Jan 17, 2017

முத்தாரம்மன் சத்சங்கம் என்றால் என்ன?

சத்சங்கம்” என்றால் உண்மையான பக்தர்கள் கூடும் இடம் என்று பொருள்படும். அவ்வகையில், முத்தாரம்மன் சத்சங்கம் என்பது முத்தாரம்மன் மீது உண்மையான பக்தி கொண்ட அடியவர்கள் இணையும் குழு.

இறைவியைத் தொழும் பழக்கம் வருவதற்குமுன், தொழுது வாழ்த்தித் தியானிப்பவர்கள் கூட்டத்தில் கலந்து பழகவேண்டும். அந்தச் சத்சங்கச் சிறப்பினால் மெல்ல மெல்லப் பக்தி உணர்ச்சி உண்டாகும், தென்ன மரத்தில் இளநீர்க் காய்க்குள் நீர் நிரம்புவதுபோல, நம்மை அறியாமல் உள்ளம் பண்படும்; பக்தியுணர்வு படியும். அப்படி பட்ட சத்சங்கம் அமைய நான் என்ன புண்ணியம் செய்தேன் என்று சிலிர்க்கிறார் அபிராமிபட்டர்.

கண்ணியது உன்புகழ் கற்பதுன் நாமம் கசிந்துபத்தி
பண்ணியது உன்னிரு பாதாம்புயத்தில்-பகல் இரவா
நண்ணியது உன்னை நயந்தோர் அவையத்து -நான்முன்செய்த
புண்ணியம் ஏதுஎன் அம்மே புவி ஏழையும் பூத்தவளே

எனவே, சத்சங்கம் என்பது  மிகவும் முக்கியம். அதுவே முக்தி அளிக்க வல்லது. இதனை ஆதி சங்கரர் தனது  பஜகோவிந்தத்தில், சத்சங்கத்தை பற்றி

சத்ஸங்கத்வே நிஸ்ஸங்கத்வம் நிஸ்ஸங்கத்வே நிர்மோஹத்வம்
நிர்மோஹத்வே நிஸ்சல தத்வம் நிஸ்சல தத்வே ஜீவன் முக்தி

என்று கூறியுள்ளார் . 

அதாவது, அடியவர், நல்லவர், உண்மைப் பொருளை அறிவதிலும் அடைவதிலும் நாட்டமுடையவர் கூட்டமான சத்சங்கம் , பற்று இல்லாத நிலையை அளிக்கும்.  பற்று இல்லாத நிலையை அடைந்தால் மயக்கங்கள் இல்லாத நிலை கிடைக்கும். மயக்கம் இல்லாத நிலையை அடைந்தால் என்றும் நிலையான மறைப் பொருளை அடைய முடியும்.  அப்படி நிலையான மறைப் பொருளை அடைந்தால் இங்கேயே இப்போதே முக்தி நிலையை அடையலாம். 

ஆக, முக்திக்கு முதல் படியாக இருப்பது சத்சங்கம் ஆகும்.

முத்தாரம்மே சரணம் !

Posted by Mutharamman Satsangam


2 comments: