Apr 30, 2017

ஆதிசங்கரர் ஜெயந்தி (30.04.2017)




நமது சனாதன தர்மத்தை நிலைநிறுத்துவதற்காக அவதரித்த குருமார்களில் முக்கியமானவர், ஸ்ரீஆதிசங்கர பகவத் பாதர். ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தியின் அவதாரமாகவே கருதப்படும் ஸ்ரீஆதிசங்கரர், இப்போதைய கேரள மாநிலத்திலிருக்கும் 'காலடி' என்னும் புண்ணியத் திருத்தலத்தில், சிவகுரு, ஆரியாம்பிகை தம்பதியினரின் தவத்தின் பலனாக, திருஅவதாரம் செய்தார். 


இவரது காலம், ஏழாம் நூற்றாண்டு. இவரது தந்தை சிவகுரு; பணக்கார குடும்பம், படித்த குடும்பம். சிவகுருவுக்கு எர்ணா குளம் அருகிலுள்ள மேல்பாழூர் மனையைச் சேர்ந்த ஆர்யாம்பாளைத் திருமணம் செய்து வைத்தனர்; இருவருமே சிவ பக்தர்கள்.

இவர்களுக்கு நீண்டகாலமாக குழந்தை இல்லை. திருச்சூர் வடக்குநாதர் கோவிலுக்குச் சென்று, சிவனிடம், குழந்தை வரம் வேண்டி, தீவிர வழிபாடு செய்தனர். அவரது பக்தியின் பலத்தை சோதிக்க முடிவெடுத்தார் சிவபெருமான். சிவகுருவின் கனவில் தோன்றிய சிவன், "உனக்கு தீர்க்காயுள் உள்ள தீய குணங்களையுடைய, 100 புத்திரர்கள் வேண்டுமா அல்லது குறைந்த ஆயுளே உள்ள ஒரே ஒரு சிறந்த புத்திரன் வேண்டுமா?' என்றார்.

"என் மனைவியிடம் கேட்டு சொல்கிறேன்...' என்ற சிவகுரு, தூக்கத்திலிருந்து விழித்து, மனைவியிடம் நடந்ததைச் சொன்னார். "இது, நமக்கு சிவன் வைத்த சோதனை. இதில், நம் தேர்வு ஏதுமில்லை. அவர் ஏதோ முடிவு செய்து தான் இப்படி கேட்கிறார். எனவே, அவர் விருப்பம் எப்படியோ, அப்படியே செய்யட்டும்...' என்றார் ஆர்யாம்பாள்.

இந்த முடிவை திருச்சூர் சென்று, வடக்குநாதரிடம் கூறி, பிரார்த்தித்தனர். சுவாமி மீண்டும் கனவில் தோன்றி, "நானே உங்களுக்கு புத்திரனாக பிறக்கிறேன்; ஆனால், ஆயுள் எட்டு தான்...' என்று சொல்லி விட்டார். இறைவனே தங்கள் வயிற்றில் பிறப்பதாக தெரிவித்ததால், அவர்கள் மனதைத் தேற்றிக் கொண்டனர். ஆர்யாம்பாளின் வயிற்றில் ஐஸ்வரியமான ஒரு தேஜஸ் புகுந்தது; அவர் கர்ப்பமானார்.

சித்திரை மாத அமாவாசை கழித்து வந்த சுத்த பஞ்சமியை, வைகாச சுத்த பஞ்சமி என்பர். அன்று, சிவனுக்குரிய திருவாதிரை நட்சத்திரமும் இணைந்து வந்தது. ஐந்து கிரகங்கள் உச்சமாக இருந்த மதிய வேளையில் அவதரித்தார் சங்கரர்.

குழந்தைக்கு, "சங்கரர்' என்று பெயர் சூட்டப் பட்டது. சங்கரன் என்ற பெயருக்கு, என்றும் நிலையான மங்களத்தைச் செய்பவன்  என்று பொருள். அவரே, நம் சனாதன தர்மத்திற்கு நிலையான மங்களத்தைச் செய்யப் போகிறார் என்பதை அறியாமலேயே, அந்தப் பெயரையே தம் தவக்குழந்தைக்குச் சூட்டி மகிழ்ந்தனர் பெற்றோர். 

