அகில உலகெலாம் காக்கும் அன்னையான ஸ்ரீமஹாலக்ஷ்மி, வேண்டும் வரங்களைத் தரும் வரலக்ஷ்மியாக, நம் இல்லங்கள் தோறும் அருள் மழை பொழிய, தானே உகந்து வருகை புரிந்து வரம் பல தரும் நன்னாளே 'வரலக்ஷ்மி விரதமாகக் கொண்டாடப்படுகிறது.
செல்வத்தின் அம்சமாக இருந்து, நம் பாவ, புண்ணியத்திற்கேற்பவும், விதிப்பலனுக்கேற்பவும் செல்வத்தை வழங்கும் அவளுக்கு நன்றி தெரிவிக்கும் விரதமே வரலட்சுமி விரதம் ஆகும்.
பெண்கள் வரலட்சுமி விரதம் இருப்பதால், அஷ்ட லட்சுமிகளும் மகிழ்வதாக ஐதீகம். இதனால் மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும். திருமணதோஷம் உள்ள கன்னிப்பெண்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும். செல்வம், தான்யம், தைரியம், வெற்றி, வீரம், புத்திர பாக்கியம், கல்வி போன்ற செல்வங்கள் அனைத்தும் கிடைக்கும்.
வரலட்சுமி விரதம் இருக்கும் பெண்கள், லட்சுமியை பூஜிக்கும் போது அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம், கனகதாரா ஸ்தோத்திரம், மகாலட்சுமி ஸ்தோத்திரம் ஆகியவற்றை படிப்பது நல்லது. இதனால், குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகும் என்பர்.
ஆந்திர, கர்நாடக மாநிலங்களில் அனைவராலும் கொண்டாடப்படும் இந்தப் பண்டிகை, தமிழகத்தில் சில குறிப்பிட்ட குடும்பங்களில் மட்டுமே கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் இந்தப் பண்டிகையின் அழகியலையும், அதில் பொதிந்திருக்கும் தத்துவார்த்தங்களையும் உணர்ந்ததால், மெல்ல, மெல்ல, தமிழகத்திலும் இந்தப் பண்டிகை கொண்டாடும் வழக்கம் பரவி வருகிறது.
எத்தனை ஏழ்மையிலும் தன்னால் முடிந்த வரை பக்தியுடன் இப்பூஜை செய்பவர்களுக்கு அவள் நிச்சயம் அருள் பொழிவாள் - அப்போது கஷ்டப்பட்டாலும், தர்மத்துக்கே இறுதியில் வெற்றி என்பது போல, நிச்சயம் வருங்காலம் வளமானதாக இருக்கும். இது பணத்தினால் வரும் கஷ்டமாக இருந்தாலும் சரி, வேறு எந்த காரணமாக இருந்தாலும் சரி, அவள் கைவிடுவதேயில்லை. நடுவில் கடந்து போகும் காலங்களும் எப்படியோ அதிக கஷ்டம் தெரியாமல் போய்விடும்.
ஒவ்வொரு வருடமும், ஆடி அல்லது ஆவணி மாதம் பௌர்ணமிக்கு முன்னால் வரும் வெள்ளியன்று இந்தப் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
வரலக்ஷ்மி விரதம் பண்டிகை எப்போது வரும் என்று தெரிந்து கொள்ள எளிமையான வழி - பெரும் மகானான முத்துஸ்வாமி தீக்ஷிதர் சொல்லி விட்டுப்போன வழி.
ஸ்ரீ ராகக் கீர்த்தனையான ”ஸ்ரீவரலக்ஷ்மி நமஸ்துப்யம்” மிக அற்புதமான கீர்த்தனை. அதில் தான் தெளிவாகச் சொல்கிறார்.
”ஸ்ராவண பெளர்ணமி பூர்வஸ்த்த சுக்ர வாரே” என்று. ஸ்ராவண (ஆவணி) மாதத்து பெளர்ணமிக்கு முன்னால் வரும் வெள்ளிக் கிழமைக்கு உரியவளே என்று பொருள்.
”வரலக்ஷ்மி, ராவே மாயிண்டிகி” என்ற தெலுங்குப் பாடலும் புகழ்பெற்றது -.” வாத்சல்யமாக வாடி” என்றழைப்பது நெருக்கததை ஏற்படுத்துகிறது .
ஸ்ரீ மஹாலக்ஷ்மி வரலக்ஷ்மியாக, நமக்கு வரங்களை அள்ளி வழங்க இப்பூவுலகுக்கு வரும் நன்னாளில், அன்னையை நம் இல்லங்கள் தோறும் எழுந்தருளச் செய்து, நியமமுடன் பூஜித்து, பக்தியுடன், அம்பிகையைப் போற்றும் துதிகளைச் சொல்லி மனமுருக வணங்கினால், நாம் கேட்கும் வரங்கள் மட்டுமல்லாது, நம் அனைவருக்கும் அன்னையாகிய அந்த ஜகன்மாதா, இகபர சுகங்களையெல்லாம் வழங்குவது திண்ணம்.
