பெற்றோரிடம் சிறிதளவும் பக்தியோ மரியாதையோ செலுத்தாமல் வாழ்ந்தவன் புண்டலீகன் என்பவன். ஆனாலும் தனது மனைவியுடன் காசி யாத்திரை சென்றான். பயணம் பலநாள் நீடித்ததால் ஒருநாள் இரவு ஒரு குடிசையின் திண்ணையிலே இருவரும் பொழுதைக் கழித்தனர்.
அதிகாலை வேளையில் தற்செயலாகக் கண்வழித்த புண்டலீகன், மூன்று அழகிய பெண்கள் அவன் தங்கயிருந்த வீட்டின் வெளிப்புறத்தைப் பெருக்கி கோலமிட்டு அலங்கரிப்பதைப் பார்த்தான். இந்தக் குடிசையோ மிகவும் சிறியது. இதன் சொந்தக்காரர் ஏழையாகத்தான் இருப்பார். ஆனால் இப்பெண்களோ அரச குமாரிகளைப் போலல்லவா இருக்கிறார்கள் என்று எண்ணி அப்பெண்களிடம் போய் “நீங்கள் யார்? இக்குடிசையில் இருப்பவர் யார்?” என்று வினவினான்.
அதற்கு அப்பெண்களும் “நாங்கள் கங்கை, யமுனை, சரஸ்வதி என்னும் நதி தேவதைகள். எம்மில் நீராடும் மக்களின் பாவங்கள் எம்மை வந்தடைகின்றன. அந்தப் பாவங்களைப் போக்கிக் கொள்வதற்காக இந்த வீட்டிலுள்ள பெரியவருக்கு பணிவிடை செய்கிறோம்” என்று கூறிச் சென்றுவிட்டனர்.
இந்த குடிசையிலிருக்கும் பெரியவரிடம் அப்படி என்ன விசேஷம்? என்று சிந்தித்த புண்டலீகன் பொழுது விடிந்ததும் அவரிடம் சென்றான். அவரிடம் எப்படிக் கதை தொடங்குவது என்று சிந்தித்து “பெரியவரே காசி இங்கிருந்து எவ்வளவு தூரத்தில் இருக்கிறது?” என்று கேட்டான். பெரியவரும் “அப்பா, நான் காசிக்குச் சென்றதில்லை. எனது வயதான பெற்றோர்களைக் கவனித்து வாழ்ந்ததால் அதற்கெல்லாம் நேரம் கிடைக்கவில்லை. அதனால் எவ்வளவு தூத்தில் இருக்கிறதென்று எனக்குத் தெரியாது” என்றார். பெற்றோரை மதித்திராத புண்டலீகன், அந்தப் பெரியவருக்கு நதி தேவதைகள் உபகாரம் பண்ணுவதின் தாத்பரியத்தை அப்போதான் புரிந்துகொண்டான். ‘தான் தன் பெற்றோரிடம் எப்படி நடந்தகொண்டோம்’ என்பதையும் எண்ணிப்பாரத்தான்.
காசிக்குப் பயணம் செய்யும் எண்ணத்தை விட்டுவிட்டுத் தன் பெற்றோருக்குப் பணிவிடை செய்யும் எண்ணத்துடன் ஊருக்குத் திரும்பினான் புண்டலீகன். அல்லும் பகலும் தன் பெற்றோருக்குச் செய்ய வேண்டிய பணிவிடைகளையே வாழ்க்கையின் தலையாய கடமையாக நினைத்துச் செய்துவந்தான். ஒருநாள் தனது தந்தையாருக்குப் பணிவிடை செய்து கொண்டிருந்தபோது பகவான் அவனுக்குத் தரிசனம் கொடுத்து “இவ்வாறு பெற்றொருக்கு பக்தி சிரத்தையுடன் சேவை செய்வதை மெச்சினோம். ஏதாவது வரம் வேண்டுமானால் கேள்” என்று திருவாய் மலர்ந்தருளினார்.
தனது தந்தையைக் குளிப்பாட்டி சேவை செய்து கொண்டிருந்ததால் இரண்டு செங்கற்களைப் பகவானின் எதிரில் வைத்து “சுவாமி இதன்மீது சிறிதுநேரம் நின்றுகொண்டிருங்கள், இதோ என் தந்தைக்கு பணிவிடை செய்துவிட்டு விரைவில் வந்துவிடுகிறேன்” என்று சொல்லிக்கொண்டே தந்தையிடம் சென்றுவிட்டான் புண்டலீகன்.