அவரது இளம் வயதில், ஒரு நாள், சிவகுரு வெளியூருக்குச் சென்றிருந்தார். ஆரியாம்பிகைக்கும் உடல் நிலை சரியில்லை. குழந்தையிடம், 'ஸ்வாமிக்கு ஏதேனும் நிவேதனம் செய்' என்றாள். உலகநாதனே ஒரு வடிவாகி வந்த சிறு குழந்தை யோசித்தது.... ஆம்!!! சிந்தனைக்கு எட்டாத சிவ வடிவம் யோசித்தது... அப்போது, பால் தரும் பணிமகள், ஒரு கிண்ணம் நிறையப் பாலைக் கொண்டு வந்து கொடுத்தாள்.

பாலை வாங்கிக் கொண்டு, அந்த பிஞ்சுக் குழந்தை, தன் சின்னஞ்சிறு பாதம் எடுத்து வைத்து, 'ஜல், ஜல் ' என கொலுசொலிக்க நடந்து பூஜா கிருகத்தை அடைந்தது. அப்பா பூஜை செய்யும் போது, பாலசங்கரன் அருகிருப்பது வழக்கம். எனவே, பாலை பூஜை கிருகத்தில் வைத்து விட்டு, மனப்பூர்வமாக, 'பாலை நிவேதனமாக அளிக்கிறேன்' என்று கண்களை மூடிக் கொண்டு, கூறியது.

கண்ணைத் திறந்து பார்த்தால்..காணோம் பால்!!. ஒரு கிண்ணம் பாலும் காணவில்லை. கிண்ணம் காலியாக இருந்தது. குழந்தை பதறிவிட்டது. சிறு உதடு துடிக்க, கண்களில் நீர் மழை கொட்ட, 'அழுது அருளினார்'பகவத் பாதர் . அழுகையினூடே திரும்பவும் கிண்ணத்தைப் பார்த்தால்... அது நிரம்ப, நிரம்ப பால் இருந்தது!!!. ஆச்சரியமும் மகிழ்ச்சியும் தாங்க இயலவில்லை குழந்தைக்கும். தன் கண்களைத் துடைத்து விட்டுக் கொண்டு பார்த்தது. கிண்ணத்தில் இருந்த பாலை எடுத்துப் பருகி ஆனந்தமடைந்தது.

அன்னை அன்னபூரணியின் திருவிளையாடலே இது.சங்கரருக்கு, ஞானத்தையே பாலாக அளித்து, பின்னாளில், தம் மேன்மையான கவிதா விலாசத்தால், பல வடமொழி நூல்களை அவர் அருளுவதற்கு வித்தூன்றி விட்டாள் அன்னை.  இதையே,  பகவத் பாதர்,  தம் சௌந்தர்யலஹரியில், 

தவ ஸ்தந்யம் மந்யே தரணிதரகந்யே ஹ்ருதயத:
பய: பாராவார: பரிவஹதி ஸாரஸ்வதமிவ
தயாவத்யா தத்தம் த்ரவிடசிசுராஸ்வாத்ய தவ யத்
கவீனாம் ப்ரெளடானாம் அஜநி கமநீய: கவயிதா

என்று அருளியிருக்கிறார். அக்காலத்தில் தென்னாடெங்கும் திராவிட நாடெனவே அறியப்பட்டது. ஆகவே, 'திராவிட சிசு' என்பது   சங்கரரைத் தான் குறிக்கும் என்பதே பெரும்பாலானோர் கருத்து.