வரலக்ஷ்மி விரதம் மூன்று நாட்கள் பண்டிகையாகக் கொண்டாடுவது வழக்கம். சிலர் இரண்டு நாட்களாகவும் கொண்டாடுகிறார்கள்.
எல்லோராலும் மிக விரிவாகச் செய்ய இயலாவிட்டாலும், ஈடுபாட்டோடு தெரிந்த பாடல்களைப் பாடி, மகாலட்சுமி அஷ்டோத்திரம் சொல்லி, பூக்களால் அர்ச்சனை செய்து, நிவேதனம் செய்து, நோன்பு சரடை கையில் கட்டி நிவேதனத்தை எல்லோருக்கும் கொடுத்து, வயதான சுமங்கலிப் பெண்களை வணங்கி தானங்கள் செய்து இந்த விரத பூஜையை நிறைவு செய்யலாம்.
கொஞ்சம் சாஸ்திரோக்தமாக விரதமிருந்து பூஜையைச் செய்ய விரும்பினால், விக்னேஸ்வர பூஜை தொடங்கி, சங்கல்பம், கலச பூஜை, பிராணப்ரதிஷ்டை, தியானம், ஷோடசோபசாரம், அங்க பூஜை, லட்சுமி அஷ்டோத்ரம், தோரக்ரந்தி பூஜை, பிரார்த்தனை, ஆரத்தி என்று விரிவாகச் செய்ய வேண்டும்.
விரத கதை
தேவலோகத்தில் சித்திரநேமி என்ற பெண் வசித்து வந்தாள். இவள், தேவர்களுக்கு இடையே ஏற்படும் பிரச்சனைகளை தீர்த்து வைக்கும் நீதிபதியாக இருந்தவள். ஒருசமயம் அவள் தீர்ப்பு சொல்லும்போது, பாரபட்சமாக நடந்து கொண்டாள். நீதி வழங்குபவர்கள் எந்த சூழ்நிலையி<லும் நடுநிலை தவறக்கூடாது. ஆனால், சித்திரநேமி தன் பணியில் இருந்து தவறி விட்டாள். எனவே, பார்வதிதேவி அவளுக்கு குஷ்டநோய் ஏற்படும்படி சபித்து விட்டாள். சித்திரநேமி சாப விமோசனம் கேட்டாள்.
வரலட்சுமி விரதம் இருந்து தன்னை வழிபட்டால் விமோசனம் கிடைக்கும் என்றாள். அதன்படி சித்தரநேமி, ஒரு குளக்கரையில் அமர்ந்து வரலட்சுமி பூஜை செய்து சாபம் நீங்கி, நோய் நீங்கப்பெற்றாள்.
பணியிலோ, குடும்ப விவகாரத்திலோ நடுநிலை தவறி, அதனால் மன உளைச்சலில் இருப்பவர்களுக்கு வரலட்சுமி விரதம் அனுஷ்டிப்பது மனபாரத்தை குறைக்கும் மருந்தாக இருக்கும். வரலட்சுமி விரதத்தன்று, புண்ணய நதிகளில் நீராடுவது, ஒரு வருடம் தொடர்ந்து வரலட்சுமி விரதம் இருப்பதற்கு ஒப்பான பலன்களைத் தரும். கங்கை, நர்மதை, கோதாவரி, காவிரி, தாமிரபரணி ஆகிய புண்ணிய நதிகளில் அன்று நீராடினால் செல்வச்செழிப்பு உண்டாகும் என்பது நம்பிக்கை. புகுந்த வீட்டு உறவினர்களை மதித்து நடக்கும் பெண்கள், வரலட்சுமி விரதம் இருந்த பலன்களை பெறுவதாக ஐதீகம்.
மகத நாட்டில் வசித்த சாருமதி என்ற பெண்ணை அவளது பெற்றோர் மண முடித்துக் கொடுத்தனர். புகுந்த வீட்டில் கணவன், மாமனார், மாமியார், உறவினர்கள் என அனைவரையும், அவள் சொந்தமாக பார்க்காமல், கடவுளின் வடிவமாகவே பாவித்து, பணிவிடை செய்தாள். இதனால், அவள் வரலட்சுமி விரதம் இருந்த பலனை பெற்றாள். தன் கணவனுடன் நீண்ட காலம் தீர்க்க சுமங்கலியாக வாழ்ந்தாள்.
