சித்திரை மாதத்தில் பௌர்ணமி திதியும்; சித்திரை நட்சத்திரமும் கூடி வருவருவதால் சித்திரா பௌர்ணமி என அழைக்கப் பெறுகின்றது. மாதத்தின் பெயரும், நட்சத்திரத்தின் பெயரும் ஒன்றாகி (சந்திரன் சித்திரை மாதத்தில் சித்திரை நட்சத்திரத்தில் சஞ்சரிக்கையில்), சூரியன் உச்ச பலம் பெறும் மேஷ இராசியில் (சித்திரைமாதத்தில்) வரும் பௌர்ணமி தினம் சிறப்புப் பெறுகின்றது
இத் திதியும், நட்சத்திரமும், மாதமும் அம்மனுக்குரியனவாக இருப்பதனால்; இத் தினம் அம்பாளை பூஜிக்க மிகவும் சிறப்புப் பொருந்திய நாளாக அமைகின்றது. அத்துடன் தாயாரை இழந்தவர்களுக்கு பிதுர் தர்ப்பணம் செய்யும் நாளாகவும், பிரம்மஹத்தி தோஷம் பிடித்தவர்கள் தோஷம் நீங்கும் விரதமாகவும் அமைகின்றது.
இத்தினத்தில் ஆலயங்களிலே குறிப்பாக அம்மன் ஆலயங்களில் பால்குடங்கள் எடுப்பது, திருவிளக்கு பூஜை, விஷேச அபிஷேக ஆராதனைகளும், வழிபாடும் சித்திரைக் கஞ்சி வார்ப்பும் இடம்பெறுகின்றது. சில ஆலயங்களில் பொங்கல் விழாவும் சிறப்பாக நடைபெறுகின்றன.
சிவாலயங்களிலும், பெருமாள் (விஷ்ணு) கோவில்களிலும் சிறப்பு அபிஷேகங்கள், இறை வழிபாடு, வீதி ஊர்வலங்கள் என்றும் சிறப்பாக நடைபெறுகின்றன.
அம்மனுக்குச் சிறப்புப் பொருத்திய இச்சித்திரா பௌர்ணமி விரத நாளிலேயே எமனின் சபையில் நம் பாவ புண்ணியக்கணக்கை இம்மியும் பிசகாமல் எழுதும் சித்திரகுப்தன் அவதரித்த நாளாகவும் இது கருதப்படுவதால் சித்திர புத்திரனார் விரதமும் அமைகின்றது.
ஒவ்வொருவரும் செய்யும் புண்ணிய, பாவங்களைக் கணிப்பவர் சித்திர புத்திரனார் என்பது நம்பிக்கை. நாம் செய்யும் புண்ணிய, பாவங்களை நமது இறப்பின் பின் கணித்து அதற்கேற்ப மோட்சமோ, நரகமோ, மறு பிறவியில் பெறும் உருவமோ வழங்கப்படும் என்பது இந்துக்களின் ஐதீகம். சில கோவில்களில் சித்திரகுப்த பூஜையும் செய்யப்படுகிறது.
எமதர்மனின் கணக்கரான சித்ர குப்தன் தோன்றியது சித்திரை மாத பௌர்ணமி நாளில் தான். அதே மாதத்தில், சித்திரை நட்சத்திர தினத்தன்றுதான் நீலாதேவி மற்றம் கர்ணிகாம்பா ஆகியோரை சித்ரகுப்தன் மணந்ததாகப் புராணம் சொல்கிறது.
திருவண்ணாமலையில் சித்ரா பௌர்ணமி கிரிவலம் வெகு விஷேஷம்.
குற்றாலத்தில் செண்பகதேவிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். அப்பொழுது மஞ்சள் மழை பெய்யும்.
அக்ஷய திருதியை போலவே இந்த நாளிலும் தானங்கள் செய்வது நன்மை தரும் என்று கருதப்படுகிறது.
வெய்யிலுக்கு இதமாக தயிர்சாதம், கைவிசிறி, பானகம், நீர்மோர் இவற்றை அந்தணர்களுக்குத் தானமாக அளிப்பது வழக்கம்.
உப்பில்லாமல் உணவருந்தி, பசும்பால், பசு நெய், பசுந்தயிர் தவிர்த்து சித்திரா பௌர்ணமி விரதம் இருந்து ஒரு மூங்கிலாலான முறத்தில் அரிசி, வெல்லம், மாங்காய், ஒரு நோட்டுப்புத்தகம், பேனா முதலியவையும் தானம் செய்யலாம்.
இவ்வளவு சிறப்பு வாய்ந்த சித்ரா பௌர்ணமி அன்று தேவியை பணிந்து நல்வாழ்வு பெறுவோம் !
முத்தாரம்மே சரணம் !
Posted by Mutharamman Satsangam
No comments:
Post a Comment