ஆடிச்செவ்வாய் விரதம் துர்க்கை, முருகனுக்குரிய விரதமாகும். செவ்வாய்க் கிழமைகளில் இராகு காலத்தில் அம்பிகையை பூசிப்பது விசேடமானது.
செவ்வாய் தோஷத்தாலும், நாகதோஷத்தாலும் திருமணம் தடைப்பட்டவர்கள், குழந்தைப் பாக்கியம் இல்லாதவர்கள் ஆடி செவ்வாய்க்கிழமைகளில் இராகுகாலத்தில் வழிபடுவதால் தோஷம் நிவர்த்தியாகி திருமணப் பாக்கியமும், பிள்ளைப் பாக்கியமும் கிடைக்கும்.
விவாகமான பெண்கள் தம் கணவனின் குறையாத அன்பைப் பெறவும், , மாங்கல்யம் நிலைக்கவும் இவ்விரத்தை அனுஷ்டிக்கின்றனர்.
"ஆடிச் செவ்வாய் தேடிக்குளி" என்ற பழமொழி ஒன்றே இவ் விரதத்தின் சிறப்பை உணர்த்துவதாக உள்ளது.
செவ்வாய் கிரகம் சனிக் கிரகம்போல் ஒரு ஜாதகருக்குப் பெரும் தோஷத்தை (கஷ்டத்தை) ஏற்படுத்தக் கூடியது. செவ்வாய், சனி போன்ற பாவக் கிரகங்கள் கோசாரமாக சஞ்சாரம் செய்யும் போது அதன் கதிர்வீச்சுக்கள் எம்மைத் தீவிரமாக தாக்குகின்றன. அதனால் அந்த ஜாதகர் உடல், உள்ளம் ரீதியாக பெரும் பாதிப்பை பெறுகின்றார். தீய கிரகங்களில் இருந்து வரும் கதிர்களை நல்லெண்ணையில் (எள் எண்ணை) சுவறிய எமது உடம்பு, தாக்க விடாது தடை செய்கின்றது. தீய கதிர்கள் எம் உடலில் தாக்கத்தினை ஏற்படுத்தாது தடுக்கவே இந்த எண்ணைமுழுக்கு என யூகிக்க முடிகின்றது. எனவே, ஆடி செவ்வாய் கிழமையில், மங்கள ஸ்நானம் செய்வது வழக்கமானது.
மேலும், செவ்வாய்க் கிழமைகளில் பெண்கள் எண்ணெய் வைத்து, மஞ்சள் பூசிக் தோய்ந்து விரதம் அனுஷ்டித்து அம்மனை வழிபட்டு வந்தால் மாங்கல்ய பலம் கூடும், தோஷங்கள் நிவர்த்தியாகும், மாங்கல்யத் தடை நீங்கும், பிள்ளைப் பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
முத்தாரம்மன் சத்சங்கம்
No comments:
Post a Comment