விரதத்திற்கு முன் தினம் தயார் செய்து கொள்ள வேண்டியவை:
1.பூஜை செய்யும் இடத்தில், கிழக்குப் பார்த்தாற்போன்ற சுவரில் அம்மன் படம் வரைய வேண்டும். வரலக்ஷ்மி என்பது கஜலக்ஷ்மிதான். ஆகவே, அம்மன் படம் கஜலக்ஷ்மி படமாக இருப்பது நல்லது. படம், பொதுவாக, மாவிலையுடன் கூடிய கலசத்தை வரைந்து நடுவில் அம்மன் முகம், சுற்றிலும் தோரணங்களுடன் மண்டபம், கலசத்தின் அருகில், விளக்கு, கண்ணாடி, சீப்பு, மஞ்சள் கிழங்கு, குங்குமச் சிமிழ், மைக்கூடு, அம்மானை, கழக்கோடி எல்லாம் இருப்பதாக வரைவது சம்பிரதாயம். சிறியதாக இன்னொரு படம், வாசற்படிக்கருகில், அம்மனை அழைக்கும் இடத்திலும் வரைவது வழக்கம்.
தற்போது வரலக்ஷ்மி அம்மன் படங்களை வாங்கி ஒட்டி விடுகிறார்கள்.
2. வீட்டு வழக்கப்படி, முகம் வைத்தோ, செம்பில் முகம் வரைந்தோ, அல்லது மஞ்சள் பூசிய தேங்காயில் முகம் வரைந்தோ பூஜிக்கலாம்.
கலசத்திற்குத் தேவையான பொருட்கள்:
- பித்தளை, தாமிர, அல்லது வெள்ளிச் செம்பு/குடம்.
- அம்மன் முகம்.
- கலசத்திற்குக் கட்டும் பாவாடை அல்லது புடவை.
- வீட்டு வழக்கப்படி, நீர் விட்டுக் கலசம் வைப்பதாயிருந்தால், அதில் சேர்க்க வேண்டிய, வாசனை கலசத் திரவிய பாக்கெட்.
- அரிசிக் கலசமாயிருந்தால், அரிசி கால்படி, காதோலை கருமணி 2செட், வெற்றிலை, களிப்பாக்கு,இரண்டு மஞ்சள்கிழங்கு, ஒரு எலுமிச்சம்பழம், நாணயம். சிலர் உலர்பருப்பு, பழங்களையும் சேர்ப்பார்கள். அரிசியுடன் பாசிப்பருப்பு கலப்பதும் உண்டு.
- மாவிலைக் கொத்து.
- மஞ்சள் பூசிய தேங்காய்.
- அம்மன் ஜடை மற்றும் அலங்கார சாமான்கள்.
பூஜை சாமான்கள்:
- வாழை மரம், வாழை இலை.
- அரிசி, நெல் (கலசத்தை வைப்பதற்கு).
- மந்தஹாஸம் (இருந்தால்) அல்லது மண்டபம் போல் அமைக்கத் தேவையான பொருட்கள்.
- மாக்கோல மாவு
- தேங்காய், வெற்றிலை பாக்கு
- பழங்கள்(வாழைப்பழம், மாதுளம் பழம்,விளாம்பழம், கொய்யா பழம், பேரிக்காய், (மேலும் சில வகைப்பழங்களையும் வாங்கலாம்)
- தாம்பூலம் கொடுக்க கிஃப்ட் சாமான்கள், மங்கலப் பொருட்கள்.
- பூக்கள்: தொடுத்த சரம், அம்பிகைக்குப்போடுவதற்குச் சிறிய மாலை, பூஜைக்கு உதிரிப்பூக்கள் முதலியவற்றை வாங்கிக் கொள்ளவும். தாழம்பூ அம்பிகைக்கு மிக உகந்தது. செண்பகப்பூ, தாமரைப்பூ, ஆகியவற்றை பூஜைக்குப் பயன்படுத்துவது சிறந்தது
- நோன்புச் சரடு(அம்மனுக்கும் சேர்த்து ஒற்றைப்படையில் வாங்கவும்).
- நைவேத்தியங்கள் செய்வதற்கான காய்,மற்றும் மளிகைப் பொருட்கள்.
பொதுவாக, தமிழகத்தில், தேங்காய் கொழுக்கட்டை, உளுந்து கொழுக்கட்டை, எள்ளுக்கொழுக்கட்டை, பருப்புக் கொழுக்கட்டை முதலிய நால்வகைக் கொழுக்கட்டைகள், வடை, பாயசம், பச்சரிசி இட்லி முதலியவை செய்வது வழக்கம். அதற்கேற்றாற் போல், அரிசி மாவு, பூரணங்கள், பச்சரிசி இட்லிக்கு அரைப்பது போன்றவை முதல் நாளே செய்து கொள்ளலாம்.
தெலுங்கு, கன்னட வழக்கப்படி, போளி, பிசைந்த சாத வகைகள், சேமியா பாயசம் முதலியவை செய்கிறார்கள்.
· கறுப்புக் கலக்காத ரவிக்கைத் துணி(அம்மனுக்குச் சாற்ற).சில வீடுகளில் புடவை எடுத்து சமர்ப்பிக்கிறார்கள்.
