Mar 29, 2017

நவதுர்க்கை - பிரம்ஹசாரிணி



வசந்த நவராத்திரியின் இரண்டாம் நாளில் அன்னை பிரம்மச்சாரிணியாக வணங்கப்படுகிறாள். 'பிரம்ம' என்றால் தபஸ் என்று பொருள். பிரம்மச்சாரிணி என்றால் 'தப சாரிணி ' என பொருள்படும்.


இமயத்தின் மகளான இந்த தேவி மீண்டும் சிவபெருமானை மணந்து கொள்ள வேண்டுமென்று ஆசைப்பட்டாள்.
இதற்காக பிரம்மசரணி தேவி பல்லாயிரம் ஆண்டுகள் கடுந்தவம் புரிந்தாள். ஆயிரம் ஆண்டுகளுக்கு காய்களையும் கனிகளையும் மட்டுமே உண்டு தவம் செய்தாள். அடுத்த நூறு ஆண்டுகளுக்கு இலைகளையும், தழைகளையும் உண்டு தவம் செய்தாள். மூவாயிரம் ஆண்டுகள் பிலவ மரத்தடியில் அமர்ந்து கொண்டு அவள் மீது விழுந்த பிலவ இலையை உணவாகக் கொண்டு கடுந்தவம் புரிந்தாள். அதன் பின் பல ஆண்டுகள் எதுவுமே உண்ணாமல், தண்ணீர்கூட அருந்தாமல் சிவபெருமானையே நினைத்து மனமுருகி பொறுமையோடு கடுந்தவம் புரிந்தாள். இவளின் தவ உக்ரம் மூன்று உலகங்களிலும் எதிரொலித்தது. இறுதியில் சிவன் இவளை மணம் புரிந்தார். பொறுமையும் , தவவலிமையும் பெற்ற பிரம்மசரணி தேவி தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அன்பைப் பொழிகிறாள்.


பரமேஸ்வரனின் திரிபுர தாண்டவத்தின்போது, அவர் இடக்கால் பெருவிரலால் வரைந்த கோலம் அஷ்டவசுக் கோலம் எனப்படும். இதிலிருந்து பிரம்மச்சாரிணி தேவி தோன்றினாள் என்பர். இந்த தேவிக்கு காசியில் "துர்க்காகாட்' படித்துறையில் கோவில் உள்ளது. தென்கோடியில் உள்ள கன்னியாகுமரியில் அன்னை பிரம்மச்சாரிணியாக அருள் செய்கிறாள்.


ஸச்சிதானந்த ப்ரம்மஸ்வரூபத்தை அடையச் செய்பவள் பிரம்மசாரிணி. உடல் சக்ரங்களில் இவள் 'ஸ்வாதிஷ்தானத்தில் 'இருப்பவள்.எனவே, அவளை ஸ்வாதிஷ்டானச் சக்கரத்தில் சித்தத்தை நிறுத்தித் தியானிக்க வேண்டும் என்பர் யோகிகள்.


பிரம்மச்சாரிணி நன்றி, அறிவு, ஞானம் ஆகியவற்றின் வடிவானவள். இவள் மிகவும் எளிமையாக காட்சி தருபவள். இந்தத் தேவி எப்போதும் தவத்திலேயே இருப்பாள். வெண்ணிற ஆடையுடன் வலக்கையில் ஜபமாலையும், இடக்கையில் கமண்டலமும் தாங்கி வீற்றிருப்பாள். அன்னைக்கு வாகனம் ஏதும் இல்லை. பூமியில் நடப்பவளாக இவள் காட்சிப்படுத்தப்படுகிறாள்.


தன்னை வணங்குவோர்க்கு மிகுந்த பொறுமையைத் தர வல்லவள். அவர்கள் தங்களுடைய துன்பமான நேரத்திலும் மணம் தளராது இருக்க அருள்பவள். இவள் அருள் சோம்பலை நீக்கி சுறுசுறுப்பை தரவல்லது. பிரம்மசரணி தேவியைத் தவறாமல் பிரார்த்தனை செய்பவர்கள் ஞானத்தைப் பெறுகிறார்கள். தன்னை பூஜிப்பவருக்கு பிரம்மசரணி தேவி மன அமைதி , வளமான வாழ்க்கை , நிரந்தரமான சந்தோசம் ஆகியவைகளை அள்ளிக் கொடுக்கிறாள்.




தியான ஸ்லோகம்:


ததாநாகர பத்மாப்யாம் அக்ஷ மாலா கமண்டலூ |
தேவி ப்ரஸ்தது மயி ப்ரம்ஹசாரிணி அநுத்தமா ||


என்பது ப்ரம்ஹசாரிணி துர்காவின் ஸ்லோகம் ஆகும்.


(கமண்டலமும், தண்டமும் தன் தாமரைக் கரத்தில் ஏந்தியவளும் பிரம்மஸ்வரூபம் அடையும் எண்ணம் கொண்டவளுமாம் அன்னை பிரம்மச்சாரிணி எனக்கு அருள வேண்டும்.)


மந்திரம்: ஓம் பிரஹ்மசாரிண்யை நம:


அபிராமி அந்தாதி:


தவளே இவள் எங்கள் சங்கரனார் மனை மங்கலமாம்
அவளே அவர் தமக்கு அன்னையும் ஆயினள் ஆகையினால்
இவளே கடவுளர் யாவர்க்கும் மேலை இறைவியும் ஆம்
துவளேன் இனி ஒரு தெய்வம் உண்டாக மெய்த் தொண்டு செய்தே


எங்கள் இறைவனாகிய சங்கரனின் இல்லத் துணைவியே! அவருக்கே அன்னையாகவும் (பராசக்தி ஈன்ற பரமசிவம்) ஆனவளே! ஆகையால் நீயே யாவர்க்கும் மேலானவள்! ஆகவே, உனக்கே இனி உண்மையான தொண்டு செய்வேன். ஆதலால், இனி நான் துன்பங்களால் துவள மாட்டேன். தாயே!

முத்தாரம்மே சரணம் !

Posted by Mutharamman Satsangam

No comments:

Post a Comment