மூன்று வயதாகும் போது, தந்தை சிவகுரு காலமானார். ஆர்யாம்பாள் மிகுந்த சிரத்தையுடன் குழந்தையை வளர்த்து வந்தார். ஐந்து வயதிலேயே சகல சாஸ்திரங்களையும் படித்து தேறினார் சங்கரர். படிக்கும் காலத்தில் பிச்சை எடுத்து, தன் குருவுக்கு கொடுத்து விட்டு, மீதியை உண்பது சங்கரரின் வழக்கம்.
ஒருமுறை, ஒரு ஏழைத் தம்பதியின் வீட்டில் பிச்சை கேட்டார். வீட்டில் முதல் நாள் ஏகாதசி விரதம் முடித்து, மறுநாள் துவாதசி விரதம் முடிப்பதற்காக ஒரே ஒரு நெல்லிக் கனியை மட்டும் வைத் திருந்தனர்; அதுவும் உலர்ந்து போயிருந்தது. அதையும், அவ் வீட்டுப் பெண், நிறைந்த மனதுடன் சங்கரருக்கு அளித்தாள். பரம ஏழையாக இருந்தாலும், தர்மம் செய்யும் எண்ணமுள்ள அவளைப் போன்றவர்களிடமே செல்வம் நிறைந்திருக்க வேண்டுமென எண்ணிய சங்கரர், லட்சுமியை வேண்டி, கனகதாரா ஸ்தோத்திரம் பாடினார்.

ல‌க்ஷ்மி தேவியைக் குறித்து, அமுதூறும் சொற்களால் பாமாலை பாடி, அம்பிகையின் திருநோக்கு, அந்த ஏழைத் தம்பதியர் மேல் திரும்ப வேண்டும் என மனமுருக வேண்டினார் ஆதிசங்கரர்.  

தத்யாத்தயானுபவனோ த்ரவிணாம்புதாராம்
அஸ்மின் அகிஞ்சன விஹங்கசிசௌ விஷண்ணே|
துஷ்கர்மகர்மமபநீய சிராய தூரம்
நாராயணப்ரணயினீ நயனாம் புவாஹ:|

("ஸ்ரீமந் நாராயணரின் பிரியத்துக்குகந்த உன் (ஸ்ரீலக்ஷ்மியின்) கடாக்ஷம் என்ற கார்மேகம்,   உனது கருணை என்ற பூங்காற்றின் துணை கொண்டு,  பல காலம்  செய்த  பாவமாகிய கோடை வெயிலை நீக்கி,  செல்வமாகிய பெரும் மழையை, இந்த   சாதகப் பட்சியின் மேல் பொழியட்டும்".)


"கனகம்' என்றால், "தங் கம்!' "தாரை' என்றால், "பொழிதல்!' லட்சுமி, அவர் முன் தோன்றி, "அந்தப் பெண், முற்பிறவியில் புண்ணியம் ஏதும் செய்யவில்லை; அதனால், அவள் ஏழ்மையையே அனுபவித்தாக வேண்டும்...' என்றாள். இருப்பினும், லட்சுமியிடம் வாதாடினார் சங்கரர். உடனே, அவ்வீடு முழுவதும் தங்க நெல்லிக்கனிகள் நிறைந்தன.

துறவறம் மேற்கொள்ள தாயிடம் அனுமதி கேட்டார் சங்கரர். ஆனால், தாயார் சம்மதிக்கவில்லை. ஒரு முறை தன் தாயுடன் நதியில் குளிக்கச் சென்றார். ஒரு முதலை அவரது காலைக் கவ்வியது. "துறவறம் பூண சம்மதித்தால், முதலை காலை விட்டு விடும். இல்லாவிட்டால், நான் இப்போதே முதலைக்கு இரையாகி விடுவேன்...' என்றார் சங்கரர். குழந்தை உயிரோடு இருந்தால் போதுமென தாயார் சம்மதிக்க, முதலை, காலை விட்டது. அவர் காசிக்கு சென்று தங்கினார்.

adi_sankara_chelas-1+(2).jpg (1131×1600)தன் ஆயுட்காலம் முடிந்ததை எண்ணிய அவர், கங்கையில் மூழ்கச் சென்றார். வியாசர் அவரைத் தடுத்து, " நீ செய்ய வேண்டிய புண்ணியச் செயல்கள் எவ்வளவோ உள்ளன; அவற்றை செய்ய இன்னும் சில ஆண்டுகள் வாழ்வாய்...' என்றார். அதன் பின், பல அற்புதங்களைச் செய்தார் சங்கரர். இறந்து போன மகனின் உடலுடன், மூகாம்பிகை கோவிலுக்கு வந்த ஒரு தம்பதியின் மகனுக்கு, உயிர் கொடுத்தார். சைவம், வைணவம், காணாபத்யம், சாக்தம், கவுமாரம், சவுரம் என்று பிரிந்து கிடந்த மதங்களை இணைத்து, "சனாதன தர்மம்' என்ற பெயரில் ஒரே மதமாக்கினார். 