· கஜ வஸ்திரம்(பஞ்சை தடிமனாகத் திரித்து, குங்குமத்தில் சிறிது நீர் தொட்டு, விரலால், நடுநடுவில் அழுத்தினால் வெண்பஞ்சு உருண்டைகளால் ஆன மாலை போல் வரும்(கீழுள்ள படத்தில் காட்டியது போல்).
முதல் நாள் செய்ய வேண்டிய வேலைகள்:
வீடு, பூஜை அறையை மெழுகி, ஸ்வாமிபடங்களைத் துடைத்துப் பொட்டு வைத்து, பூஜை சாமான்களைத் தேய்த்து, பஞ்சபாத்திர உத்தரிணி, தூபக்கால், தீபக்கால், பஞ்சமுக ஆரத்தி போன்றவற்றைத் தயாராக வைத்துக் கொள்ள வேண்டும்.
பூஜை செய்யும் இடத்தில், மந்தஹாஸம், அல்லது கழிகளை நட்டு, மேற்புறத்தில் ஒரு பட்டுத் துணியைப் போட்டு, பந்தலாகச் செய்து வாழைமரம் கட்டலாம். அல்லது ஒரு ஸ்டூல்/சிறிய மேசையைத் திருப்பிப் போட்டும் பந்தல் அலங்காரம் செய்யலாம்.
பந்தல் போட்டிருக்கும் இடத்தில் பெரிதாக மாக்கோலம் போட்டு காவி இடவேண்டும். ஒரு சின்ன பலகையிலும், அம்மனை அழைக்கும் இடத்திலும் சின்னதாகக் கோலம் போட வேண்டும். பூஜையறையிலும் போடவேண்டும்.
கலசம் தயாரித்தல்;
தாமிரச் செம்பாக இருந்தால், அதிலேயே முகம் வரையும் வழக்கம் இருந்தால், சுற்றிலும், சுண்ணாம்பைத் தடவிக் காய வைத்து, முகம் வரையலாம். இல்லாவிட்டால், செம்பில்/குடத்தில் சந்தனம் குங்குமம் இடவும்.
அம்மன் முகத்தை, நன்றாகத் துடைத்து, சந்தனம் குங்குமம் வைக்கவும். நகைகள் அதிகம் இல்லாத முகமாக இருந்தால், மென்மையாகத் தேய்த்து சுத்தம் செய்து, பின் விபூதியை மென்மையான துணியால் தொட்டுக் கொண்டு முகத்தைச் சுத்தம் செய்ய, பளிச்சிடும். கண்களுக்கு மை இட்டு திருஷ்டிப் பொட்டு வைக்கவும்.
கலசச் செம்பில்/குடத்தில், கலசச் சாமான்களைச் சேர்க்கவும்.
நீர்க்கலசமாயிருந்தால், செம்பு/குடத்தில் நீர் சேர்த்து, வாசனைக் கலச திரவியங்களை(பச்சைக்கற்பூரம், விளாமிச்சை வேர், ஜாதிக்காய், ஏலக்காய் முதலியன சேர்ப்பது வழக்கம். இப்போது இது சின்ன பாக்கெட்டுகளில் கிடைக்கிறது)சேர்க்கவேண்டும்
அரிசிக் கலசமாயிருந்தால், செம்பு/குடத்தில், முன்பு கூறிய அரிசி, வெற்றிலை முதலிய சாமான்களைச் சேர்க்கவும்.
அதன் மேல் மாவிலையை வைத்து, அதன் மேல் மஞ்சள் பூசிய தேங்காயை வைத்து, அதன் மேல் முகத்தை வைத்துக் கட்டவும். கலசம் வைக்கும் போது, மாவிலை ஒன்று தாழம்பூ மடல் ஒன்று என்று மாற்றி மாற்றி வைத்து அலங்கரிக்க அழகு மிளிரும்.
கலசத்திற்குப் பாவாடையைக் கட்டவும். சிலர் காதோலை கருமணியில் ஒரு செட் கலசத்திற்குள்ளும் மற்றொன்றை கலசத்தில் கழுத்தில் கட்டுவார்கள். ஜடை, பூச்சூட்டி அலங்கரிக்கவும். நகைகள் போட்டு வைக்கலாம்.
சிலர் அம்மனுக்கு தாழம்பூவால் ஜடை தைத்து அலங்கரிப்பார்கள். தாழம்பூ ஜடையில் கத்தி ஜடை, பெட்டி ஜடை என்று இருவகை இருக்கிறது. வெளிப்புறம் மடலின் நுனி வருமாறு தைப்பது கத்தி ஜடை. உட்புறம் மடக்கி வைத்துத் தைப்பது பெட்டி ஜடை. வாழை மட்டையில் பூக்களை வைத்தும் ஜடை தயாரிக்கலாம்.பூவால் பாவாடை தைத்து அணிவிக்கலாம்.
