வகையில் மனிதன் உலகில் எப்படி வாழ வேண்டும் என்பதை மக்களுள் ஒருவராக வாழ்ந்து உலகத்துக்கு உணர்த்திய அவதாரமே ஸ்ரீராமாவதாரம் ஆகும்.


பங்குனி மாதம், வளர்பிறை நவமியும் புனர் பூச நட்சத்திரமும் சேர்ந்திருக்கும் நாளே ஸ்ரீராமரின் அவதார தினம். ஸ்ரீராமர் பிறந்தபோது புனர்பூச நட்சத்திரம் 4-ஆம் பாதத்தில் ஐந்து கிரகங்கள் உச்சத்தில் இருந்தனவாம்.

அசுரர்களின் கொடுமையிலிருந்து உலகைக் காப்பாற்றும் பொருட்டு மகாவிஷ்ணு ஸ்ரீராமராக அவதரிக்கப் போகிறார் என்பதை அறிந்த முனிவர்களும், தேவர்களும் ஸ்ரீராமனின் கர்ப்ப வாசத்தைக் கொண்டாடினர். அது கர்ப்போற்சவம் எனப்படுகிறது. ஸ்ரீராமர் பிறந்ததைக் கொண்டாடுவது ஜன்மோற்சவம் எனப்படுகிறது.

ஸ்ரீராம நவமி விழா பல இடங்களில் பத்து நாட்களுக்கு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. சில இடங்களில் ராமர் பிறந்த தினத்தோடு முடியும் பத்து நாட்களை முன் பத்து எனவும்; பிறந்த தினத்திலிருந்து வரும் பத்து நாட்களைப் பின் பத்து எனவும் இருபது நாட்கள் சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள்.

இந்த நாட்களில் ஸ்ரீராமரை வழிபட்டு விரதம் மேற்கொள்வர். பஜனைகள், இராமாயணச் சொற் பொழிவுகள் நடைபெறும். பக்தர்களுக்கு பானகம், நீர்மோர், சுண்டல், விசிறி முதலியவை வழங்கப்படும்.

ஸ்ரீராமர் விசுவாமித்திர முனிவருடன் இருந்த போதும், கானக வாழ்க்கை மேற்கொண்டிருந்த போதும் தாகத்திற்கு நீர் மோரும், பானகமும் பருகினார் என்பதை நினைவுபடுத்தும் விதமாகவே அவை இரண்டும் ஸ்ரீராமபிரானுக்கு நிவேதனம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.

ஸ்ரீராம நவமி உற்சவத்தின்போது வட இந்தியாவில் அகண்ட ராமாயணம் என்னும் பெயரில் துளசி ராமாயணத்தைத் தொடர்ந்து ராகத்துடன் பாடுவர்.

ஸ்ரீராம நவமியன்று வைஷ்ணவ ஆலயங்களில் ஸ்ரீராமருக்கு பட்டாபிஷேக விழா சிறப்பாக நடைபெறும். வீடுகளில் ஸ்ரீராமர் பட்டாபிஷேகப் படத்தை வைத்துப் பூஜை செய்து, வடை, பருப்பு, நீர் மோர், பானகம், பாயசம் நிவேதனம் செய்து வழிபடுவார்கள். ஸ்ரீராமர் படம் அல்லது விக்ரகத்துடன் ராமாயணப் புத்தகத்தையும் வைத்துப் பூஜிப்பார்கள்.

ஸ்ரீராம நவமியன்று ராமநாமம் சொல்வதும், ராமநாமம் எழுதுவதும் நற்பலனைத் தரும். பகவான் நாமம் இதயத்தைத் தூய்மைப்படுத்தி உலக ஆசைகள் என்னும் தீயை அணைக்கிறது. இறை ஞானத்தைத் தூண்டுகிறது. அறியாமை, காமம், தீய இயல்புகளைச் சுட்டுப் பொசுக்குகிறது. உணர்ந்தோ உணராமலோ உச்சரித்தாலே பகவான் அருள் கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

சீதையைத் தேடிச் செல்லும்போது ராமனால் வானத்தில் பறக்க இயலவில்லை. ஆனால் அனுமன் ராம நாமத்தை ஜபித்தபடியே விண்ணில் பறந்து இலங்கையை அடைந்தான். அனுமனுக்கு இது சாத்தியமானதற்குக் காரணம் ராம நாமத்தின் மகிமையே ஆகும்.

"பகவானின் ஆயிரம் நாமங்களுக்கு இணையானது ராம நாமம். நல்லது அனைத்தின் இருப்பிடமும் - இக்கலியுகத்தின் தோஷங்களைப் போக்குவதும் - தூய்மையைக் காட்டிலும் தூய்மையானதும் - மோட்ச மார்க்கத்தில் சாதகர்களின் வழித்துணையாகவும் - சான்றோர்களின் உயிர் நாடியாகவும் விளங்குவதுஸ்ரீராம்என்னும் தெய்வீக நாமம் ஆகும். இவ்வாறு முனிவர்கள் சொல்லுகிறார்கள்'' என சிவ பெருமான் பார்வதி தேவியிடம் ராம நாமத்தின் மகிமையை எடுத்துரைப்பதாகப் புராண வரலாறு கூறுகிறது.

"நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே ராம வென்ற யிரண் டெழுத்தினால்"

என்னும் பாடல் இரண்டெழுத்து மந்திர மாகிய ராம நாமத்தின் மகிமையை விளக்குகிறது.

ஸ்ரீராம நவமியன்று விரதமிருந்து ஸ்ரீராமரை வழிபடுவோர், ஸ்ரீராமர் அருளோடு ஸ்ரீ ஆஞ்சனேயர் அருளையும் பெறுவர் என்பது நம்பிக்கை.


ஸ்ரீராம நவமி அன்று ராமாயணம் படிக்க இயலாவிடின் சுருக்கமாக, ஒன்பது வரியில் உள்ள இந்த வரிகளைப் பாராயணம் செய்தால் மன அமைதி, மகிழ்ச்சி நிலவும். இதை தினமும் பாராயணம் செய்தால் ராமாயணம் முழுவதும் படித்த பலனைப் பெறலாம். எல்லா காரியங்களிலும் வெற்றி கிட்டும்.

ஸ்ரீராமம் ரகுகுல திலகம்

சிவதனுசாக் ருஹீத சீதா ஹஸ்தகரம்
அங்குல் யாபரண சோபிதம்
சூடாமணி தர்ஸன கரம்
ஆஞ்சநேயம் ஆஸ்ரயம்
வைதேஹி மனோகரம்
வானர ஸைன்ய ஸேவிதம்
சர்வ மங்கல கார்யானுகூலம்
சத்தம் ஸ்ரீராமசந்த்ரம் பாலயமாம்


ராமன் நாமத்தை தினமும் சொல்பவர்களுக்கு சகல ஐஸ்வரியங்களும் பொங்கி பெருகும்.

முத்தாரம்மே சரணம் !


Posted by Mutharamman Satsangam