Jan 29, 2017

சியாமளா நவராத்திரி கதை


ஒருமுறை ப்ரஹஸ்பதி பிரம்மாவிடம் மஹநவராத்திரி விரத கதையைக் கேட்டார். அதற்கு, ப்ரம்மா, ”குரு தேவா! உம்மால் உலக க்ஷேமத்திற்காக நல்ல கேள்வி கேட்கப்பட்டது. அதை உமக்காக சொல்கிறேன்என்று சொல்ல ஆரம்பித்தார். ஸ்யாமளா நவராத்திரியை மக நவராத்திரி என்றும், குப்த நவராத்திரி என்றும் அழைப்பார்கள். மஹநவராத்திரி தை / மாசி மாதத்தில் வரும் வளர்பிறை பிரதமை முதல் நவமி வரை ஒன்பது நாட்கள் செய்ய வேண்டும். இந்த விரதத்தை முதன்முதலாக ஒரு பெண்மணி அனுஷ்டித்து அன்னையின் அநுக்ரஹத்தை பெற்றுள்ளாள். சுனதா என்ற பிராமணனுக்கு துர்கையின் அருளால் ஒரு பெண் குழந்தை பிறந்தது. அதற்கு சுமதி என்று பெயர் வைத்து சீரும் சிறப்பாக வளர்த்து வந்தான்.

அவளும் அன்னையின் மேல் பக்தி செலுத்து வந்தாள். மேலும் பூஜை செய்வதை விட அவள் தன் அழகை பராமரிப்பிலும், தன்னை அலங்கரிப்பதிலும் அதிக ஆர்வம் கொண்டிருந்தாள். சுனதா பல முறை சொல்லியும் கேட்கவில்லை. எனவே அவளை ஒரு தொழுநோயாளிக்கு மணம் முடித்துக் கொடுத்தான். அதற்கு சுமதி முழு சம்மதம் தெரிவித்தாள். ஏனெனில், அவளுக்கு தெரியும் அன்னையின் அருள் இருந்தால் வாழ்க்கையில் வரும் எந்த துன்பத்தையும் நிக்கி விடலாம் என்று.

திருமணம் முடிந்த பிறகு சுமதி தன் கணவனோடு கானகம் சென்று, அன்னையை வேண்டி, மக நவராத்திரி விரதம் அனுஷ்டித்தாள். ஒன்பதாம் நாள் அன்னை சுமதி முன் தோன்றி, “மகளே ! வேண்டிய வரங்களை கேள்என்றாள். அதற்கு சுமதி அன்னையிடம், “நான் செய்த பாவம் என்ன ?” என்று கேட்டாள். அன்னை புன்னகைத்த படி, பூர்வ ஜன்ம கதையை சொன்னாள். சுமதி முன் ஜன்மத்தில், பதிவிரதையாக இருந்தாள். ஆனால் அவன் கணவனோ திருடன். அவன் ஒரு நாள் சிறையில் அடைக்கப்பட்டான். இவளும் அவனுடன் சேர்ந்து சிறை வாசம் அடைந்தாள். ஒன்பது நாட்களும் அன்ன ஆஹாரம் இல்லாமல் தெரியாமலே விரதம் அனுஷ்டித்தார்கள். அதன் பலனாக, இந்த பிறவியில் உயர்ந்த குலத்தில் பிறந்திருக்கிறார்கள். ஆனால் அன்னையின் விரதத்தை செய்ய மறந்ததால், அன்னை தொழுநோயாளியை கணவனாக கொடுத்தாள். இவ்வாறு அன்னை சொல்லி, “மகளே! உன் கணவன் தொழுநோயில் இருந்து விடுபடுவான். உனக்கு நல்ல சம்பத்துகள் பெருகும்; மேலும் என் அருளால், உனக்கு உத்கல என்ற மகன் பிறப்பான். அவன் மிக்க புகழுடன் விளங்குவான் என்று சொல்லி மறைந்தாள். பின் சுமதி தன் கணவனுடன் மங்களமாக வாழ்ந்தாள் என்று பிரம்மா நவராத்திரியின் பெருமையை குருவுக்கு விளக்கினார்.

எனவே, மக நவராத்திரி விரதம் அனுஷ்டித்தால், மங்கள வாழ்வு கிடைக்கும். மக நவராத்திரி நம்மை ஆபத்துகளில் இருந்து காப்பாற்றும்; மேலும் சாதகனுக்கு சித்தி அளிக்க வழிவகுக்கும். ஸ்யமளா நவராத்திரி கல்வி, கலை, வேள்விகளில் மேன்மை அளிக்கும்.

நாமும் அன்னையை நவராத்திரி காலங்களில் அவளை பணிந்து அவள் அருளைப் பெறுவோம்.


கண்களிக்கும்படி கண்டுகொண்டேன், கடம்பாடவியில் பண்
களிக்கும் குரல் வீணையும், கையும் பயோதரமும்,
மண் களிக்கும் பச்சை வண்ணமும் ஆகி, மதங்கர்க்குலப்
பெண்களில் தோன்றிய எம்பெருமாட்டிதன் பேரழகே

முத்தாரம்மே சரணம் !

Posted by Mutharamman Satsangam

No comments:

Post a Comment