இப்போது விதவிதமான அலங்கார சாமான்கள் கிடைக்கின்றன. அவற்றை உபயோகித்தும் அலங்கரிக்கலாம். அலங்கரிக்கத் தெரியவில்லை என வருந்த வேண்டாம். மனப்பூர்வமான பக்தி இருந்தால் போதும். அலங்காரம் தானாக அழகாக அமையும். எளிமையான அலங்காரத்தில் கூட அம்பிகையின் அழகு கொலுவிருக்கும்.
பூஜை செய்பவர் ஒவ்வொருவருக்கும் ஒரு அம்மன் முகம் இருப்பதால்(நோன்பு வழக்கம் இருந்தால்,திருமண சீராக அம்மன் முகம் தருவது வழக்கம்), சில வீடுகளில் ஒன்றிற்கு மேற்பட்ட அம்மன் முகங்கள் இருக்கும். அவற்றை ஒரு கலசத்திலேயே வைத்துக் கட்ட வேண்டும். யாராவது புதிதாகத் திருமணமாகி தலை நோன்பு எடுப்பதாக இருந்தால் மட்டும், அவர் பூஜை செய்யத் துவங்கும் அம்மன் முகத்தைத் தனிக் கலசமாக அலங்கரித்து வைக்க வேண்டும். மறுவருடத்திலிருந்து ஒரேகலசமாக வைக்கலாம்.
சிலர் அம்மனை முதல் நாளே அழைக்கும் இடத்தில் அலங்காரம் செய்து வைப்பார்கள். அப்படியானால், அழைக்கும் இடத்தில் கோலமிட்ட மணையை வைத்து ஒரு வாழை இலையை கிழக்கு மேற்காகப் போட்டு, அதில் ஆழாக்கு அரிசியைப் பரப்பி, அதன் மேல் கலசத்தை வைத்து, அருகில் விளக்கேற்றி, பூ, அட்சதை போட்டு, வெற்றிலை பாக்கு பழம் நிவேதனம் செய்து, கௌரி கல்யாணம் பாடி வரவேற்பார்கள். மறு நாள் பூஜை செய்யும் இடத்திற்கு அழைத்து வந்து பூஜிப்பார்கள். சில வீடுகளில் முதல் நாள் கலசத்தை அலங்கரித்து வைத்து விட்டு மறுநாளே அம்மனை அழைப்பார்கள்.
சில வீடுகளில், முதல் நாள் பெண்கள் எண்ணை ஸ்நானம் செய்து, மஞ்சள் பொங்கல் செய்து வடகம் பொரிப்பார்கள். திருமகள் வருகையைக் குறித்து இவ்வாறு செய்வது வழக்கம். சில வீடுகளில் தலைநோன்பு யாராவது எடுப்பதாக இருந்தால் மட்டும் முன் தினம் இவ்வாறு செய்வார்கள்.
அவரவர் வீட்டுப் பெரியவர்களைக் கேட்டுக் கொண்டு குடும்ப வழக்கப்படி செய்து கொள்வது நல்லது.
மாதா பிதா த்வம் குருஸத்கதி: ஸ்ரீ:
த்வமேவ ஸஞ்ஜீவந ஹேதுபூதா |
அந்யம் ந மந்யே ஜகதேக நாதே
த்வமேவ ஸர்வம் மம தேவி ஸத்யம் ||
நமது தொன்மையான கலாசாரத்தின் அழகே இம்மாதிரி பண்டிகைகளை, பழமை மாறாமல், புதுமையும் கலந்து கொண்டாடுவதில் தான் இருக்கிறது. பழங்காலத்தில், ஆடம்பரமின்றி, எளிமையாக அதே சமயம் நியமங்கள் மாறாமல் கொண்டாடப்பட்டு வந்த இந்தப் பண்டிகையில், காலத்திற்குத் தகுந்தபடி, சில மாறுதல்கள் ஏற்பட்டன.
உதாரணமாக, முன்பு வீட்டு மட்டோடு இருந்த இந்தப் பண்டிகை, இப்போது அக்கம்பக்கத்தவரை வேறுபாடின்றி அழைத்து, விழா போல விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. மாவிலை கிடைக்காத இடங்களில், பிளாஸ்டிக் மாவிலை தோரணத்தோடு, செயற்கை பூ மாலைகள் அணிந்து, சிரித்த முகத்தோடு கொலுவிருக்கிறாள் தேவி. தன் மக்களின் நிலை அவளறியாமல் யார் அறிவார்?.
உள்ளத்தில் ஊற்றெடுக்கும் பக்தியொன்றைத் தவிர தன் மக்களிடம் யாதொன்றையும் எதிர்பாரா தயாபரியல்லவா ஸ்ரீ?
