Apr 13, 2017

சித்திரை விஷு 14.03.2017


தமிழர் காலக்கணிப்பு முறையின்படி ஒரு ஆண்டுக்குரிய பன்னிரெண்டு மாதங்களில் சித்திரை முதலாவது மாதமாகும். 

மங்களம் பொங்கும் இந்த மாதத்தினை சைத்ரா என்றும்; சைத்ர விஷு என்றும் போற்றுகிறார்கள். இந்த நாளன்றுதான் நான்முகன் இப்பூவுலகைத் தோற்றுவித்தார் என்று புராணம் சொல்கிறது.

மீன ராசியிலிருந்து, மேஷ ராசிக்கு சூரியன் நுழைகின்ற தொடக்கமே தமிழ் புத்தாண்டாகும். இதன்பிரகாரம் திருவள்ளுவர் ஆண்டு 2049, ஆங்கிலமாதம் ஏப்ரல் 13ஆம் (13.04.2017) தேதி, வசந்த ருதுவுடன், உத்தராயன புண்ணிய காலம் நிறைந்த வியாழனன்று நள்ளிரவு (விடிந்தால் வெள்ளிக்கிழமை) 12 மணி 43 நிமிடத்துக்கு, கிருஷ்ண பட்சம் திருதியை திதி, விசாக நட்சத்திரம் 3-ம் பாதம், துலாம் ராசியில், மகர லக்னத்தில், நவாம்சத்தில் கும்ப லக்னம், மிதுன ராசியில், சித்தி நாமயோகம், பத்தரை நாமகரணத்தில், புதன் ஓரையில், சுப மங்களகரமான ஹேவிளம்பி வருடம்  பிறப்பதாக வாக்கிய பஞ்சாங்கமும், அன்றைய தினம் பின்னிரவு 02:02 மணிக்கு மங்களகரமான ஹேவிளம்பி வருஷம் பிறப்பதாக திருக்கணித பஞ்சாங்கமும் கணித்துள்ளன.

வழிபாடு

சித்திரை விஷு திருவிழா என்று கொண்டாடும்  இந்நாளில் நம் வீட்டில் வழிபாடு செய்வது பற்றி தெரிந்து கொள்வோமா! 

முதல் நாள் இரவு, ஒரு மேஜையில் சுத்தமான துணி விரித்து, ஒரு கண்ணாடியை வைக்க வேண்டும். கண்ணாடியின் முன்னால் நிறைநாழி நெல், தென்னம்பாளை, மா, வாழை, ஆப்பிள், ஆரஞ்சு, வெள்ளரி பழங்கள், செவ்வந்தி அல்லது கொன்றைப்பூ, நகைகள், தங்கக்காசுகள் வைக்க வேண்டும். 

சித்திரை விஷுவன்று காலையில், வீட்டிற்கு பெரியவர் எழுந்து அதைப் பார்க்க வேண்டும். பின், அவர் ஒவ்வொருவராக கண்ணை மூடி அழைத்து வந்து பழங்களை பார்க்கச் செய்ய வேண்டும். அனைவரும் நீராடியதும், திருவிளக்கேற்றி பூஜை செய்ய வேண்டும். 

ஹேவிளம்பி வருடத்தின் ராஜாதிபதி செவ்வாய். ஆகவே, இவ்வருடத்தில் அங்காரக சதுர்த்தி தினங்களில் விநாயகரை வழிபடுவதால், செவ்வாய் தோஷ குறைபாடுகள் நீங்கும். வாழ்வு செம்மையாகும்.

அம்பாள் கோயிலுக்கு சென்று வரலாம். புத்தாண்டு அன்று அனைத்து காய்கறிகளும் சேர்த்த கூட்டாஞ்சோறு சமைக்கலாம். வேப்பம்பூ பச்சடி, மாங்காய் பச்சடி, வாழைப்பூ மசியல் சமைப்பது வழக்கம். பால்பாயாசம் வைக்க வேண்டும். இதை முன்னோர்களுக்கு படைத்த பிறகு சாப்பிட வேண்டும். ஏழைகளுக்கு முடிந்தளவு தானம் செய்ய வேண்டும்.

சித்திரை மாத சிறப்புகள்

  • குலசேகரப்பட்டிணம் ஸ்ரீ முத்தாரம்மன் திருக்கோவிலில் சித்திரை விஷு அலங்கார தீபாராதனையுடன் சிறப்பாக கொண்டாடப்படும்…
  • சித்திரை முதல் தேதியன்று ஸ்ரீரங்கத்தில் பஞ்சாங்கம் படிக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
  • சித்திரை மாத பௌர்ணமி நாளில் சிவபெருமான் தங்கப் பலகையில் சித்திரம் ஒன்றினை வரைய, அதிலிருந்து சித்திரகுப்தன், அதாவது, எமதர்மனின் கணக்கர் தோன்றினாராம். அதே மாதத்தில், சித்திரை நட்சத்திர தினத்தன்று தான் நீலாதேவி மற்றும் கர்ணிகாம்பா ஆகியோரை சித்ரகுப்தன் மணந்ததாகப் புராணம் சொல்கிறது.
  • சித்திரை மாத திருதியை திதியில் மகாவிஷ்ணு மீன் (மச்சம்) அவதாரம் எடுத்ததாக இதிகாசங்கள் கூறுகின்றன.
  • சித்திரை சுக்கில பட்ச அஷ்டமியில் அம்பிகை அவதரித்ததாக தேவி பாகவதம் கூறுகிறது.
  • சித்திரையில்தான் அம்மன் கோவில்களில் பால்குடங்கள் எடுப்பது, திருவிளக்கு பூஜை செய்வது போன்ற இறை வழிபாடுகள் நடக்கின்றன.
  • சித்திரை மாதத்தில் வளர்பிறை காலத்தில் மூன்றாவது பிறை தோன்றும் நாளே அக்ஷய திரிதியை என்று அழைக்கப்படுகிறது.
  • சொக்கநாதர் - மீனாட்சியைத் திருக்கல்யாணம் செய்து கொள்ளும் விழா மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சித்திரையில்தான் நடைபெறும். கள்ளழகர் வைகை ஆற்றில் எதிர்சேவை விழாவும் மதுரையில் சித்ரா பௌர்ணமியன்று சிறப்பாகக் கொண்டாடப் படுகிறது.
  • சித்ரா பௌர்ணமியன்று தான் தேவேந்திரன் சொக்கநாதரை வழிபட்டுப் பேறுகள் பெற்றதாக புராணத் தகவல் உண்டு.
  • சித்ரா பௌர்ணமி அன்று திருவண்ணாமலையில் கிரிவலம் செய்வது விசேஷம். காரணம், அங்கே ஈசனை வணங்க வரும் தேவர்களின் அருளாசியும் அன்றைய தினத்தில் கிடைக்கும் என்பது ஐதீகம்.

முத்தாரம்மே சரணம் !

Posted by Mutharamman Satsangam

No comments:

Post a Comment