தன் கடமைகளைச் செய்து முடித்துவிட்டு நெடுநேரம் கழித்து பகவானை நிற்கச் சொன்ன இடத்துக்கு வந்தான். அவன் சுட்டிக் காட்டிவிட்டுச் சென்ற செங்கற்களின் மீதே நின்றுகொண்டு, புண்டலீகனின் வரவை எதிர்பார்த்துக் காத்திருந்தார் பகவான். புண்டலீகனும் தாமதத்திற்கு மன்னிப்புக்கோரி “இறைவா தங்களின் தரிசனத்தைப் பெறும் பாக்கியத்தை எனக்குக் கொடுத்தீர்கள். அதபோலவே எல்லா மக்களும் உங்களுடைய தரிசனத்தைப் பெற்று உய்வு பெறும்வண்ணம் இந்தச் செங்கற்கள்மீது எழுந்தருளியிருந்து பக்தர்களுக்கு தரிசனம்தரவேண்டும்” என்று வேண்டிக்கொண்டான்.
கருணைக்கடலான பகவான் அந்த இடத்திலேயே இப்போதும் பக்தர்களுக்குத் தரிசனம் தருகிறார். அந்த இடமே ‘பண்டரிபுரம்’ என்னும் திருத்தலமாகப் பக்தர்களால் போற்றப்படுகிறது.
வாழ்க்கைப் பாதையில் நாம் தவறுகின்றபொழுது நம்மைக் கண்டிக்க, திருத்த வாழ்க்கைக்குப் புதிய ஒளியைத்தர கடவுள் அனுப்பிய தேவதைதான் ‘கடமை’. அதிலும் பெற்றொருக்குச் செய்யும் கடமை மிக மிக முக்கியமானது.
பெற்றோரைத் தவிக்கவிட்டு வேதனை செய்பவனைப் பார்த்துக் கொண்டிருக்கும் இறைவன், அவன் எத்தனை வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டாலும் அவனது பாவங்களை மன்னிக்க மாட்டான்.
பண்டரிபுரத்தில் முக்கிய நாளாக ஆஷாட ஏகாதசி கொண்டாடப்படுகிறது .இது ஆஷாட மாதத்தில் ( ஜூன்-ஜூலை ) வரும் வளர்பிறை ஏகாதசியாகும் .
ஸ்ரீ பாண்டுரங்கனின் சிறந்த பக்தர்களான ஸ்ரீ துக்காராம் மகாராஜ் அவர்களும் ஸ்ரீ ஞானேஸ்வரரும் தமது பக்தர்களுடன் ஸ்ரீ பாண்டுரங்கனை தரிசிக்க பல மைல்கள் பாத யாத்திரையாக ( 150 - 200 கிமீ மேல் ) வந்து பண்டரிபுரம் அடைந்த நாள் ஆஷாட ஏகாதசி நாளாகும் .
ஓவ்வொரு ஆண்டும் இந்த சமயத்தில் மராட்டிய மாநிலம் தேஹு என்னும் இடத்திலிருந்து ஸ்ரீ.துக்காராம் அவர்களின் பாதுகைகளை தாங்கிய பல்லக்கு ஏராளமான பக்தர்களுடன் பண்டரிபுரம் நோக்கி வருகிறது . பக்தர்கள் பாத யாத்திரையாக ஸ்ரீ துக்காராம் மஹாராஜூடனேயே பாடிக்கொண்டு வருவதாக பாவித்து பாண்டுரங்கன் மேல் பல பாடல்களை பாடிக்கொண்டு ( இவற்றை அபங்கங்கள் என்று கூறுகிறார்கள் ) அந்த பல்லக்கை தொடர்ந்து வருகிறார்கள் .
இதுபோலவே மராட்டிய மாநிலம் ஆலந்தி என்னும் இடத்திலிருந்து ஸ்ரீ ஞானேஸ்வரரின் பாதுகைகளை தாங்கிய பல்லக்கு பக்தர்களுடன் புறப்படுகிறது. இவை சரியாக ஆஷாட ஏகாதசியன்று பண்டரிபுரம் சென்று சேரும் வகையில் பல நாட்களுக்கு முன்பாகவே புறப்பட்டு வருகிறது . ஆங்காங்கே பல ஊர்களிலிருந்தும் மக்கள் வழியில் சேர்ந்துகொள்ள பக்தர்கள் வெள்ளம் ஆஷாட ஏகாதசியன்று பண்டரிபுரத்தில் பிரவேசிக்கிறது , பாண்டுரங்கனின் பாடல்களை பக்தி பரவசத்துடன் பாடிக்கொண்டு...
ஸ்ரீ.துக்காராம் மஹராஜ் கி ஜே !
ஸ்ரீ ஞானேஸ்வர் மஹராஜ் கி ஜே !
ஸ்ரீ ருக்மணி சமேத ஸ்ரீ பாண்டுரங்க மஹராஜ் கி ஜே !!
MUTHARAMMAN SATSANGAM
தாயிற் சிறந்த கோயிலுமில்லை
ReplyDeleteதந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை.
ஜெய் பாண்டுரங்கா.