ஸ்ரீ வைணவத்தில், 'தாயார்' என்றே துதிக்கப்படும் அன்னையானவள், நாம் படுகின்ற துன்பத்தை, பெருமாள் உகக்கும் வண்ணம் ஏற்றிச் சொல்லி, அவர் கடைக்கண் பார்வை, நம்மீது பட்டு, நம் துன்பங்கள் நிவர்த்தியாகும் வண்ணம் அருள்புரிகிறாள்
வரலக்ஷ்மி விரதத்தன்று, அம்பிகையை தங்கள் வீட்டு மணப்பெண் போல அலங்கரித்து, அழைத்து, பூஜித்து, கொண்டாடி, பின் மறுநாள் பாடல்களால் மகிழ்வித்து, 'அடுத்த வருடம் மீண்டும் வந்து நல்லருள் புரிய வேண்டும்' என்ற வேண்டுதலோடு மாமியார் வீட்டுக்கு வழியனுப்பி வைக்கும் வரை இந்தப் பண்டிகை நீளுகிறது.
விரத தினத்தன்று காலை உபவாசம் இருந்து, பக்தியுடன் நியமமாகப் பூஜிக்க வேண்டும்.
பூஜையறையில், அலங்காரம் செய்யப்பட்ட, இடத்தில் ஒரு கோலமிட்ட மணையை வைத்து, ஒரு வாழை இலையைப் போட்டு, அதன் மேல் நெல்லைப் பரப்பி, அதன் மேல் மற்றொரு வாழை இலையைப் போட்டு அதன் மேல் அரிசியைப் பரப்பி வைக்கவும். ஒரு குழிவான வெள்ளி அல்லது பித்தளைத் தாம்பாளத்திலும் அரிசியைப் பரப்பி வைக்கலாம். கூஜா மாதிரியான பாத்திரத்தில் கலசம் வைப்பதாயிருந்தால் இவ்வாறு செய்யலாம். கலசம் அசையாதிருக்கும்.
- ஒரு சிறு தட்டு அல்லது வெற்றிலையில், மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைக்கவும். அட்சதை தயாரித்துக் கொள்ளவும்.
- வாசனைச் சந்தனத்தைக் கரைத்து வைக்கவும். தாழம்பூ குங்குமம் பயன்படுத்துவது சிறந்தது.
- ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு, விநாயகருக்குத் தனியாகவும், அம்பிகைக்குத் தனியாகவும் வைக்கவும். தேங்காய், பழங்களையும், அம்மாதிரியே வைக்கவும்.
- பூக்களைத் தயாராக வைக்கவும். ஸ்வாமி படங்களுக்கு சரங்களைச் சாற்றி, வீட்டுப் பெண்களும் தலைக்குப் பூ வைத்துக் கொள்ளவும். தாம்பூலம் தருவதற்குத் தனியாக பூ எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- விளக்கு, தீபக்காலில் திரியிட்டு நெய்/எண்ணை ஊற்றி வைக்கவும். கற்பூரத் தட்டில் கற்பூரம் வைக்கவும். ஊதுபத்தி/ தசாங்கம் எடுத்து வைக்கவும்.
- காலையில் அம்மனை அழைப்பதானால், அதற்குத் தேவையான, விளக்கு முதலியவற்றை அந்த இடத்தில் எடுத்து வைக்கவும்.
- நோன்புச் சரடில் 9 முடிச்சுக்களிட்டு, பூவையும் சேர்த்து முடிந்து வைக்கவும்.
- அம்பிகைக்குச் சாற்ற, மாலை, கஜவஸ்திரம், புடவை/ரவிக்கைத் துணி போன்றவற்றையும் தயார் நிலையில் வைக்கவும்.
- அர்க்யப் பிரதானத்திற்காக, காய்ச்சாத பால் ஒரு சிறு பாத்திரத்தில் வைக்கவும்.
- பாத்யம் முதலானவைக்காக, தனியாக ஒரு சிறு பாத்திரம் வைக்கவும்.
- மணி, முதலான பூஜை சாமான்களை எடுத்து வைக்கவும்.
- அம்பிகையின் பஞ்சாமிர்த ஸ்நான உபசாரத்திற்காக, ஒரு பாத்திரத்தில், பால், தேன், நெய், தயிர், வெல்லம் ஆகியவை சேர்த்து வைத்துக் கொள்ளவும். பழம் சேர்க்கும் வழக்கம் பின்னால் தான் வந்தது.
- ஸ்வர்ண புஷ்பத்துக்காக, ஒரு வெள்ளி அல்லது ஒரு ரூபாய் நாணயம் வைக்கவும்.
- ஒரு தட்டில் மஞ்சள், குங்குமம் கரைத்து ஆரத்தி நீர் தயாரிக்கவும். நடுவில் இரண்டு நெய் தீபங்களை/ ஜோதி விளக்குகளை வைத்து ஆரத்தி எடுப்பது சிறப்பு.
- 7 அல்லது 16 மா விளக்குகளைச் செய்து நடுவில் ஜோதித்திரி வைத்து எல்லாவற்றையும் ஒரே தட்டில் வைத்து ஆரத்தி எடுக்கலாம்.
- பாயசம், கொழுக்கட்டை, வடை, இட்லி, மஹா நைவேத்தியம் முதலான நிவேதனப் பொருட்களைத் தயாரித்து வைத்துக்கொள்ளவும்.
