ஸ்ரீமகாலட்சுமி விஷ்ணுவின் மார்பில் இந்நாளில்தான் இடம் பெற்றாள்; நிரந்தரமாகத் தங்கினாள். அஷ்ட லட்சுமிகளில் ஐஸ்வரிய லட்சுமியும், தான்ய லட்சுமியும் தோன்றிய நாளும் இதுதான்.
இந்த அட்சய திரிதியை நாளில்தான் பிட்சாடனரான சிவபெருமான் தன் கபால (பிரம்ம கபாலம்) பிட்சை பாத்திரத்தில் நிரம்பும் அளவு உணவை காசியில் அன்னபூரணியிடமிருந்து பெற்றுக் கொண்டார்.
முற்காலத்தில் வைசியன் ஒருவன் மிகவும் ஏழ்மையான நிலையில் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தான். அன்றாட உணவுக்கே வழியில்லை. ஆயினும், அவன் மிகவும் பக்தியுடன் வாழ்ந்து வந்தான். அவன் பக்தியைக் கண்ட பெரியோர், அவனிடம் அட்சய திருதியை வழிபாடு பற்றிக் கூறினார்கள். அவன் ஓர் அட்சய திருதியை நன்னாளில் அதிகாலை எழுந்து நீராடி, பாத்திரத்தில் அன்னம் வைத்து தண்ணீர், கோதுமை, சத்துமாவு, கரும்புச்சாறு, பால், தட்சிணை முதலானவற்றை ஏழை அந்தணர்களுக்குத் தானம் கொடுத்தான். அன்றைய வழிபாடுகளையும் முறைப்படி அனுசரித்தான். வறுமையின் காரணமாக அவனது மனைவி அவனைத் தடுத்தும்கூட, குறைவில்லாது அட்சய திருதியை நன்னாளை அனுசரித்தான் வைசியன். இதன் பயனாக அவன் தனது மறுபிறவியில் குஷபதி சக்ரவர்த்தியாகப் பிறந்து புகழ் பெற்றான் என புராணங்கள் பேசுகின்றன.
யுகங்களுள் இரண்டாவது யுகமான திரேதாயுகம், ஓர் அட்சய திருதியை திருநாளில்தான் ஆரம்பாமாயிற்றாம். தன் குருகுல நண்பனான ஏழைக் குசேலன் தன்னைப் பார்க்க வந்தபோது அவன் கொடுத்த மூன்று பிடி அவலைத் தின்று, பதிலாக கோடி கோடி செல்வங்களைக் கொட்டிக் கொடுத்து குசேலனை கிருஷ்ண பரமாத்மா குபேரனாக்கிய திருநாளும் இந்த அட்சய திருதியை நன்னாளில்தான்!
பரசுராமர் அவதரித்த நன்னாள், பலராமர் தோன்றிய பொன்னாள் அட்சய திருதியையே!
துரியோதனனின் சூழ்ச்சியினால், பஞ்ச பாண்டவர்கள் வனவாசத்தை மேற்கொள்ளக்கூடிய நிலை ஏற்பட்ட போது, ஆகாரத்துக்கு அவர்கள் கஷ்டப்படாமல் இருக்க அவர்களின் முக்கிய ஆலோசகரான கண்ணன், திரௌபதியிடம் இருந்து அந்த அட்சய பாத்திரத்தை வாங்கி அவர்களிடம் கொடுத்தார். அவர்களுக்குத் தேவையானபோது அந்த அட்சய பாத்திரத்தின் மூலம் அள்ள அள்ளக் குறையாத அன்னங்களை, அவர்கள் விருப்பப்பட்ட உணவுப்பொருட்களைப் பெற்று சந்தோஷமாகப் புசித்து வந்தார்கள். இதை நினைவுபடுத்தும் வகையிலும் இந்த அட்சய திருதியை கொண்டாடப்படுகிறது.
கௌரவர்கள் சபையில் துச்சாதனன் பாஞ்சாலியின் உடையை உருவி மானபங்கப்படுத்தினான். அப்போது கண்ணபிரான் அட்சய என்று கூறி கைகாட்டி அருள, துச்சாதனன் உருவ உருவ புடவை வளர்ந்து கொண்டே இருந்த நாள் இந்த அட்சய திரிதியை நாளில்தான். இதனால் தான் பாஞ்சாலி மானம் காப்பாற்றப்பட்டது.
இத்தகைய சிறப்பு வாய்ந்த திருநாளில், அம்பிகையை சரணடைந்து வாழ்வில் என்றும் வளம் பெறுவோம் !
முத்தாரம்மே சரணம் !
Posted by Mutharamman Satsangam
நன்றி அண்ணா
ReplyDeleteநன்றி அண்ணா
ReplyDelete