May 2, 2017

கங்கா ஜயந்தி / கங்கா சப்தமி (02.05.2017)

Image result for ganga saptami 2017

நதிகள் என்று சொன்னாலே நமக்கு முதலில் நினைவுக்கு வருவது கங்காதான். நதிகளிலெல்லாம் மிகவும் உயர்ந்ததாகவும், புண்ணியமிக்கதாகவும் கருதப்படுவது கங்கா. அதில் நீராடினால் எல்லா பாபங்களும் விலகிவிடும் என்கின்றன புராணங்கள்.

புராணங்களின் கூற்றுப்படி மகாவிஷ்ணு வாமன அவதாரம் எடுத்து, மகாபலி சக்ரவர்த்தியிடம் மூன்றடி நிலம் கேட்டபோது, அவன் அவ்வாறே கொடுக்க இசைந்தான். பகவான், திரிவிக்கிரமனாக மாறி, ஒரு காலடியால் பூலோகத்தையும், மற்றொரு காலடியால் விண்ணுலகத்தையும் அளந்தார் அல்லவா? அப்படி அவர் பாதம் பிரம்ம லோகத்தில் பட்டபோது, பிரம்மா அப்பாதம் யாருடையது என்று தெரிந்து, தன்னிடமுள்ள தீர்த்தத்தினால் அப்பாதங்களைக் கழுவி, அதைத் தன் கையிலுள்ள கமண்டலத்தில் வைத்துக் கொண்டாராம். அதுவே கங்கையாகும். பகவான் காலடி ஸ்பரிசம் பட்டதால் அந்த கங்கா நீருக்கு இவ்வளவு மகிமை. 

Related imageதேவலோகத்தில் இருந்த அந்த கங்கையை, மிகுந்த பிரயத்தனத்துக்குப் பின் சூர்ய வம்சத்து அரசன் பகீரதனால் தேவலோகத்திலிருந்து பூமிக்கு வந்தாள். அதனால் அவளுக்கு பகீரதி என்றும் பெயரும் ஏற்பட்டது. அவள் பூமிக்கு வந்த திருநாளையே, கங்கா தசரா என்று வைகாசி மாதம், சுக்ல பட்சத்தில்நா கொண்டாடுகிறோம்.

கங்கா சப்தமி அல்லது கங்கா ஜயந்தி என்பது, கங்கை ஜஹ்னு முனிவரால் உள்ளிழுக்கப்பட்டு அவரின் காது வழியே ‘ஜாஹ்னவி’ என்ற பெயரில் வெளிப்பட்ட நாள். 

இந்த கங்கா சப்தமியில், கங்கா நதியில் நீராடுவது மிகவும் சிறந்தது. இயலாதவர்கள் கங்கா ஜலத்தினால் தன்னை புரோட்சித்துக் கொண்டோ, அதுவும் முடியவில்லை என்றால் நாம் குளிக்கும் தண்ணீரில் கங்கை வந்திருப்பதாக எண்ணி ‘கங்கா கங்கா’ என்று சொல்லிக் கொண்டே நீராட வேண்டும். பிறகு கங்கா தேவியின் சிலைக்கு (கங்கா தேவி வெள்ளை வஸ்திரம் தரித்து, வெள்ளைத் தாமரை மலரில் மூன்று கண்களும், பல கைகளும் உடையவளாக) பூஜைகள் செய்ய வேண்டும். பூஜையின்போது கட்டாயம் இமவான், பகீரதன் ஆகிய அரசர்களை நினைத்துக் கொள்ள வேண்டும்.

கங்கையில் நீராடி, மனதளவில் தாம் செய்த பாபங்களை நினைத்து வருந்தினால் அந்தப் பாபங்கள் நீங்கும் என்கின்றன புராணங்கள். தவிர, மீண்டும் இத்தகைய பாவங்களைச் செய்யக் கூடாது. 