பூஜையின் போது:
மிகுந்த பக்தி சிரத்தையுடன், சந்தோஷமான மனநிலையில் செய்வது முக்கியம்.
நம் வீட்டுப் பெண்ணாக அம்பிகையைப் பாவித்து, உபசாரங்கள் செய்ய வேண்டும்.
அம்மனை காலையில் அழைக்கும் வழக்கம் இருந்தால், அழைக்கும் இடத்துக்கு அம்மன் கலசத்தை கொண்டு வைத்து, விளக்கேற்ற வேண்டும். அம்மன் கிழக்குப் பார்த்தது போல் இருக்க வேண்டும்.
பூ, அட்சதை தூவி, ஸ்தோத்திரங்களைக் கூறி வழிபாடு செய்ய வேண்டும். தூபம் காட்டி, வெற்றிலை பாக்கு பழம் நிவேதனம் செய்து, கற்பூர ஆரத்தி, ஆரத்தி எடுத்து வரவேற்க வேண்டும். "லக்ஷ்மி ராவே மா இன்டிகி' (லக்ஷ்மி தேவியே!!, எம் இல்லத்திற்கு வருவாய்)என்று அம்பிகையை வரவேற்று, வீட்டுப் பெண்கள் அனைவரும் கலசத்தை மெதுவாகத் தூக்கி வந்து பூஜை செய்யும் இடத்தில் வைக்க வேண்டும்.
அம்பிகைக்கு இரு புறமும் விளக்கேற்றி வைக்க வேண்டும். ஐந்து முகக் குத்து விளக்கில், ஐந்து முகங்களும் ஏற்றினால், அது திருக்கோவில் கருவறையில் இருக்கும் தெய்வ சாந்நித்யத்தைக் கொடுப்பதாக ஐதீகம். எனவே, ஐந்து முகக் குத்து விளக்கு ஏற்றலாம்.
ஆசன பூஜை, கண்டா பூஜை விக்னேஸ்வர பூஜை முதலான பூர்வாங்க பூஜைகளைச் செய்து விட்டு, அம்பிகைக்கு ஷோடசோபசார பூஜைகள் செய்ய வேண்டும்.
இதன் பின், அங்க பூஜை (பாதாதி கேசமாக, தேவியின் ஒவ்வொரு அங்கத்திற்கும்(உடல் உறுப்புகளுக்கும்) பூஜை) செய்ய வேண்டும்.
பின் ஸ்ரீ லக்ஷ்மி அஷ்டோத்திரத்தைக் கூறி பூஜை செய்ய வேண்டும். அதன் பின், தூப தீபங்கள் காட்டி, தேங்காயை உடைத்து, நைவேத்தியங்களைப் பக்தியுடன் சமர்ப்பிக்க வேண்டும். பழங்களின் மேல், ஒரு துளசித் தளத்தைப் போட்டு, சமர்ப்பிக்க வேண்டும். தாம்பூலத்தை நிவேதனம் செய்ய வேண்டும். ஸ்வர்ண புஷ்பமாக, நாணயத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். இதை மறு நாள் அம்மனை வழியனுப்பிய பின், பணம் வைக்கும் இடத்தில் வைக்கலாம் அல்லது திருக்கோவிலில் சமர்ப்பிக்கலாம்.
பானகம் வைப்பது மிக முக்கியம்.
கற்பூர ஆரத்தி காட்டி, கைநிறையப் புஷ்பங்களை எடுத்து, மும்முறை ஆத்மபிரதக்ஷிணம் செய்து தேவிக்குச் சமர்ப்பிக்கவேண்டும்.
அஷ்ட லக்ஷ்மியோடு, வரலக்ஷ்மியையும் சேர்த்து ஒன்பது லக்ஷ்மிகள். ஒன்பது லக்ஷ்மிகளுக்காக நோன்புச் சரடில் ஒன்பது முடிச்சுக்களிடுகிறோம். சரடுகளைப் பூஜித்து, அம்பிகைக்கு ஒன்றைச் சாற்றி விட்டு, தேங்காய்,வெற்றிலை பாக்கு பழத்தைக் கையில் வைத்துக் கொண்டு, மந்திரங்களைச் சொல்லி, சரடைக் கட்டிக் கொள்ளவும். முதலில் வயதில் மூத்த பெண்மணிகளுக்கு மற்ற யாராவது கட்டி விட்டு, பின் அவர் கையால் மற்றவர்கள் கட்டிக் கொள்ளலாம்.
பூஜைப்பலன் முழுமையாகக் கிடைப்பதற்காக, பூ,சந்தனம், ஒரு பழம் இவற்றுடன், பால் சேர்த்து, தேவிக்கு அர்க்யம் சமர்ப்பிக்கவும்.
தேவிக்கு ஆரத்திகள் காட்டி வழிபாடு செய்யவும்.
