Jul 27, 2017

நாக சதுர்த்தி / கருட பஞ்சமி (27.07.2017, 28.07.2017)

ஆடியில் வரும் வளர்பிறை சதுர்த்தி சிறப்பு மிக்கது. இந்நாளில் சர்ப்பராஜர் எனப்படும் நாகராஜாவை வழிபட்டால் ராகு,கேது தோஷம் நீங்கும் என்பது ஐதீகம். நாகசதுர்த்தி நாளில் நாகருக்கு மஞ்சள் காப்பு அணிவித்து புது வஸ்திரம் கட்டி பால் அபிஷேகம் செய்து வழிபடலாம்.

கால சர்ப்ப தோஷம் உள்ளவர்கள் நாக சதுர்த்தி/பஞ்சமி நாளில் பூஜை செய்தால் கால சர்ப்ப தோஷத்தினால் ஏற்படும் இன்னல்கள் குறையும். மேலும், அவர்கள் கோயிலுக்கு சென்று அரசமரத்தடியில் உள்ள நாகர் சிலா ரூபத்திற்கு, மஞ்சள், குங்குமமிட்டு, பால் சமர்ப்பித்து, மலர்களால் கீழ்கண்ட ஸ்தோத்ரத்தை சொல்லி பூஜித்தால் நிச்சயம் இன்னல்களிலிருந்து விடுபட முடியும். 

அனந்தம் வாஸூகிம் ஸே²ஷம் பத்³மனாபம் ச கம்ப³லம்|
ஸ²ங்க²பாலம் தார்தராஷ்ட்ரம் தக்ஷகம் காலியம் ததா² ||
ஏதானி நவ நாமானி நாகா³னாம் ச மஹாத்மனாம் |
ஸாயங்காலே படே²ன்னித்யம் ப்ராத: காலே விஸே²ஷத: ||
தஸ்மை விஷபயம் நாஸ்தி ஸர்வத்ர விஜயீ பவேத் ||

நாகராஜனுக்கு உரிய சுலோகம்

"நாகராஜ மஹாபாகு ஸர்வாபீஷ்ட 
பலப்ரத நமஸ்கரோமி
தேவேச த்ராஹிமாம் கருணாநிதே
உமா கோமள ஹஸ்தாப்ய ஸம்பாவித 
லலாடகம்  ஹிரண்ய குண்டலம் 
வந்தே குமாரம் பஷ்கரஸ்ரஜம்'.

நாகர்கோவில் நாகராஜா கோயில், ராகு தலமான திருநாகேஸ்வரம் நாகேஸ்வரர் கோயில், கேது தலமான கீழப்பெரும்பள்ளம் (நாகப்பட்டினம் மாவட்டம்) கைலாசநாதர் கோயில்களில் வழிபடுவது சிறப்பு. புத்திர தோஷம் நீங்கி விரைவில் மழலைச் செல்வம் உண்டாவதற்கும், சகோதர பாசம் தழைக்கவும் இந்த விரதத்தை அனுஷ்டிக்கலாம். 

இந்த விரதத்தின் பின்னணியில் அன்பு மயமான ஒரு வரலாறும் உண்டு.

ஒரு வீட்டில் 7 சகோதரர்களுக்கு ஒரே ஒரு தங்கை. பெற்றோர் காலமாகிவிட்டதால், சகோதரர்கள்  அந்தத் தங்கையை கண் போல பார்த்துக்கொண்டார்கள்.

வயலில் வேலை செய்யும் சகோதரர்களுக்கு அவள் தினமும் மதியம் கஞ்சி எடுத்துச் செல்வாள். அன்று அவள் கஞ்சி எடுத்துக்கொண்டு போகும்போது மேலே கருடன் ஒன்று ஒரு பாம்பைக் கவ்விக்கொண்டு போனது. கருடன் வாயில் சிக்கித் தவித்த பாம்பு விஷத்தைக் கக்க அது கஞ்சியில் விழுந்தது.

அதை அறியாமல், அவள் விஷம் விழுந்த கஞ்சியைத் தன் சகோதரர்களுக்குக்  கொடுக்க அவர்கள் அனைவரும் மாண்டுவிட்டனர். அதைக் கண்ட அவள் தானும் அதைக் குடித்து உயிர் விட நினைத்தாள். அப்போது  வயது முதிர்ந்த ஒரு தம்பதியர் அவளைத் தடுத்து நாக பஞ்சமி / கருட பஞ்சமி விரதம் கடைப்பிடிக்கச் செய்து, விரதத்தின் நிறைவில் அட்சதை, புற்றுமண் ஆகியவற்றை உடன்பிறந்தவர்களின் வலது காதில்  வைக்கச் சொல்ல அவளும் அப்படியே செய்தாள். சகோதரர்களும் உயிர் பெற்று எழுந்தனர்.

நாகசதுர்த்தியன்று நோன்பிருந்து , புற்றுக்கு பால் வார்த்து பின் வீட்டில் 7 முடி போட்ட நோன்புக் கயிறு அணிந்து பூஜை செய்து கணவருக்காக வேண்டிக்கொள்வர்.

மறுநாளும் புற்றுக்குச் சென்று பால்வார்த்த பின் புற்று மண் எடுத்து வந்து சகோதரரின் வலது காதில் வைப்பார்கள். இதனால் சகோதர ஒற்றுமை உண்டாகும்.

கணவரின் நலனுக்காகவும், பிள்ளைகளின் நலனுக்காகவும் நாகசதுர்த்தி அன்றும், சகோதரர்களின் ஒற்றுமைக்காகவும் அவர்களின் தீர்க்காயுளுக்காகவும் கருடபஞ்சமி அன்றும்  விரதம் இருந்து பிரார்த்திப்போம். 

இன்று காலையில் நோன்பு இருக்க மறந்தவர்கள் மாலையிலாவது அருகில் இருக்கும் கோயிலுக்குச் சென்று அங்கு புற்று இருந்தால் அந்தப் புற்றில் பால் வார்த்து பிரார்த்தித்துக் கொள்ளலாம். புற்று இல்லாத கோயில்களில் அங்கே பிரதிஷ்டை செய்திருக்கும் நாகர் சிலைகளை வழிபட்டு அருள்பெறலாம்.

Posted by Mutharamman Satsangam 

No comments:

Post a Comment