Mar 29, 2017

வசந்த நவராத்திரி விரத கதை

 வசந்த நவராத்திரி மிகவும் பழமையான வழிபாடு. இதை அம்பிகையை சொல்லி இருக்கிறாள். இந்த நவராத்திரியின் பின்னனி கதையை பார்ப்போம். கோசல நாட்டை ஆண்டு வந்த த்ருவசிந்து என்னும் மன்னன் வேட்டைக்குச் சென்ற போது சிங்கத்தினால் கொல்லப்படுகிறான். அவனுக்குப் பிறகு அவனுடைய இரு மனைவிகளுள் ஒருத்தியான மனோரமவிர்க்குப் பிறந்த சுதர்சனனை அரசனாக்க ஏற்பாடுகள் நடக்கின்றன. அப்பொழுது  துருவசிந்துவின் மற்றொரு மனைவி லீலாவதி மூலம் பிறந்த மகனுக்கே பட்டம் சூட்டப் பட வேண்டும் என்று லீலாவதியின் தகப்பனாரான உஜ்ஜைனி அரசர் யுதாஜித் கலகம் செய்கிறார். அவரோடு போரிட்ட மனோரமாவின் தந்தை கலிங்க தேச அரசர் வீரசேனர் யுத்தத்தில் மாண்டு போகிறார். இதை கேள்விப்பட்ட மனோரமா தன் மகன் சுதர்சனனையும் உதவிக்கு ஒரு அடிமையையும்  அழைத்துக்கொண்டு கானகம் சென்று பரத்வாஜ முனிவரிடம் தஞ்சம் அடைகிறாள். 

லீலாவதியின் தகப்பனார் யுதாஜித்  அவர்  விரும்பியபடி  தன்  பேரனான  ஷத்ருஜித்திர்க்கு பட்டம் சூடிய பிறகு  மனோரமாவையும்  அவள்  மகன் சுதர்சனனையும் கொல்வதற்காக காட்டிற்கு வருகிறான்.  அவர்களை தன்னிடம் ஒப்படைக்கும்படி பரத்வாஜரிடம் வேண்ட,தன்னிடம் அடைக்கலமாக வந்தவர்களை தான் கை விட முடியாது என்று கூறிவிடுகிறார். அவரோடு  யுத்தம்  செய்ய  முற்பட்டவனை  அவரின்  மகத்துவத்தைக் கூறி அமைச்சர் தடுத்து விட நாடு திரும்புகிறான்.

பரத்வாஜரின் ஆஸ்ரமதிற்கு வருகை புரிந்த சில ரிஷி குமாரர்கள் மனோரமாவின் அடிமையை அவனுடைய பெயராகிய   க்லீபன் என்று அழைக்கிறார்கள். இதை கேட்ட சிறுவனாகிய சுதர்சனனுக்கு க்லீபன் என்று கூப்பிட வராததால், 'க்லீம்' என்று அழைக்கத் தொடங்குகிறான். க்லீம் என்பது அம்பாளின் பீஜ மந்த்ரமனத்தால் அதை மீண்டும் மீண்டும் உச்சரித்த சுதர்சனனுக்கு அம்பிகை காட்சி அளித்ததோடு சக்தி வாய்ந்த  வில் மற்றும் எடுக்க எடுக்க குறையாத அம்புராத்துனியையும் அளிக்கிறாள். நாளடைவில் அழகிய யுவனாக வடிவெடுத்த சுதர்சனனைக் கண்ட காசி தேச அரண்மனை ஊழியர்கள் காசி தேச  இளவரசியான  சசிகலாவிற்கு  நடக்கவிருக்கும் சுயம்வரத்தில் கலந்து கொள்ள அவனுக்கு அழைப்பு விடுகிறார்கள்.

அங்கு சென்ற சுதர்சனனை விரும்பி சசிகலா மாலை இடுகிறாள். அப்பொழது அங்கு வருகை  புரிந்திருந்த  யுதாஜித்  அதற்க்கு  எதிர்ப்பு  தெரிவிக்கிறான்.  தேவியின் துணையோடு யுதாஜித்தை எதிர்க்கிறான் சுதர்சனன். சுதர்சனனுக்கு உதவி புரியும் அம்பிகையை யுதாஜித் இழிவு படுத்த கோபம் கொண்ட தேவி அவனை சாம்பலாக்குகிறாள். பிறகு சுதர்சனனையும்  சசிகலாவையும் வாழ்த்திய அம்பிகை தன்னை வசந்த நவராத்ரியில் முறைப்படி பூஜிக்கும்படி கட்டளை இடுகிறாள்.