தேவியை, மனமாரப் பிரார்த்தித்து, பூஜையின் போது ஏதேனும் குற்றங்கள் ஏற்பட்டிருப்பின் மன்னிக்கக் கோர வேண்டும்.
வரலக்ஷ்மி விரத பூஜைக் கதையைப் பாராயணம் செய்யலாம். தலை நோன்பு எடுப்பவர்கள், இந்தப் பூஜையுடன், கிரஹப் ப்ரீதியும் சேர்த்துச் செய்வது வழக்கம்.
வீட்டு உபாத்தியாயருக்கு, தாம்பூலம், தட்சிணையோடு, பிரசாதங்களை வழங்கி அவர் ஆசி பெறுதல் வேண்டும். பிரசாதங்களை விநியோகிப்பது முக்கியம். இயன்றவர்கள், அன்னதானம் செய்யலாம்.
விரத தினத்தன்று, பூஜை செய்தவர்கள், பிரசாதங்கள், பலகாரம்(டிபன்) சாப்பிடுவதே வழக்கம்.
அன்று முழுவதும், மறு நாளும் தேவி நம்மோடு இருக்கிறாள். ஆகவே, இல்லத்தில் சுமுகமான சூழ்நிலை நிலவுவது முக்கியம். அம்மன் துதிப்பாடல்களைப் பாடி வழிபாடு செய்யலாம்.
சிலர், அன்று வெள்ளிக்கிழமையாக இருப்பதால், பெண்களை அழைத்துத் தாம்பூலம் தருவது வழக்கம்.
மறு நாள், சனிக்கிழமை, சுருக்கமாகத் தேவிக்குப் புனர் பூஜை செய்து, மஹா நைவேத்தியம் (பச்சரிசிச் சாதம், பருப்பு, நெய் சேர்ந்தது), தாம்பூலம் நிவேதனம் செய்து, கற்பூர ஆரத்தி காண்பிக்க வேண்டும். சில வீடுகளில் தயிர் சாதம் நிவேதனம் செய்வார்கள்.
அன்று மாலை, அக்கம்பக்கத்தோரை அழைத்து, தேவி முன் வரம் கோரல் பாடல்களைப் பாட வேண்டும். யார் யாருக்கு என்ன வரம் வேண்டுமோ, அவர் பெயரைச் சொல்லி, வரம் கேட்டுப் பாடுவது வழக்கம். திருமணமாக வேண்டும், வேலை கிடைக்க வேண்டும் என்பதிலிருந்து, பாப்பாவுக்குப் பருப்பு சாதம் வேண்டும் என்பது வரை அமைத்துப் பாடுவது வழக்கம்.
அதன் பின், தேவிக்குச் சுண்டல் நிவேதனம் செய்து, வந்திருப்போருக்குத் தாம்பூலம் தந்த பின், ஆரத்தி எடுத்து, புஷ்பம் அக்ஷதை சமர்ப்பித்து, 'அடுத்த வருடம், கட்டாயம் நம் இல்லம் எழுந்தருளி அருள் மழை பொழிய வேண்டும்' என்ற வரம் வேண்டி, அம்பிகையை யதாஸ்தானம் எழுந்தருளச் செய்ய வேண்டும்.
மதுரை மாவட்டத்தில், தேவியைக் கலசத்தோடு அரிசிப்பானைக்குள் வைப்பார்கள். பானைக்கு முன், சிறு கோலமிட்டு, ஒரு சிறு விளக்கேற்றி, வெற்றிலை, பாக்கு, பழம், பால் வைத்து ஊதுபத்தி ஏற்றி வைப்பார்கள். பின் அரிசிப்பானை இருக்கும் அறைக்கதவை மூடி, சயனப்பாட்டைப் பாடுவார்கள்.
அடுத்து வரும் வெள்ளிக் கிழமை அன்று கலசத்திற்கு உபயோகித்த அரிசி, தேங்காயை, பாயசமாகச் செய்து நிவேதிப்பது வழக்கம்.
முறையாகப் பூஜித்து வழிபடுவோருக்கு அன்னை வேண்டும் வரங்களைத் தருகிறாள்.ஆடம்பரமாகப் பூஜை செய்வதை விட, எளிமையும் ஆத்மார்த்தமுமாகப் பூஜிப்பதையே அன்னை விரும்புகிறாள். ஆகவே, எளிய பூஜை, இயன்ற நிவேதனங்கள், அளவிலா பக்தி இவற்றை அன்னைக்குச் சமர்ப்பிப்பது அன்னையை மகிழ்விக்கும். தாம்பூலத்திற்கு அனைவரையும் வேறுபாடில்லாமல் அழைத்துக் கொடுப்பதும், அது போல், யார் தாம்பூலத்திற்கு அழைத்தாலும் சென்று வருவதும் முக்கியம்.
வரலக்ஷ்மியை பூஜித்து, வரம் பல பெற்று,வெற்றி பெறுவோம் !!!!
ஓம் மஹாலக்ஷ்ம்யை நமஹ !
No comments:
Post a Comment