Mar 29, 2017

நவதுர்க்கை - சைலபுத்ரீ


நவதுர்கையாக வழிபடும் போது முதல் நாள் அகில உலகத்தையும் படைத்தும் காத்தும் அழித்தும் விளையாடும் அன்னையை ஷைலபுத்ரி என்று மலைமகளாக வழிபடுகின்றோம்.


மலை அரசன் இமவானின் மகளாக இருப்பதாலும் அன்னைக்கு இவ்வாறு ஒரு பெயர் உண்டு. ஹிமவானின் மகளாக உள்ளதால் ஹேமாவதி என்ற பெயரும் இவளுக்கு உண்டு. பார்வதி, பர்வதகுமாரி, பவானி என்றெல்லாம் அழைக்கப்படும் இவளே, அனைவரிலும் தேவர், மூவர் என யாவரிலும் சக்தியாக நிறைந்து நிற்பவள். இவள் சக்தியின்றி எந்த இயக்கமும் இல்லை. நடைபெறாது.


இவளின் முன் அவதாரத்தில் இவள் தட்சனின் மகளாக பிறந்ததால் 'தாட்சாயினி ' என்றும் கூறுவர். தக்ஷனின் மகள் சதிதேவி, சிவபெருமானின் முதல் மனைவி, தன்னுடைய கணவனைப் பற்றி இழிவாகப் பேசிய தந்தையின் வார்த்தைகளைத் தாங்க முடியாமல், அவர் நடத்திய யாக குண்ட அக்னியில் குதித்து சாம்பலானாள். சதிதேவி மீண்டும் இமயத்தின் மகள் ஷைலபுத்ரி தேவியாகப் பிறந்தாள். இவளே பார்வதியாகப் பிறந்து சிவனைத் திருமணம் செய்து கொண்டாள்.


பிறப்பே இல்லாதவள், விளையாட்டுக்காக ஹிமவானுக்கு மகளாக பிறந்தாள். இதையே,  “உமையே! இமயத்து அன்றும் பிறந்தவளே!” என்றும்


“பிறவியும் வம்பே! மலைமகள் என்பதும் நாம் மிகையே இவள்தன் தகைமையை நாடி விரும்புவதே!” என்றும் அபிராமி அந்தாதி கூறுகிறது.


இறைவனின் ஆனந்த தாண்டவத்தின்போது, வலக்காலை தரையில் ஊன்றி இடக்காலைத் தூக்கி ஆடும் நிலையில் வரையப்பட்ட கோலம் மிகவும் போற்றப்படுகிறது. இதை ரிஷிமண்டல கோலம் என்பர். இதிலிருந்துதான் எழுத்துகள் வெளிப்பட்டன. அவற்றுக்குரியவளாக- அந்தக் கோலத்திலிருந்து வெளிப்பட்ட சக்தியை சைலபுத்ரி என்பர். இத்தேவிக்கு காசியிலுள்ள வருணை நதிக்கு அருகில் கோவில் உள்ளது. நவராத்திரியின் முதல் நாளில் இத்தேவியை தரிசிப்பதை மக்கள் பெரும் பேறாகக் கருதுகிறார்கள். மேலும், உத்தர பிரதேசத்தில் உள்ள மர்ஹின காட் என்னும் இடத்தில் சைலபுத்ரீக்கு தனிக்கோவில் உண்டு.


இவள் ஒன்பது சக்ரங்களில் முதல் சக்கரம் மூலாதாரமாக இருக்கிறாள். யோகிகள் தங்களுடைய யோக சாதனைகளை இவளை வணங்கியே துவங்குவர். அதனால் இவளே முதல் சக்தியாகப் போற்றப்படுகிறாள்.


சக்தியின் மூலதாரத்தை அடக்கி ஆளும் ஷைலபுத்ரிதேவி சூலத்தை ஒரு கரத்திலும், தாமரையை இன்னொரு கரத்திலும், பிரம்மா, விஷ்ணு, சிவபெருமான் மூவரின் சக்திகளை இணைத்து உருவாகிய காளையை வாகனமாகக் கொண்டு காட்சியளிக்கிறாள்.


இவளை வழிபட மங்களகரமான  வாழ்வு கிட்டும்; திருமணத்தடை நீங்கும். ஆஸ்துமா, நீரிழிவு நோய்கள் தீரும். துக்கம் ஏழ்மை அகலும். பொருள், ஆயுள் பலம் விருத்தியாகும்.


பசுமை வர்ணத்தவளாக அதாவது இயற்கை ரூபிணியாக வணங்குகின்றோம் ஷைலபுத்ரி துர்காவை.




தியான ஸ்லோகம் :


வந்தே வாஞ்சித லாபாய சந்த்ரார்த்த க்ருத சேகராம் |
வ்ருஷாரூடாம் சூலதராம் சைல புத்ரீம் யசஸ்விநீம் ||


என்பது ஷைலபுத்ரி துர்காவின் ஸ்துதியாகும்.


( பிறை நிலவை முடியில் சூடி, நந்தி வாகனமேறி பவனி வரும், திரிசூலதாரி, இமவான் மகளாக அவதரித்த ஒப்புயர்வற்ற ஷைல புத்ரியை என்னுடைய எண்ணங்கள் ஈடேற அடியேன் வணங்குகின்றேன். )


மந்திரம்: ஓம் சைலபுத்ர்யை நம:


அபிராமி அந்தாதி :


நன்றே வருகினும், தீதே விளைகினும், நான் அறிவது
ஒன்றேயும் இல்லை, உனக்கே பரம், எனக்கு உள்ள எல்லாம்
அன்றே உனது என்று அளித்து விட்டேன், அழியாத குணக்
குன்றே, அருட்கடலே, இமவான் பெற்ற கோமளமே


உலகமெல்லாம் பெற்றெடுத்த தலைவியாகிய அபிராமி அன்னையின் திரு மார்பகங்களைத் தாமரை மொட்டு என்கிறார்கள். கருணை ததும்பி நிற்கும் முதிர்ந்த கண்களை, மருட்சி மிக்க மான் கண்கள் என்கிறார்கள். முடிவில்லாதவள் என்றெல்லாம் பக்தர்கள் கூறுகின்றார்கள். இவையெல்லாமே மாறுபட்ட கூற்றுகள். இவைகளை நினையும் போது எனக்கு நகைப்பே உண்டாகிறது. இனிமேல் நாம் செய்யக்கூடியது இத்தகைய கற்பனைகளைத் தள்ளி அவளின் உண்மை நிலையை அறிதலேயாகும்.

முத்தாரம்மே சரணம் !

Posted by Mutharamman Satsangam

No comments:

Post a Comment