சசிகலாவோடு  பரத்வாஜரின் ஆஸ்ரமதிற்கு  திரும்பிய  சுதர்சனனை  வாழ்த்தி கோசல நாட்டு அரசனாக முடி  சூட்டுகிறார்  பரத்வாஜர். பிறகு அரசனான சுதர்சன் தான் மனைவி சசிகலாவோடு  விதிவத்தாக அம்பிகையை  பூஜித்து  சகல  பாக்கியங்களும்  பெற்று  வாழ்ந்தான்.  அவன் வழி தோன்றல்களான ராம லக்ஷ்மனர்களும் வசந்த   நவராத்ரியில் அம்பிகையை  பூஜித்திருக்கிறார்கள்.  

சாரதா நவராத்திரி போகம் எனும் மகிழ்வைத் தருவது, வசந்த நவராத்திரி யோகம் எனும் பக்தி நிலையை தரக் கூடியது. ஒவ்வொரு நாளும் தேவியை நவதுர்க்கா ஸ்வரூபத்தில் வழிபடுவது சிறப்பு.



மேலும் இந்த நவராத்திரியில் அம்பிகையை வழிபடுவோர் கடன் தொல்லைகளில் இருந்து விடுபவர். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை சிறக்கும்.

நவராத்திரி வழிபாட்டால், பெண் குழந்தைகள் பெறுவது மகிழ்ச்சியின் பயன். கன்னியர்கள் பெறுவது திருமணப் பயன். சுமங்கலிகள் பெறுவது மாங்கலயப் பயன். எல்லோரும் பெறுவது பரிபூரண திருப்தி.

வாழ்வில் வசந்தம் வீசச் செய்யக்கூடிய வசந்த நவராத்திரி காலத்தில் அம்பிகையை வழிபட்டு, அம்பிகையின் பரிபூரண அருளைப் பெறுவோம்.

இதைப் படிக்கும் எல்லோருக்கும் எல்லாம்
வல்ல அம்பிகையின் அருள் கிடைக்க வேண்டுகிறேன்!

யா தேவி சர்வ பூதேஷு மாத்ரு ரூபேண சம்ஸ்திதா:
நமஸ் தஸ்மை! நமஸ் தஸ்மை! நமஸ் தஸ்மை! நமோ நம:

முத்தாரம்மே சரணம் !


Posted by Mutharamman Satsangam

வசந்த நவராத்திரி - முன்னுரை


சக்தி வழிபாடு என்பது சக்தியை, அம்பிகையை, அகிலாண்ட நாயகியை, அன்னை பராசக்தியை வழிபடும் முறையாகும். சக்தி வழிபாட்டின், பண்டிகைகளில் முக்கியமானவை ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் மிகச் சிறப்பு வாய்ந்த நவராத்திரி விழாக்கள் தான்.

ஒவ்வொரு மாதத்திலும் வரும் அமாவாசை முதல் நவமி வரையிலான திதிகள் அம்பிகைக்கு உரியனதான். பன்னிரண்டு மாதங்களுக்கும் பன்னிரண்டு விதமான நவராத்திரிகள் உண்டு என்கின்றன சாக்த சாஸ்திரங்கள். அந்த பன்னிரண்டிலும் மிக முக்கியமானவை நான்கு நவராத்திரிகள்.

நான்கு விதமான நவராத்திரிகள் : 
  • வசந்த காலத்தில் கொண்டாடப்படுவது வசந்த நவராத்திரி.
  • ஆடி மாதத்தில் கொண்டாடப்படுவது ஆஷாட நவராத்திரி.
  • புரட்டாசி மாதத்தில் கொண்டாடப்படுவது சாரதா நவராத்திரி.
  • தை மாதத்தில் கொண்டாடப்படுவது சியாமளா நவராத்திரி.


பெரும்பாலான இடங்களில் மிக பிரசித்தமாகக் கொண்டாடப்படுவது சாரதா நவராத்திரி எனும் புரட்டாசி மாதத்தில் கொண்டாடப்படும் நவராத்திரியாகும்.

