Apr 5, 2017

நவதுர்க்கை - கூஷ்மாண்டா


வசந்த நவராத்திரி விழாவின் நான்காம் நாளாம் சதுர்த்தி அன்று அன்னை 'கூஷ்மாண்டா' என்ற வடிவம் கொள்கிறாள். இப்பெயர் மூன்று பகுதிகளை கொண்டது. கு, உஷ்மா, ஆண்டா என்ற இம்மூன்றும் முறையே சிறிய, வெப்பமான, உருண்டை என்ற பொருள் கொண்டது. இதை சேர்த்தால் சிறிய வெப்பமான உருண்டையான உலகை பொருளாக கொள்ளலாம். இதனால் கூஷ்மாண்டா என்றால் உலகை படைத்தவள் என்ற பொருள் வரும். அன்னை ஆதிசக்தி துர்கா தேவியின் படைத்தல் உருவம் கூஷ்மாண்டா ஆகும்.

வட மொழியில் கூஷ்மாண்டம் என்றால் 'பூசணிக்காய் ' என்று ஒரு பொருளும் உண்டு. திருஷ்டிப் பூஷணிக்காய் எப்படி தீவினைகளைப் போக்கிக் கண் திருஷ்டியைப் போக்குகிறதோ, அவ்வாறே அம்பிகை தன் பக்தர்களைத் தீவினைகள், தீயசக்திகள் அண்டவிடாமல் பாதுகாக்கின்றாள். எனவே, கூஷ்மாண்டா எனப் பெயர் பெற்றாள் என்றும் கூறுவர்.
முன்னொரு காலம் பிரளயம் ஏற்பட்டு உலகெல்லாம் அழிந்து போயிற்று. எங்கும் இருள் சூழ்ந்தது. தேவி கூஷ்மாண்டா அப்போது சிரித்தாள். அதனால் இருள் விலகி ஒளி பிறந்தது என புராணங்கள் கூறுகின்றன. அதனால் இவளே படைப்பின் சக்தி என கூறுவர் .இவள் சூர்ய மண்டலத்தை இயக்குபவள் என்றும் கூறுவர்.

சிவபெருமான் பகலும் இரவும் கூடும் வேளையில் ஆடிய தாண்டவம் சந்தியா தாண்டவம். அப்போது இடக்கால் பெருவிரலால் இட்ட கோலத்தை சப்த ஒலிக்கோலம் என்பர். இதிலிருந்து தோன்றியவள் கூஷ்மாண்டா. இந்த அன்னைக்கு காசியில் சௌக் கடைத்தெரு பகுதியில் ஆலயம் உள்ளது. மேலும், உத்தர பிரதேசத்தில் உள்ள கான்பூர் நகரம்  என்னும் இடத்தில் கூஷ்மாண்டாவுக்கு தனிக்கோவில் உண்டு.

உடல் சக்ரங்களில் இவள் 'அனாஹத ' சக்ரத்தில் இருப்பவள் . இந்நாளில் யோக சாதனை செய்வோர் இவள் அருள் கொண்டு இந்த சக்ரத்தை அடைவர். இதை அடைந்தோர் உடல் , மன வலிமை பெறுவர்.

இவள் அஷ்டபுஜம் (எட்டுகரம்) கொண்டவள். இவளின் எட்டுகரங்களில் முறையே பாசம், அங்குசம், வில், சூலம் இருக்கும். இவளின் எட்டாவது கரத்தில் கலசம் உண்டு. இக்கலசம் அஷ்ட சித்தியையும், நவ நிதியையும் பக்தர்களுக்கு தர வல்லது. வாகனமோ புலி.

கூஷ்மாண்டா தேவியின் அருள் பாவத்தை அழித்து, இன்பத்தை தர வல்லது. தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு நோயற்ற வாழ்க்கையைக் கொடுத்து அருள் புரிகிறாள்.

சுக்கிரதசை என்னும் அதிர்ஷ்டம் அடிக்க இந்தத் தேவியின் தயவு வேண்டும். சகல இடர்களையும் களைந்து செல்வம் தருபவள்.

தியான ஸ்லோகம் :

ஸுராஸம்பூர்ண கலசம் ருதிராப்லுத மேவசம் |
ததாநா ஹஸ்த பத்மாப்யாம் கூக்ஷ்மாண்டா சுபதாஸ்துமே ||

(தனது இரு தாமரைத் திருக்கரங்களில்   இரத்தம் நிரம்பிய இரு பூரண கலசங்களை ஏந்தி, சிருஷ்டியை ஸ்திதி  சம்ஹாரத்தை தனது கண் இமைப்பில் நடத்தும் கூஷ்மாண்டா தேவி அடியேனுக்கு எல்லா வளங்களையும் வழங்கட்டும். )

மந்திரம்: ஓம் கூஷ்மாண்டாயை நம:

அபிராமி அந்தாதி :

வாழும்படி ஒன்று கண்டு கொண்டேன், மனத்தே ஒருவர்
வீழும்படி அன்று, விள்ளும்படி அன்று, வேலை நிலம்
ஏழும் பரு வரை எட்டும், எட்டாமல் இரவு பகல்
சூழும் சுடர்க்கு நடுவே கிடந்து சுடர்கின்றதே.

தாயே! நீ கடல்களுக்கும் ஏழ் உலகங்களுக்கும், உயர்ந்த மலைகள் எட்டினிற்கும் அரிதில் எட்டாதவள். மேலாக உள்ள இரவையும், பகலையும் செய்யும் சந்திர சூரியர்க்கு இடையே நின்று, சுடர்விட்டுப் பிராகாசிக்கின்றவள்!

முத்தாரம்மே சரணம் !



Posted by Mutharamman Satsangam

No comments:

Post a Comment