இந்து சமயத்தின் மூன்று அடிப்படை நூல்கள் என்று அறிப்படும் பத்து உபநிடதங்கள், பிரம்ம சூத்திரம் மற்றும் பகவத் கீதைக்கு விளக்கவுரை அளித்து அவை போதிக்கும் அத்வைத வேதாந்தம் அதாவது இரண்டற்றது என்கிற அத்வதை தத்துவத்தை உலகத்திற்கு எடுத்துக்காட்டியவர்.

மேலும் விஷ்ணு சஹஸ்ரநாமம் போன்ற சமய நூல்களுக்கும் இவர் விளக்கவுரை நிருவியுள்ளதாக பொதுக் கருத்து உள்ளது. சிவானந்த லஹரி, கோவிந்தாஷ்டகம், பஜ கோவிந்தம், சித்தாந்த சாங்கியம், விவேகசூடாமணி, ஆத்மபோதம், உபதேச சாஹஸ்ரி, கனகதாரா ஸ்தோத்திரம், சுப்ரஹ்மண்ய புஜங்கம் போன்ற நூல்களை இயற்றியுள்ளார். 

சங்கரர் பாரதம் முழுவதும் பயணித்து தெற்கில் சாரதா பீடம், சிருங்கேரி, மேற்கில் துவாரகா பீடம், துவாரகை, வடக்கில் ஜோஷி மடம் மற்றும் கிழக்கில் கோவர்தன பீடம், புரி என நான்கு அத்வைத பீடங்கள் நிறுவி தன் சீடர்களான அஸ்தாமலகர், சுரேஷ்வரர், பத்மபாதர் மற்றும் தோடகர் என்பவர்களை ஒவ்வொரு பீடத்திற்கும் மடாதிபதிகளாக நியமித்தார். காஞ்சிபுரத்தில் சர்வக்ஞான பீடம் எனும் வேதாந்த கல்வி நிலையத்தை நிறுவினார். 32 வயது வரை அவர் வாழ்ந்தார்.

நாம் அவரது ஜயந்தி நாளன்று அவரை நினைக்காமலிருந்தால், அவரது பூஜையைச் செய்யாமலிருந்தால், அவர் காட்டிய வழியை கடைப்பிடிக்காமலிருந்தால் நம்மிடத்தில் செய்நன்றி காட்டாத தோஷம் ஏற்படும். இத்தோஷம் வராமலிருக்கட்டும் என்று நாம் இந்த சங்கர ஜயந்தி மஹோத்ஸவத்தைக் கொண்டாடுகிறோம். ஸ்ரீசங்கரர் காட்டிய பாதையில் சென்று நாம் ச்ரேயஸ்ஸை அடைய வேண்டும் என்பது நம் கடமையாகும்.

ச்ருதி ஸ்ம்ருதி புராணானாம் ஆலயம் கருணாலயம் |
நமாமி பகவத்பாத் சங்கரம் லோக சங்கரம் || (1)

(ச்ருதிகள், ஸ்ம்ருதிகள் மற்றும் புராணங்கள் ஆகியவற்றிற்கு இருப்பிடமானவரும், கருணைக்கு இருப்பிடமானவரும், போற்றத்தக்க பாதாரவிந்தங்களை உடையவரும், உலகத்திற்கு நன்மை செய்பவருமான சங்கரரை நமஸ்கரிக்கிறேன்.)

முத்தாரம்மே சரணம் !

Posted by Mutharamman Satsangam

No comments:

Post a Comment