Jun 6, 2017

வைகாசி விசாகம் (07.06.2017)

விசாகம் ஸர்வபூதாநாம் ஸ்வாமிநம் க்ருத்திகா ஸுதம்
ஸதா பாலம் ஜடாதாரம் ஸ்கந்தம் வந்தே சிவாத்மஜம்.

விசாக நக்ஷத்திரத்தில் பிறந்தவரும், உலகிலுள்ள யாவருக்கும் தெய்வமாக இருப்பவரும், க்ருத்திகா தேவிகளின் புதல்வரும், எப்போதும் குழந்தை வடிவானவரும், ஜடை தரித்துள்ளவரும், பரமேஸ்வரரது குமாரருமான ஸ்ரீ ஸ்கந்தனை நமஸ்கரிக்கிறேன்.வைகாசி விசாகம் என்பது வைகாசி மாதத்தில் விசாக நட்சத்திரம் கூடி வரும் தினத்தைக் குறிப்பதாகும். இத்தினம் பலவகைகளில் சிறப்புப் பெற்றது. விசாக நட்சத்திரக் கூட்டம் ஆறு நட்சத்திரங்கள் ஒருங்கு இணைந்தது. வைகாசி விசாக நன்னாளில், முருகப்பெருமான் அவதாரம் நிகழ்ந்ததாக புராணங்கள் கூறுகின்றன.

தெற்கு திசையின் அதிபதியும், மரண தேவதையுமான எம தர்மராஜனுக்கும் உரியது வைகாசி விசாகமேயாகும். அன்று எம தர்மராஜனை வழிபடுவதால் நீண்ட ஆயுள் கிடைக்கும். 

திருமழபாடி திருத்தலத்தில் மழுவேந்திய சிவபெருமான் திருநடனம் புரிந்த நன்னாள் வைகாசி விசாகமாகும். 

பஞ்ச பாண்டவரில் ஒருவனான அர்ச்சுனனுக்கு இறைவன் பாசுபதம் என்னும் ஆயுதம் வழங்கியதும் இந்நாளில் தான்.

புத்த பெருமான் அவதாரம் செய்ததும் வைகாசி விசாகத்தில்தான் என்று பெளத்த மதம் கூறுகின்றது. ‘புத்த பூர்ணிமா’ (வெசாக் பெருநாள்) என்று இதனை அழைத்து மாபெரும் சிறப்புடன் கொண்டாடுகின்றனர்.

‘வேதம் தமிழ் செய்தான் மாறன் சடகோபன்’ என்று போற்றப்படும் நம்மாழ்வார் அவதரித்த தினம். இப்படி பல சிறப்புகள் கொண்டது வைகாசி விசாகம். 

தமிழ்க் கடவுளாம் முருகப் பெருமான்தான் சாஸ்திர ஜோதிடக் கலைக்கும் அதிபதி. எனவே, அவரது அவதார திருநாளாம் இந்த நன்னாளில் அவரை போற்றி, துதிசெய்து அபிஷேக, ஆராதனைகள் செய்து வர சகல சங்கடங்களும் நீக்கி வாழ்வில் வளமும் மகிழ்ச்சியும் அருள்வார். மனமுருக பிரார்த்தனை செய்தால் இறைவன் அருள் கட்டாயம் கிடைக்கும். 

சிவகுமாரனாகவும் திருமாலின் மருமகனாகவும் விளங்கும் ஞானபண்டிதன் முருகப் பெருமான் அவதரித்த விசாகம் குருவின் நட்சத்திரமாகும். எனவே குருதிசை, குருபுத்தி, குருவால் ஏற்படும் தடங்கல்கள் எல்லாம் நீங்க குரு ஸ்தலங்களில் பரிகாரங்கள் செய்து வழிபடலாம். குரு ஸ்தலமான திருச்செந்தூரில் ஸ்ரீசுப்ரமணிய சுவாமி, குருவின் அம்சமாகவே அருள்பாலிக்கிறார். 

வைகாசி விசாக தினத்தன்று அங்கு பரிகார பூஜைகள் செய்தால் பகை தீரும். திருஷ்டி, தோஷங்கள் விலகும். குழந்தை பாக்ய தடைகள் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகமாகும். ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். தடைபட்டுவந்த சுப காரியங்கள் சிறப்பாக நடக்கும். அருகே உள்ள முருகன் கோயிலுக்கு சென்றும் வழிபாடுகள் செய்யலாம். 

வைகாசி விசாகம் முருகனுக்கு மட்டுமின்றி சிவனுக்கும் உகந்த நாள்தான். சிவனை நினைத்து கலச ஸ்தாபனம் செய்து யாககுண்டம் அமைத்து வழிபட வேண்டும். 

அம்மன் கோவில்களிலும் வைகாசி விசாகம் சிறப்பாகக் கொண்டாடப்படும். மாரியம்மன், திரௌபதி அம்மன், காளியம்மன் கோவில்களில் அன்றைய தினம் தீமிதி விழா சிறப்புடன் நடைபெறும். கன்னியாகுமரி அம்மனுக்கு ஆராட்டு விழா நடத்துவதும் வைகாசி விசாகத்தில்தான்.

வைகாசி விசாகத்தன்று பிற கடவுள்களுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றாலும் அது முருகனுக்குரிய திருநாளாகவே கருதப்படுகிறது. 

அன்றைய தினம் பல்வகை காவடிகளை எடுத்துக்கொண்டு பக்தர்கள் கால் நடைப் பயணமாக முருகன் ஆலயங்களுக்குச் சென்று வேண்டுதல் நிறைவேற்றுவர்.

அன்றைய தினம் திருத்தலங்களுக்குச் செல்ல இயலாதவர்கள் வீட்டிலேயே கூட முருகனை வழிபடலாம். முதலில் அவர்கள் ஸ்நானம் செய்து, திருநீறணிந்து முருகன் படத்தை அலங்கரித்துக் கொள்ள வேண்டும். பின் நிவேதனப் பொருட்களை வைத்து தூப தீப நைவேத்தியம் செய்ய வேண்டும். முதலில் விநாயகர் அகவல் பாடி, பின் கந்தசஷ்டி கவசம், கந்தகுரு கவசம், காயத்ரி மந்திரம், கந்தர் அனுபூதி சொல்லி பூஜிக்க வேண்டும். சுப்ரமணிய ஷோடச நாமாவளி களையும் கூறலாம். இதன்மூலம் முருகனின் பூரண அருளைப் பெற்று பயனடையலாம்.

வைகாசி விசாக தினத்தில் முருகனை வணங்கி சகல யோகங்களும் பாக்யங்களும் பெறுவோமாக.

முத்தாரம்மே சரணம் !

Posted by Mutharamman Satsangam

No comments:

Post a Comment