பகவத்கீதா கிஞ்சித் அதீதா
கங்கா ஜலலவ கணிகா பீதா
ஸக்ருதபி ஏன முராரி ஸமர்ச்சா
க்ரியதே தஸ்ய யமேந சர்ச்சா

என்று ’பஜகோவிந்த’த்தில் சொல்கிறார். ‘எவன் கொஞ்சமாவது கீதா பாராயணம் பண்ணி, துளியாவது கங்கா தீர்த்தத்தைப் பானம் பண்ணி, ஒரு தடவையாவது முராரிக்கு அர்ச்சனை பண்ணுகிறானோ அவனுக்கு யமனிடம் வியவஹாரம் ஒன்றுமில்லை என்று பகவத்பாதாள் சொல்கிறார்.

கண்ணனும், நதிகளில் தான் கங்கா என்று கீதையில் சொல்லியிருக்கிறார். இவ்வளவு மகிமை வாய்ந்த கங்கையில் நீராடினால் மட்டும் போதாது. அதன் மகத்துவமும் அறிந்திருக்க வேண்டும். அப்பொழுது தான் நம் பாவங்கள் தீரும். இதை ஒரு கதை கொண்டு விளக்குகிறேன்.

கைலாயத்தில் சிவனும் பார்வதியும் உரையாடிக் கொண்டிருந்த போது பார்வதி தேவிக்கு ஒரு சந்தேகம் தோன்றியது அதை கைலைநாதனான சிவனிடம் கேட்க ஆரம்பித்தார். அதாவது, மக்கள் கங்கையில் நீராடினால் தங்களது பாவம் போய்விடும் என்று நீராடுகிறார்களே, அவர்களில் எல்லொரது பாவமும் போய்விடுமா? ….. என்பதுதான் அந்த கேள்வி.

சிவபெருமானோ அதற்கான பதிலை ஒரு சிறு நாடகமாக நடத்தி காட்ட எண்ணி பார்வதி என்ன செய்யவேண்டும் என்று கூறினார். அதன்படி சிவன் வயதான ரிஷி போலவும், பார்வதி ரிஷி பத்தினியாகவும் மாறினார்கள். கங்கையில் தீர்த்தமாடி வரும் வழியில் சிறு பள்ளம் தோன்றச் செய்து சிவன் அதில் விழ்ந்து தத்தளித்தபடியும், பார்வதிதேவி பள்ளத்தின் அருகே நின்று தனது கணவரை காப்பாற்ற வேண்டும் என்று கூக்குரலிட்டு கத்தியபடி இருந்தார்.

கங்கையில் குளித்துவிட்டு வந்த பலர் பள்ளத்தில் கிடந்த சிவனை வெளியே தூக்க வந்தபோது பார்வதிதேவி தனது கணவர் ஒரு உத்தமமான ரிஷி என்றும் அவரை பாவம் செய்தவர் தொட்டால் மறுகணமே சாம்பலாகி விடுவார்கள் என்று கூறி எச்சரிக்கை செய்தார். இதனால் உதவ வந்த அனைவரும் பயந்து அந்த இடத்தை விட்டு நகர ஆரம்பித்தனர். அப்பொழுது ஒருவன் துணிந்து வந்து பள்ளத்தில் இருந்தவரை தூக்க முனைந்தான். பார்வதி தேவியார் அவனையும் எச்சரிக்கை செய்தார். ஆனால் அவன் தான் இப்பொழுதுதான் கங்கையில் நீராடி வருவதாகவும் தன்னுடைய பாவமெல்லாம் கங்கையில் கரைந்து விட்டது என்று உரைத்து அவரைத் தூக்க பள்ளத்தில் இறங்கினான். அவனது பதிலைக் கேட்டு சிவனும், சக்தியும் மகிழ்ந்து அவனுக்கு சுய உருவில் காட்சி தந்து ஆசி கூறி மறைந்தனர்.

இதிலிருந்து நம்பிக்கையோடு கங்கையில் நீராடுபவர்களுக்குத்தான் அவர்களது பாவம் போகும் என்ற உண்மையை பார்வதி தேவியார் உணர்ந்து கொண்டார்.

எனவே, கங்கையின் மகத்துவத்தையும் அறிந்து போற்றுவோம்!

முத்தாரம்மே சரணம் !

Posted by Mutharamman Satsangam

1 comment:

  1. Our puja service are conducted strictly as per ancient Vedic rituals in our temple, installed in self-owned premises by well-versed learned Karmakandi priests from Shivkashi temple with live streaming facility on Skype.

    ReplyDelete