குளிர்கால (புரட்டாசி மாதம்) ஆரம்பமும், கோடை கால (பங்குனி மாதம்) ஆரம்பமும் எமனின் இரு தாடைகளாக விளங்குவதாக அக்னி புராணம் கூறும். அந்த இரு தாடைகளிலும் படாமல், அந்த இரு மாதங்களிலும் நோய் எதிர்ப்பு சக்தி பெற்று, நீண்ட நல்வாழ்வு வாழ அருளக் கூடியவள் அம்பிகை மட்டுமே. வருடத்தை ஆறு ருதுக்களாக ஆன்றோர்கள் பிரித்துள்ளார்கள். இரண்டு இரண்டு மாதங்களாக ருதுக்கள் அமையும். அந்த ருதுக்களில் 'ரிதூநாம் குஸுமாகர:' என்று ஸ்ரீ கிருஷ்ண பகவானால் சொல்லப்படுவது வஸந்த ருது. பருவங்களில் சிறந்ததாகச் சொல்லப்படுவது வஸந்த ருது. வஸந்த ருதுவே வசந்த காலம் . வாழ்வில் வசந்தம் தொடங்கக் கூடிய காலம். வயல்களில் அறுவடை முடிந்து, வளம் பொங்கக் கூடிய காலம். மக்களின் மனதில் ஆனந்தம் குடிகொள்ளும் காலம்.

வசந்த நவராத்திரி - பங்குனி மாத அமாவாசை முதல் தொடங்கப்படும். மறுநாள் ஆகிய பிரதமை - தெலுங்கு வருடப்பிறப்பாகிய யுகாதிப் பண்டிகை அமையும். இந்த நவராத்திரி ஸ்ரீ ராம நவமியுடன் முடியும். (நவராத்திரி நிர்ணயம் எனும் புத்தகத்தில், வசந்த நவராத்திரி 9 நாட்கள் கொண்டாடினால் உலகம் க்ஷேமம் அடையும் என்றும், ஒரு பட்சம் நாட்கள் அதாவது 5 நாட்கள் (அமாவாசை - பெளர்ணமி வரை) கொண்டாடுதல் - வேண்டும் வரங்கள் கிடைக்கச் செய்யும் என்றும், மண்டல நாட்கள் அதாவது பங்குனி அமாவாசை முதல் சித்ரா பெளர்ணமி வரை 45 நாட்கள் கொண்டாடுவது ஸகல கார்யங்களிலும் வெற்றியைத் தரும் என்றும் கூறுகின்றது.) பொதுவாக வட இந்தியாவிலும், தென் இந்தியாவில் சிற்சில கோயில்களில் மட்டுமே நடத்தப்படக் கூடியது. இந்த நவராத்திரி பொதுவாக ஆலயங்களில் மட்டுமே நடக்கக்கிறது. தீவிர சக்தி உபாசகர்களே வீட்டில் கொண்டாடுகிறார்கள்.

வசந்த நவராத்திரி அம்பிகையின் வடிவமாகிய ராஜச்யாமளா அல்லது ராஜமாதங்கீஸ்வரி எனும் வடிவத்தைப் போற்றுவதாக அமையக் கூடியது. மதுரையில் உறையும் மீனாக்ஷி - ராஜசியாமளாவாக விளங்குகின்றாள். மதுரை ஆலயத்திலும் வசந்த நவராத்திரி வெகு சிறப்பாகக் கொண்டாடப்படும்.

ஆலயங்களில் மேரு எனும் ஸ்ரீ சக்ர வடிவம் இருக்குமேயானால், அங்கு வஸந்த நவராத்திரி பொதுவாகக் கொண்டாடப்படும். ஒன்பது தினங்களிலும் காலை வேளையில் சிறப்பு அபிஷேகம் நடத்தப் பெறும். ஒன்பது தினங்களிலும் அம்பிகை ஒவ்வொரு சிறப்பு அலங்காரத்தில் காட்சி நல்குவாள். மாலை வேளையில் அம்பிகைக்கு உகந்த, சாக்தத்தின் மிக உயர்நிலை பூஜையான ஸ்ரீ நவாவரண பூஜையும், லலிதா சகஸ்ரநாம அர்சசனையும், கன்யா பூஜையும், ஸுவாஸினி பூஜையும் நடைபெறும்.

