நவராத்திரியின் எட்டாம் நாளாம் அஷ்டமி நாளில் துர்க்கையை 'மகாகௌரி' என வழிபடுகின்றனர். மகா என்றால் பெரிய என்று பொருள். கௌரி என்றால் தூய்மையான எனப் பொருள். இவள் மிகுந்த வெண்மையாக இருப்பதால் மகா கௌரி எனப்படுகிறாள். கௌரி என்றால் பொன்னிறமானவள் என்றும் அர்த்தம் உண்டு.
16 வயது கன்னிகையாக சிவபெருமானை மணப்பதற்கு முன்பான பருவம் இது. அம்பிகை கன்னிகையாக, அசுரர்களை அழிக்கும் வல்லமை கொண்டு அவர்களை அழித்தாள். இதனால் ஏற்பட்ட உடல் சோர்வினால் அவள் உடலின் பொன் நிறம் மங்கி, அசுரர்களின் ரத்தமும், போர்க்களத்தின் புழுதியும் படிந்து மங்கிக் காணப்பட்டது. ஈசன் தன் சடாமுடியில் இருந்து கங்கை நீரை எடுத்து அவள் உடலைச் சுத்தம் செய்தார். கசடுகள் நீங்கி மீண்டும் பொன்போல் ஒளிர்ந்தாள் மகாகெளரி. அதனால் தேவியின் உடல் பால் போல வெண்மையானது.
தண்டகாரண்யத்தில் வாழ்ந்த முனிவர்கள், அசுரர்களால் துன்பப்பட்டு சிவபெருமானை வேண்ட, இறைவன் அந்த அசுரர்களை அழித்த பின் ஆடிய தாண்டவம் சுத்த தாண்டவம். அப்போது இறைவன் வரைந்த கோலத்திலிருந்து "மகாகௌரி' என்ற அன்னை தோன்றினாள்.
இவளுக்கு காசி அன்னபூரணி ஆலயத்தில் சந்நிதி உள்ளது.மேலும், கண்க்ஹல், ஹரித்வார் போன்ற ஸ்தலங்களிலும் மகாகௌரிக்கு தனி சன்னதி உண்டு.
சந்திரன், சங்கு போன்ற வெள்ளை உருவத்துடன் எட்டு வயதுப் பெண் போன்று நான்கு கைகளுடனும், மூன்று கண்களுடனும், காளையின் மேல் வீற்றிருந்து பரமேச்வரன் போல் காட்சியளிப்பாள். ஒரு கரம் சூலத்தையும், மறு கரம் மணியையும் தங்கி நிற்கும். மற்ற இரு கரங்கள் பக்தருக்கு அபயம் தரும் வகையில் உள்ளன.
இவளின் அருள் கிட்டினால் நம் வாழ்வு வசந்தமாகும். இவள் பக்தர்களின் பிரார்த்தனைகளை விரைவில் நிறைவேற்றுவாள் என நம்புகின்றனர்.
மனநலம் பாதிக்கப் பட்டோரும், உடல்நலம் பாதிக்கப் பட்டோரும் வணங்கக் கூடிய தெய்வம் இவள். இவளை வணங்கினால் சந்திரனால் ஏற்படும் மனசஞ்சலங்கள் அகன்று அறிவு சுடர் விட்டுப் பிரகாசிக்கும்.
பக்தர்களின் குறைகள் தீர்த்து வைக்கும் மகாகௌரி என்றென்றும் சந்தோசத்தை அள்ளித் தருகிறாள்.
தியான ஸ்லோகம் :
ஸ்வேத வ்ரூக்ஷே ஸமாரூடா ஸ்வேதாம்பரதராஸுசி |
மஹாகௌரி சுபம் த்த்யாத் மஹாதேவ ப்ரமோத்தா ||
(வெண்மையான காளையின் மீது ஏறி வருபவளும், தூய்மையான வெண்ணிற ஆடை அணிந்தவளும், தூய்மையானவளும், மகாதேவரின் நாயகியாம் அன்னை மகா கௌரி எனக்கு அனைத்து நலன்களையும், வளங்களையும் தர பிரார்த்தனை செய்கிறேன்)
மந்திரம்: ஓம் மஹாகௌர்யை நம:
அபிராமி அந்தாதி :
மங்கலை, செங்கலசம் முலையாள், மலையாள், வருணச்
சங்கு அலை செங்கைச் சகல கலாமயில் தாவு கங்கை
பொங்கு அலை தங்கும் புரிசடையோன் புடையாள், உடையாள்
பிங்கலை, நீலி, செய்யாள், வெளியாள், பசும் பெண்கொடியே.
என்றும் பசுமையான பெண் கொடியாக விளங்குபவளே! என்றும் சுமங்கலியே! செங்கலசம் போன்ற தனங்களையுடையவளே! உயர்ந்த மலையிலே உதித்தவளே! வெண்மையான சங்கு வளையல்களை அணியும் செம்மையான கரங்களையுடையவளே! சகல கலைகளும் உணர்ந்த மயில் போன்றவளே! பாய்கின்ற கங்கையை, நுரை கடலைத் தன் முடியிலே தரித்த சிவபெருமானின் ஒரு பாதி ஆனவளே! என்றும் பக்தர்களையுடையவளே! பொன் நிறமுடையவளே! கருநிறமுடைய நீலியே! சிவந்த மேனியாகவும் விளங்குகின்றவளே!
முத்தாரம்மே சரணம் !
Posted by Mutharamman Satsangam
No comments:
Post a Comment