சூடித் தந்த சுடர் கொடி ஆண்டாள் நளவருடம், ஆடி மாதம் செவ்வாய்க்கிழமை, பூர நட்சத்திரத்தன்று அவதரித்தாள். அதனால், ஸ்ரீவில்லிபுத்தூரில், ஆடிப்பூரம் அன்று பெரும் தேர் திருவிழா நடைபெறும்.
வைணவக் கோவில்களில் மட்டுமல்லாது,அம்பிகை திருக்காட்சி தந்தருளும் அனைத்துத் திருக்கோவில்களிலும் திருவாடிப்பூரம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. திருவாடிப்பூரத்தன்று, அம்பிகைக்கு வளைகாப்பு நடந்ததாக ஐதீகம். ஆகவே, பெரும்பாலான கோவில்களில் அம்பிகைக்கு வளைகாப்பு உற்சவம் வெகு விமரிசையாக நடத்தப்படுகிறது.
திருநெல்வேலி காந்திமதியம்மனுக்கு, ஆடிப்பூர விழாவின் நான்காம் நாளன்று, ஊஞ்சல் மண்டபத்தில்நடைபெறும் வளைகாப்பு விழாவில் பக்தர்களுக்கு பிரசாதமாகத் தரப்படும் வளையலை வாங்கி அணிந்து கொள்ளும் பெண்களுக்கு விரைவில் வளைகாப்பு வைபவம் நடப்பது உறுதி என்பது நம்பிக்கை.
அன்னை ஆதிபராசக்தி சுயம்புவாக அருள்பாலிக்கும் மேல்மருவத்தூரிலும் ஆடிப்பூர உற்சவம் வெகு விமரிசையாக நடக்கிறது.
ஆடிப்பூரத்தன்று மீனாட்சியம்மன் உற்சவர் கருவறைக்கு எழுந்தருளுவார். அங்கு மீனாட்சிக்கும், உற்சவருக்கும் ஒரே சமயத்தில் உற்சவம் நிகழ்த்தப்படும்...
பெரியபாளையத்தில் வேப்பஞ்சேலை கட்டி பக்தர்கள் ஆடி வரும் திருவிழா மிகவிமரிசையாக ஆடிபூரம் அன்று நடைப்பெறும்.
அனைத்து அம்மன் கோவில்களிலும் சிறப்பு அபிஷேகங்கள் செய்விக்கப்பட்டு, அம்பிகை வளையல் அலங்காரத்தில் அருள் மழை பொழிகிறாள். எல்லா கோயில்களிலும் அம்பாளுக்கு வளையல் சாற்றுவார்கள், பக்தர்கள் காணிக்கையாக தரும் வளையல்களை அம்மனுக்கு சாற்றிவிட்டு பின்னர் அதை மங்கள பிரசாதமாக தரும் வளையல்களை அணிந்துகொண்டால் திருமண பாக்யம், குழந்தை பாக்யம் ,சகல நலங்களையும், வளங்களையும், நீங்காத செல்வத்தையும் பெறலாம் என்பது நம்பிக்கை.
No comments:
Post a Comment