முத்தாரம்மே சரணம் !


Posted by Mutharamman Satsangam

Mar 20, 2017

சீதளா அஷ்டமி (20.03.2017)






பவுர்ணமியை அடுத்து வரும் தேய்பிறை எட்டாம் திதி, அஷ்டமி எனப்படும். இதை, சீதளா அஷ்டமி என்பர். 'சீதளம்' என்றால் குளிர்ச்சி. இத்திதி, பங்குனி மாதத்தில் முக்கியத்துவம் பெறும். காரணம், இது, கோடை துவங்கும் காலம் என்பதால், வெப்ப நோயான அம்மை மக்களைத் தாக்கும். இதிலிருந்து தங்களை காத்துக் கொள்ள அம்பாளை வழிபடுவர், மக்கள்.

ராஜஸ்தானில் சீதளா அஷ்டமியை மிகப்பெரிய விழாவாகக் கொண்டாடுவர். காரணம், அது பாலைவனப்பகுதி என்பதால், வெப்பத்தால் ஏற்படும் நோய்களில் இருந்து தங்களை காத்துக் கொள்ள சீதளாதேவி வழிபாட்டை மேற்கொள்வர். தமிழகத்தில், சீதளாதேவியை, மாரியம்மன் என்கிறோம்.

ஒரு சமயம், தேவர்களுக்கு தொல்லை கொடுக்க எண்ணிய அசுரர்கள், தங்கள் குரு சுக்கிராச்சாரியார் உதவியுடன், தீய சக்திகளை ஏவி விட்டனர். இதனால், கடுமையான வெப்பத்தால் பாதிக்கப்பட்டனர், தேவர்கள். உடலில், அம்மை கொப்புளங்கள் ஏற்பட்டன. தேவலோக வைத்தியர்களான அஸ்வினிதேவர்கள் அளித்த வைத்தியம் பலன் தரவில்லை. எனவே, சிவபெருமானை சரண் அடைந்து, தங்களை நோயில் இருந்து காக்கும்படி வேண்டினர். தேவர்களின் துயர் துடைக்க, சிவனின் ஜடையில் இருந்த சந்திரனிடமிருந்தும், கங்கையிடமிருந்தும் பேரொளி தோன்றியது.

பார்வதியின் அம்சமாக மாறிய அந்த ஒளி, சீதளாம்பிகை என்று பெயர் பெற்று, அம்பாளாக வடிவெடுத்தது. இந்த தேவியை வழிபடுவதற்கென சில மந்திரங்களை தேவர்களுக்கு கற்றுக்கொடுத்தார் சிவன். 'சீதளாஷ்டகம்' எனப்பட்ட இந்த ஸ்தோத்திரத்தைக் கூறி, அம்பாளை வழிபட்டால், வெப்பநோய் தீரும் என அருள்பாலித்தார்.

அம்பாளின் சிரசு, முறத்தினாலும், கையில் குடம் மற்றும் துடைப்பத்துடன், கழுதை வாகனத்தில் காட்சி தருகிறாள். லலிதா சகஸ்ர நாமத்தில், அம்பாளின் ஆயிரம் பெயர்களைச் சொல்லி வணங்கும் போது, 'சீதளாயை நமஹ' என்று வருகிறது.

சீதளாதேவிக்கு உகந்த திதி தேய்பிறை அஷ்டமி; குறிப்பாக, பங்குனி மாத தேய்பிறை அஷ்டமி. இந்நாளில் சீதளாதேவியையோ, மாரியம்மனையோ வழிபட்டு, நோயற்ற வாழ்வு பெறுவோம்.

'சீதளாஷ்டகம்' என்ற கீழ்க்கண்ட ச்லோகம் ஸ்காந்த புராணத்திலுள்ளது. பொதுவாக வெப்பம், சூடு அதிகமாகி அதன் காரணமாக ஏற்படக்கூடிய கொடிய நோய்களிலிருந்து விடுபட்டு, உடலும் மனமும் குளிர்சியடைய சீதளா தேவியின் அருளை வேண்டிச் சொல்லக்கூடிய துதி இது. விஸ்போடனம் என்று சொல்லக் கூடிய வெடிவிபத்துகள், குண்டு வெடிப்புகள் ஆகியவை நிகழாமல், விபத்துகளை தவிர்ப்பதற்கும் இந்த ச்லோகம் மிகவும் சிறந்தது..

