Apr 5, 2017

நவதுர்க்கை - காத்யாயினீ



வசந்த நவராத்திரியின் ஆறாம் நாள் வழிபட வேண்டியவள் காத்யாயினி, இவளே மகஷாசுர மர்த்தினியும் ஆவாள். காத்யாயன முனிவர் புத்ரி ஆனதால், காத்யாயனி எனப்பட்டாள்.

காத்யாயானர் என்ற முனிவர் அம்பாளை நோக்கித் தவம் புரிந்தார். அவளைத் தரிசித்ததும், தாயே, தாங்களே எனக்குப் பெண்ணாகப் பிறக்க வேண்டும் என்று வரம் கேட்டார். அம்பாளும் அவருக்கு காத்யாயனீ என்ற பெயரோடு பெண்ணாகப் பிறந்தாள். துஷ்ட அசுரர்கள் பலரை அழித்து மக்களை காத்தவள்.

பதஞ்சலி முனிவர் மிருதங்கம் வாசித்த போது, அதற்கேற்ப நடனமாடி முனிவரை மகிழ்வித்தார் சிவபெருமான். எனவே இது முனிதாண்டவம் என்று பெயர் பெற்றது. இந்த தாண்டவத்தின்போது சிவபெருமான் இருகால்களால் வரைந்த கோலத்திலிருந்து தோன்றியவள் காத்யாயினி. காசி ஆத்ம விஸ்வேஸ்வரர் கோவிலின் பின்பக்க நுழைவாயிலை அடுத்துள்ள சுவரில் காத்யாயினி கோட்ட தெய்வமாக வழிபடப் படுகிறாள். டெல்லியில், சட்டர்பூரிலும், தஞ்சையிலும் இவளுக்கு கோவில்கள் உள்ளன. மேலும், கிராமப்புறங்களில், காத்தாயி என்று அழைக்கப்படுபவள் இவளே.

துர்கையின் ஆறாவது வடிவமான இவள், யோகத்திற்கும், ஞானத்திற்கும் அதிதேவதை. யோகிகள் இவள் அருளை துணை கொண்டு ஆறாம் சக்ரமான ஆக்ஞா சக்ரத்தை அடைவர்.

சிம்ம வாகனத்தில் தொடைமேல் கால்போட்டு அமர்ந்திருப்பாள். "சிம்மவாஹினி' என்றும் சொல்வர். இவள் நான்கு கரம் கொண்டவள். ஒரு கரம் தாமரை மலர் ஏந்தியும், மறு கரம் ஒளி வீசும் வாள் ஏந்தி காணப்படும். இரண்டு கைகள் பக்தருக்கு அபயம் தரும் விதத்தில் உள்ளன.

காத்யாயினியை மக்கள் மகள் வடிவாக வணங்குகின்றனர். இவளுக்கு அன்பு அதிகம். ஆனால் இவள் தீய சக்திகளை வேரோடு அழிப்பவள். இவள் பாவம் செய்பவரையும், அரக்க சக்திகளையும் கொல்பவள். இந்த தேவி எதிரிகளை நாசம் செய்யும் சக்தி கொண்டவள். இவளை வழிபட எதிரிகள் அழிவர்.

இவளின் கருணை மக்களின் துயர்களை ஓடச் செய்யும்.
தன்னை முழுமனதோடு பிரார்த்தனை செய்பவருக்கு விரும்பியதெல்லாம் அள்ளிக் கொடுக்கிறாள். காத்யாயினிதேவியை தினமும் வழிபடுபவர் பாவங்கள் விலகி மோக்ஷமடைகிறார்.

கோகுலத்து கோபியர்கள் கண்ணனை அடைய இவளையே தெய்வமாய் வழிபட்டு விரதம் இருந்தனர் என்பார்கள். கன்னியர் மனம் மகிழும்படிய்க் கணவனை அளித்துக் கல்யாணப் பேறு அளிப்பாள் இவள் என்று கூறுவார்கள்.

காத்யாயனி! மஹாமாயே! மஹாயோகின்யதீஸ்வரி!
நந்தகோபஸுதம் தேவி! பதிம் மே குரு தே நம:

அதாவது, காத்யாயன முனிவருக்கு பிறந்தவளும், மாயைகளுக்கெல்லாம் இருப்பிடமும், மகத்தான யோக ஸித்திகளை அடைந்தவளுமான ஹே தேவீ ! எனக்கு நந்தகோபருடைய புத்திரரான கிருஷ்ணனைக் கணவனாக அடைய அருள்வாய்! உன்னையே நமஸ்கரிக்கிறேன் என்பதாகும்.

இந்த ஸ்லோகத்தைப் பாராயணம் பண்ணும் கன்னியர்க்கு மனதுக்கிசைந்த மணாளன் கிடைப்பான் என்பது உறுதி.

இவளை வழிபட்டால், புத்தியும், ஞானமும் அளிக்கும் புதன் கல்வி, கலைகளில் சிறந்து விளங்க வைப்பதோடு, கல்யாணப் பேறும் அளிப்பார்.
தியான ஸ்லோகம் :

சந்த்ர ஹாஸோஜ்வலகரா சார்துல வர வாஹநா |
காத்யாயநீ சுபம் தத்யாத் தேவீ தாநவ காதிநீ ||

(திருக்கரத்தில் சந்திரஹாச வாளை ஏந்தி சிம்மவாகனத்தில் பவனி வந்து தேவர்களைக் காக்கும் காத்யாயினி அடியேனுக்கு எல்லா சுபங்களையும் வழங்கட்டும்.)

மந்திரம்: ஓம் காத்யாயன்யை நம:

அபிராமி அந்தாதி :

சுந்தரி எந்தை துணைவி, என் பாசத்தொடரை எல்லாம்
வந்து அரி சிந்துர வண்ணத்தினாள், மகிடன் தலைமேல்
அந்தரி, நீலி, அழியாத கன்னிகை, ஆரணத்தோன்
கம் தரி கைத்தலத்தாள்-மலர்த்தாள் என் கருத்தனவே

அன்னையே பேரழகானவள். அவள் என் தந்தை சிவபெருமானின் துணைவி. என்னுடைய அகம், புறமாகிய அனைத்து பந்த பாசங்களையும் போக்கக் கூடியவள். செந்நிறத் திருமேனியாள். அன்றொருநாள் மகிஷாசுரனின் தலை மேல் நின்று, அவனை வதம் செய்தவள் (அகந்தையை அழித்தவள்). நீல நிறமுடைய நீலி என்னும் கன்னியானவள். தன்னுடைய கையில் பிரம்ம கபாலத்தைக் கொண்டிருப்பவள். அவளுடைய மலர்த்தாளையே என்றும் என் கருத்தில் கொண்டுள்ளேன்.

முத்தாரம்மே சரணம் !



Posted by Mutharamman Satsangam

No comments:

Post a Comment