Mar 29, 2017

நவதுர்க்கை தரிசனம்


 

சக்தியின் கோலமான துர்கா தேவி தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு தைரியம், துணிச்சல், நம்பிக்கை, அமைதி, சந்தோசம் போன்ற சகல சௌபாக்கியங்களும் கொடுத்து அருள் பொழிகிறாள். துர்கா தேவி தர்மத்தைக் காப்பதற்கும், தீமைகளை ஒழிப்பதற்கும் அந்தந்த காலகட்டத்தில் நவதுர்க்கைகளாக அவதாரம் எடுத்து அருள் புரிகிறாள்.


நவதுர்க்கை என்பது துர்க்கா தேவியின் ஒன்பது வடிவங்களைக் குறிக்கும். சைலபுத்ரி, பிரமசாரிணி, சந்திரகாண்டா, கூஷ்மாண்டா, ஸ்கந்தமாதா, காத்யாயினி, காளராத்திரி, மகாகௌரி, சித்திதாத்திரி என அன்னை ஒன்பது வடிவம் கொண்டிருக்கிறாள்.


தஸ்யாஸ்து ஸாத்விகீ சக்தீ ராஜஸீ தாமஸீ ததா |
மஹாலக்ஷ்மி: ஸரஸ்வதீ மஹாகாளீதி ச ஸ்திரிய: ||


தாஸாம் திஸ்ருணாம் சக்தீதாம் தேஹாங்கீகார லக்ஷணாத் ||


படைக்கும் பிரம்மா, காக்கும் மஹா விஷ்ணு, சம்ஹாரிக்கும் சிவன் ஆகியோரின் சக்தியான மஹா சரஸ்வதி, மஹா லக்ஷ்மி, மஹா காளி ஆகிய மூன்று சக்திகள் மேலும் மூன்று தேவிகளாக பிரிந்து நவதுர்க்கைகள் ஆயினர்.


சிவபெருமான் திருநடனம் புரிந்தபோது, அவர் தன் கால் விரல்களால் வரைந்த கோலங்களிலிருந்து நவராத்திரி தேவியர் தோன்றினர் என்று புராணங்கள் கூறுகின்றன. இந்த ஒன்பது தேவியருக்கும் வடநாட்டில்- குறிப்பாக காசி மாநகரில் கோவில்கள் உள்ளன.


பல்வேறு வேதங்களும், வராஹ புராணமும் துர்க்கைக்கு ஒன்பது வடிவங்கள் உள்ளதாக கூறுகின்றன.


மார்க்கண்டேயர் பிரும்மாவிடம் "மனிதர்களைப் பலவிதங்களிலும் காக்க உதவும் மிக ரகசியமான சாதனம் எது?' என்று வினவினார்.


அதற்கு பிரும்மா "தேவியின் பாதுகாப்புக் கவசம் ஒன்று மட்டுமே சிறந்த சாதனம். அது புனிதமானது. உயிர்களைக் காப்பது... எனவே, அவளைப் பூஜிப்பது ஒன்றே போதுமானது... சக்தியைப் பூஜிப்பவர்கள் தேவியை, சைலபுத்ரி, ப்ரம்மசாரிணீ, சந்தர காண்டா, கூஷ்மாண்டா, ஸ்கந்தமாதா, காத்யாயனீ, காலராத்ரி, மஹாகௌரி மற்றும் ஸித்திதாத்ரி என்ற ஒன்பது வடிவங்களில் பூஜிப்பார்கள். இதைச் செய்வதால் சகலவிதச் சித்திகளும் நம்மை வந்தடையும்.' என்றார்.



ப்ரதமம் சைல புத்ரீ ச த்விதீயம் ப்ரஹ்மசாரிணீ !
த்ருதீயம் சந்த்ரகண்டேதி கூஷ்மாண்டேதி சதுர்த்தகம் !!
பஞ்சமம் ஸ்கந்தமாதேதி ஷஷ்டம் காத்யாயனீதி ச !
ஸப்தமம் காலராத்ரீதி மஹாகௌரீதி சாஷ்டமம் !!
நவமம் ஸித்தி தாத்ரீ ச நவ துர்கா ப்ரீகீர்த்திதா !

உக்தான்யேதானி நாமானி ப்ரஹ்மணைவ மஹாத்மனா.!!
அந்த நவதுர்க்கை அவதாரங்களை பற்றி வரும் பதிவுகளில் தொடர்ந்து சிந்திப்போம் ...

முத்தாரம்மே சரணம் !


Posted by Mutharamman Satsangam

No comments:

Post a Comment