ஶ்ரீசீதளாஷ்டகம்

ஶ்ரீ கணேசாய நம: 

அஸ்ய ஶ்ரீ சீதளா ஸ்தோத்ரஸ்ய. மஹாதேவ ரிஷி: அனுஷ்டுப் சந்த: சீதளா தேவதா, லக்ஷ்மீர் பீஜம், பவானீ சக்தி: ஸர்வ விஸ்ஃபோடக நிவ்ருத்யர்த்தே ஜபேவினியோக:

1. வந்தேஹம் சீதளாம் தேவீம் ராஸபஸ்தாம் திகம்பராம்
மார்ஜினீகலசோபேதாம் சூர்ப்பாலம்க்ருத மஸ்தகாம்.

2. வந்தேஹம் சீதளாம் தேவீம் ஸர்வரோக பயாபஹாம்
யாமாஸ்யாத நிவர்த்தேத விஸ்ஃபோடகபயம் மஹத்.

3. சீதளே சீதளே சேதி யோ ப்ரூயாத் தாஹபீடிதம்
விஸ்ஃபோடகபயம் கோரம் க்‌ஷிப்ரம் தஸ்ய ப்ரணச்யதி.

4. யத்ஸ்வாமுதகமத்யே து த்ருத்வா ஸம்பூஜயேன் நர: 
விஸ்ஃபோடகபயம் கோரம் க்ருஹே தஸ்ய ந ஜாயதே.

5. சீதளே ஜ்வரதக்தஸ்ய பூதிகந்தயுதஸ்ய ச
ப்ரநஷ்ட சக்‌ஷுஷ: பும்ஸ: த்வாமாஹுர் ஜீவனௌஷதம்.

6. சீதளே தனுஜான் ரோகான் ந்ரூணாம் ஹரஸி துஸ்த்யஜான்
விஸ்ஃபோடகவிதீர்ணானாம் த்வமேகாம்ருதவர்ஷிணீ.

7. களகண்டக்ரஹா ரோகா யே சான்யே தாருணா ந்ரூணாம்
த்வதனுத்யானமாத்ரேண சீதளே யாந்தி ஸம்க்ஷயம்.

8. ந மந்த்ரோ நௌஷதம் தஸ்ய பாபரோகஸ்ய வித்யதே
த்வாமேகாம் சீதளே தாத்ரீம் நான்யாம் பச்யாமி தேவதாம்.

9. ம்ருணாளதந்துஸத்ருசீம் நாபிஹ்ருன்மத்ய ஸம்ஸ்திதாம்
யஸ்த்வாம் ஸம்சிந்தயேத் தேவி தஸ்ய ம்ருத்யுர் ந ஜாயதே.

10. அஷ்டகம் சீதளா தேவ்யா: யோ நர: ப்ரபடேத் ஸதா
விஸ்ஃபோடகபயம் கோரம் க்ருஹே தஸ்ய ந ஜாயதே.

11. ச்ரோதவ்யம் படிதவ்யம் ச ச்ரத்தாபக்தி ஸமன்விதை:
உபஸர்கவிநாசாய பரம் ஸ்வஸ்த்யயனம் மஹத்.

12. சீதளே த்வம் ஜகன்மாதா சீதளே த்வம் ஜகத்பிதா
சீதளே த்வம் ஜகத் தாத்ரீ சீதளாயை நமோ நம:

13. ராஸபோ கர்தபஸ்சைவ கரோ வைசாகனந்தன:
சீதளாவாஹனஸ்சைவ தூர்வாகந்தநிக்ருந்தன:

14. ஏதானி கரநாமானி சீதளாக்ரே து ய: படேத்
தஸ்ய கேஹே சிசூனாம் ச சீதளாருங் ந ஜாயதே.

15. சீதளாஷ்டகமேவேதம் ந தேயம் யஸ்ய கஸ்யசித்
தாதவ்யம் ச ஸதா தஸ்மை ச்ரத்தாபக்தியுதாய வை.

இதி சீதளாஷ்டகம் ஸம்பூர்ணம்.

முத்தாரம்மே சரணம் !


Posted by Mutharamman Satsangam

Mar 19, 2017

ஸ்ரீ முத்தாரம்மன் கதை - 3 - ராஜ்யதாயிநீ ராஜபீடநிவேசித-நிஜாச்ரிதா

குலசேகரன்பட்டினம் என்னும் கடற்கரை நகரம் பாண்டிய மன்னர்களால் ஆட்சிச் செய்யப்பட்ட ஓர் அற்புத ஊர். இயற்கைத் துறைமுகமாக சிறப்புற்றிருந்த காலத்தில் இலங்கை சிங்கங்கபூர் பர்மா போன்ற அயல் நாடுகளோடும் மும்பை கொல்கொத்தா கள்ளிக்கோட்டை போன்ற பெருநகரங்களோடும் வாணிபத் தொடர்பில் கொண்டிருந்தது. நவதானியங்கள், தேங்காய், எண்ணெய், மரம் போன்றவை இறக்குமதி செய்யப்பட்டும் உப்பு, கருப்புக்கட்டி போன்ற பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டும் செல்வச் செழிப்புடன் திகழ்ந்தது. பாண்டிய மன்னர்கள் அரபுநாடுகளிலிருந்து குதிரைகளை இத்துறைமுகம் வழியாக இறக்குமதி செய்தனர். 

மேலும் தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்கள் செய்யும் தொழில்சிறப்புற்று விளங்கியது. தங்கநாணயங்கள் அச்சிடும் அக்க சாலைகள் இருந்ததற்குச் சான்றாக அக்கசாலை விநாயகர் திருக்கோயில்அமைந்துள்ளது எண்ணத்தக்கது.

இத்தகை சிறப்பு வாய்ந்த நகரில், குலசேகர பாண்டியன் என்னும் மன்னன் சிரூம் சிறப்புமாக ஆட்சி செய்து வந்தான். குலசேகர பாண்டிய மன்னன், சுற்றியுள்ள சிற்றரசர்களிடம் போரிட்டு வெற்றிபெற்று தம் ஆதிக்கத்தை பாண்டிய நாடு முழுவதும் பரப்பினார். இதன் விளைவாக கேரளா நாட்டை கைபற்ற எண்ணி திருவனந்தபுர மன்னனிடம் போர் தொடுத்தான். அந்த போரில், பாண்டிய மன்னவன் தோல்வியுற்றான். மனம் சோர்வுற்ற மன்னன் தன் குலதேவதையான பராசக்தியை தியானித்தப்படி தன் இருப்பிடம் நோக்கி புறப்பட்டான். வரும் வழியில் இரவு வெகு நேரமானதால் அப்படியே தூங்கிவிட்டான். பாண்டிய மன்னன் கனவில் அறம் வளர்த்த நாயகி தோன்றி, "பாண்டிய மன்னா தூங்கிவிடாதே, தூங்கி உன் நாட்டின் பெருமை இழந்து விடாதே ஒருமுறை தோற்றால் என்ன? மறுமுறை முயற்சி செய் என்று அருள்வாக்கு சொல்லி ஆசிர்வதித்து மறைந்தாள். மீண்டும் மன்னன் படையெடுத்து வெற்றி பெற்றான். இதனால் அறம் வளர்த்த நாயகிக்கு கோயில் கட்டி, கோவில் அருகே ஊர் அமைத்தான். மன்னனின் நினைவாக குலசேகர பட்டினம் என பெயர் பெற்றது அவ்வூர்.

அம்பிகை அரசை அளிப்பவள்; தன்னை அண்டியவர்களை அரசபீடத்தில் அமர்த்துபவள் என்பதை லலிதா சகஸ்ரநாமம்,  ராஜ்யதாயிநீ, ராஜபீடநிவேசித-நிஜாச்ரிதா என்னும் நாமங்களால் அழைக்கிறது. அம்பிகையை வழிப்பட்டால், நம்மை அரச பீடத்தில் அமர்த்துவாள். இங்கே அரச பீடம் என்பது பலதுறைகளின் தலைமைப் பதவியும், ஞான பீடங்களும் ஆகும். நாம் இருக்கும் இடத்தில் நம்மை தலைமை இடத்தில் வைப்பாள் என்பதே இந்த நாமங்களின் உட்கருத்து. அந்த நாமங்களை நினைவுப்படுத்துவதாகவே அமைகிறது இந்த வரலாறு.
சரி முத்தாரம்மன் இங்கே எப்படி வந்தாள்?

……………………….(அன்னை அருள் பொங்கும்)

(ஸ்ரீ முத்தாரம்பிகை மாஹாத்மியம் என்னும் தொடரில் இருந்து எடுக்கப்பட்டது)


Posted by Mutharamman Satsangam

Feb 14, 2017

மஹா சங்கடஹர சதுர்த்தி

சங்கடஹர சதுர்த்தி


விநாயகரை வழிபாடு செய்வதற்கு பல விரத தினங்கள் இருந்தாலும், சங்கடஹர சதுர்த்தியில் விரதம் இருந்தால் சங்கடங்கள் தீர்ந்து மகிழ்ச்சியைப் பெறலாம் எனக் கூறப்படுவதுண்டு."ஹர" என்ற சொல்லுக்கு அழித்தல் என்று பொருள். நம் சங்கடங்களை நீக்கும் சதுர்த்தி தான் சங்கடஹர சதுர்த்தி. ஒவ்வொரு மாதமும் பௌர்ணமிக்கு அடுத்ததாக வரும் சதுர்த்தி திதியே சங்கடஹர சதுர்த்தி ஆகும்.

விநாயகர் ஒரு முறை கைலையில் ஆனந்தமாய்த் நடனமாடும் போது அங்கே வந்த சந்திரன், விநாயகரின் பெருத்த தொந்தியையும், துதிக்கையையும், அவற்றைத் தூக்கிக் கொண்டு அவர் ஆடுவதையும் பார்த்து விட்டுப் பெரிதாய்ச் சிரித்தான். அவன் தன்னைப் பார்த்து எள்ளி நகையாடியதைக் கண்ட விநாயகர் அவனின் கலைகள் தேய்ந்து போனவை, தேய்ந்தவையாகவே இருக்கும் எனக் கூறவே, மனம் வருந்திய சந்திரன் அதற்குப் பரிகாரமாகவும், தன்னுடைய தவற்றை நீக்கவும் சதுர்த்தி தினத்தன்று விரதம் இருந்து விநாயகரின் அருளைப் பெற்றான்.

அப்போது விநாயகர் சந்திரனிடம், "இன்று முதல் சுக்கில பட்சச் சதுர்த்திகளில் உன்னைப் பார்ப்பவர்களுக்குப் பாவம் சம்பவிக்கும், எனவும், அதைப் போக்கிக் கொள்ளச் சதுர்த்தி விரதம் இருந்து பூஜித்தால் அவர்களுக்கு நன்மையே விளையும்" எனவும் சொன்னார். இந்த விரதமே சங்கடஹர சதுர்த்தி விரதம் என அழைக்கப்படுவதாக கூறப்படுகிறது.
ஒவ்வொரு மாதமும் வரும் "சங்கடஹர சதுர்த்தி" நாளில் விரதம் இருந்தால் குடும்பத்தில் சுபிட்சமும், தடைகளின்றி எல்லா காரியங்களும் வெற்றியடையும் என்பது நம்பிக்கை.

இவ்விரதத்தை கடைப்பிடிப்பதால் நீண்ட நாட்களாக தீராமல் உள்ள நோய் தீரும். வாழ்க்கையில் தொடர்ந்து பலவகை துன்பங்களுக்கு உள்ளாகிறவர்கள் நிலையான சந்தோஷத்தை அடைய முடியும்.
மிகச் சிறப்பான கல்வி அறிவு, புத்தி கூர்மை, நீண்ட ஆயுள், நிலையான செல்வம் உண்டாகும்.

சனி தோஷத்திற்கு உள்ளாகிறவர்கள் இவ்விரதத்தை அனுஷ்டித்தால், சனியின் தாக்கம் பெரு‌ம்பகு‌தி குறையும் என்றும் நம்பப்படுகிறது.

சங்கடஹர சதுர்த்தி விரதம் இருக்கும் முறை;


ஒவ்வொரு வருடமும் மாசி மாதம் வரும் சங்கட ஹர சதுர்த்தியிலிருந்து விரதம் துவங்கி ஒவ்வொரு மாதமும் விரதமிருந்து பன்னிரண்டு சதுர்த்திகள் நிறைவுறும் தினத்தன்று, கணபதி ஹோமம் செய்து விரதத்தை நிறைவு செய்ய, எப்பேர்ப்பட்ட துன்பமும் விலகும் என்பது நம்பிக்கை.

அதிகாலையில் எழுந்து நீராடி, விநாயகப் பெருமான் திருவுருவப் படம் அல்லது விக்கிரகத்தின் முன் நெய் விளக்கேற்றி, விரதம் துவங்கச் சங்கல்பம் செய்து கொள்ள வேண்டும்.

கணபதி விக்ரஹம் இருந்தால், அவருக்கு புனித நீரால் அபிஷேகம் செய்ய வேண்டும். மாப்பொடி, மஞ்சள், திரவியம், பால், தயிர், பஞ்சாம்ருதம், தேன், இளநீர், நெய், விபூதி, சந்தனம் ஆகிய திரவியங்களால் சிறப்பாக அபிஷேகம் செய்யலாம். கும்பம் ஆவாஹனம் செய்ய தெரிந்தவர்கள், கும்பாபிசேகம் செய்யலாம். படமாக இருந்தால், புஷ்பத்தால் பிரோக்ஷணம் செய்தால் போதும்.

பின்னர், ஸ்வாமிக்கு வஸ்திரம் சாற்றி, அலங்காரம் செய்து, சந்தனம், குங்குமம், புஷ்பம் சார்த்தவும்.

நைவேத்யமாக, கற்கண்டு, பழங்கள், அப்பம், மோதகம், வடை, எள்ளுடை, கரும்பு, பிட்டு, பேரீச்சம் பழம், தேன், பால், சுண்டல், கேசரி, அதிரசம், போலி, ரவாலட்டு, ஜாங்கிரி போன்று யாதாவது படைக்கவும்.

ஸ்ரீ கணேச மூல மந்திரத்தை 108 முறை ஜபித்தல் விசேஷம். அன்று முழுவதும் உபவாசம் இருந்து, மாலை சந்திரோதய சமயத்தில், மீண்டும் நீராடி, விநாயகரை மனதாரப் பூஜித்து, சந்திர பகவானையும் பூஜிக்க வேண்டும். அருகம்புல்லால் ஆனை முகனை அர்ச்சிப்பது நலம் பல தரும். நான்காம் பிறையை அறியாமல் பார்க்க நேர்ந்தால், சங்கட ஹர சதுர்த்தியன்று விநாயகருக்கு அருகம்புல் சமர்ப்பிக்க அந்த தோஷம் நீங்கும்.

இருபத்தோரு முறைகள் ஸ்ரீ கணேச‌ அதர்வசீர்ஷம் ஜபம் செய்வது மிகச் சிறந்தது. இயலாவிடில் தகுந்தவர்களைக் கொண்டு இந்த ஜபம் செய்விக்கலாம்.
மாலை நேரம், தெரிந்த கணபதி தமிழ் ஸ்துதிகள், கணேச பஞ்சரத்னம், சங்கஷ்டஹர ஸ்தோத்ரம், கணபதி அஷ்டகம், விநாயகர் அகவல், அஷ்டோத்ரம், திரிசதி அர்ச்சனை செய்து,  புஷ்பாஞ்சலி செய்யலாம்.

விநாயகருக்கு நிவேதனம் செய்த பிரசாதங்களை மட்டும் இரவு உணவாகக் கொள்வது சிறப்பு. விநாயகருக்கு, 21 மோதகங்கள் நிவேதனம் செய்வது சிறந்தது. நாள் முழுவது உபவாசம் இருக்க இயலாவிடில், பால், பழங்கள் உணவாக எடுத்துக் கொள்ளலாம்.

கோவிலுக்குச் சென்று விநாயகரை தரிசித்தல் சிறப்பு. பார்க்கவ புராணமாகிய விநாயக புராணம் படிப்பது அளவில்லாத நன்மை தரும்.
தொடர்ந்து ஒவ்வொரு சங்கடஹர சதுர்த்தி அன்றும் விநாய்கருக்கு சிறப்பு வழிபாடு செய்து விரதம் இருந்தால், நம் சங்கடங்களை எல்லாம் தீர்ப்பார் சங்கடஹர கணேசர்.

சங்கடங்களை நீக்கி அளவில்லாத நன்மைகளைத் தரும் சங்கட ஹர சதுர்த்தி விரதமிருந்து நலம் பெறுவோம்.

முத்தாரம்மே சரணம் !

Posted by Mutharamman Satsangam