சிவபுத்ராய ரக்தஷாய கிராம பாலாய
அக்னிஸ்வரூபாய தயாமூர்த்தியே
சுடலைமாடஸ்வாமி நமோஸ்துதே!
சுடலை மாடனுக்கு உள்ள பல்வேறு பெயர்கள் இசக்கி மாடன், இருளப்பசாமி, பூல் மாடன், சுடலை மாடன் சாமீ, சுடலை ஈஸ்வரன், மாடசாமி, மாடன், மகாராஜா, சுடலேஷ்வரன், சுடலையாண்டி, சுடலை முத்து, மாசான முத்து, முண்டன் சாமி, மயாண்டீஸ்வரர், மாண்டி, பலவேசகரன் சுவாமி, ஊசிக்காட்டு சுடலை, முத்து சுவாமி, பத்மா பரம ஈஸ்வரன், வெள்ளை பாண்டி, ,தளவாய் மாடசாமி இரட்டைசுடலை மாடசாமி, பண்றி மாடன், பூக்குழி மாடன், சங்கிலி மாடன், ஆகாச மாடன் ,உதிர மாடன், என பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறார்.
சுடலை மாடன் சிவன் பார்வதியினால் படைக்கப்பட்டு அவர்களது மகனாக ஏற்கப்பட்டவர் என்பது நம்பிக்கை. பார்வதி தேவி தாய்ப் பாலைத் தராமல் அமிர்தத்தை ஊட்டி வளர்த்து வந்ததால் அந்தக் குழந்தை நாளடைவில் அதிக பசி கொண்டு அலைய துவங்கியது. கைலாசத்தின் மயானத்தில் இருந்த (மயானத்தை சுடலை என்றும் கூறுவார்கள்) எரிந்து கொண்டு இருந்த பிணங்களைத் தின்னத் துவங்கியது.
அதன் பிறகும் பசி அடங்காமல் போய் விலங்குகள், மரங்கள், பேய்கள் என அனைத்தையும் தின்னத் துவங்கியது. அந்த குழந்தை பிணம் தின்னும் பேயாகவே மாறி விட்டதால் அதை இனியும் தேவலோகத்தில் வசிக்க முடியாது என்று எண்ணிய சிவபெருமான் அதை பூலோகத்திற்குப் போய் அங்கு மக்களை ரட்சித்து வருமாறு பூலோகத்திற்கு அனுப்பினார் என்பது வரலாறு.
சீவலப்பேரி சுடலை
சுடலை மாடன் பிறப்புக் குறித்து உள்ள மற்றொரு கதை உள்ளது. திருநெல்வேலியில் உள்ள பாளையங்கோட்டையில் இருந்து பன்னிரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
சீவலப்பேரி எனும் கிராமம். அங்கு சுடலை மாடனின் ஒரு ஆலயமும் உள்ளது. தன்னுடைய பிள்ளையான முருகப் பெருமான் தங்கள் மீது கோபம் கொண்டு பழனிக்கு சென்று விட்டதும் பார்வதிக்கு இன்னொரு குழந்தை வேண்டும் என்ற ஆசை தோன்றியது.
அவள் தனது கணவர் சிவபெருமானிடம் அதை பற்றிக் கூற அவரும் அவளை மரகதக் கல்லினால் ஆன விளக்கில் தீபம் ஏற்றுமாறும் அது எரிந்து கொண்டே இருக்க வேண்டும் என்றார்.
ஆகவே சிவபெருமான் பிரம்மாவை அழைத்து அதற்கு குழந்தை உரு கொடுக்குமாறுக் கூற அதுவும் குழந்தையாக மாறி சுடலை என்ற பெயர் பெற்றது.
அது பெரியவனானதும் பசி பசி என எப்போதும் பசியால் துடித்து கைலாயத்தில் சுடுகாட்டில் இருந்த உடல்களைத் தின்னத் துவங்கியது. ஒரு நாள் அதன் உடலில் பிண வாசனை அடிப்பதைக் கண்ட பார்வதி, அதைப் பற்றி சிவனிடம் கூற கோபமுற்ற அவர் அதை கைலாசத்தில் இருந்து அனுப்பி விடுமாறு கூறினார்.
ஆகவே பார்வதி அதனுடன் இருபத்தி ஒரு பிடி சமைத்த உணவை தந்து வனப் பேச்சியை அழைத்து அதை அங்கிருந்து அழைத்துப் போய் விடுமாறு கூறினாள்.
அந்தக் குழந்தையும் தாமிரபரணியின் அருகில் இருந்த சீவலப்பேரியை அடைந்தது. அங்கு சென்றதும் அந்த சிறுவனுக்கு பசி எடுக்க அங்கு வந்த மசானம் என்ற ஆட்டு இடையனிடம் அவன் கொண்டு வந்த ஆட்டின் பாலைக் கறந்து தருமாறு கேட்க மசானமோ அது பால் தர முடியாத மலடி ஆடு என்றான்.
சுடலை விடவில்லை அதன் பாலைக் கரக்குமாறு கூற மசானமும் பாலைக் கறக்கத் துவங்க மலட்டு ஆடு நிறைய பாலை தந்ததும் அதை அந்த சிறுவன் குடித்தப் பின் அங்கேயே தங்கத் துவங்கியது.
சுடலை மாடனின் ஆலயங்களில் மாசிக்களரி என்ற வருடாந்திர விழா நடைபெறும். மூன்று நாட்கள் நடைபெறும் அந்த விழா குறிப்பிட்ட ஒரு தினத்தில் ஒரு வருடத்திற்கு ஒருமுறை, அல்லது இரண்டு வருடத்துக்கு ஒருமுறை அல்லது பல வருடங்களுக்கு ஒருமுறைதான் நடைபெறுமாம். அதில் பல சடங்குகள் உண்டு.
அதில் ஒன்று நாடு இரவில் மயானத்திற்கு போய் பூஜித்தல். அதை சுடலை மாட சாமி வேட்டைக்குப் போகுதல் என்பார்கள். அதில் கோமாரத்தாண்டிகள் எனப்படுபவர்கள் கலந்து கொண்டு தீப்பந்தங்களை ஏந்திக் கொண்டு வினோதமான முறையில் உடையை அணிந்து கொண்டு நடு இரவில் மயானத்துக்குச் செல்வார்கள்.
அவர்களை வழி நடத்திச் செல்பவரை கனியான் என்று கூறுவார்கள். கனியான் வழி முழுவதும் இரு புறமும் முட்டைகளை வீசிக் கொண்டே செல்வார். அதை பலி தருதல் என்கிறார்கள்.
அது சுடலை மாடனின் எல்லையைக் குறிக்குமாம். அதைக் கடந்து எந்த தீய ஆவிகளுமே வந்து கோமாரத்தாண்டிகளுக்கு இடையூறு செய்ய மாட்டார்களாம்.
அதன் பின் மயானத்துக்குச் சென்று சாமி ஆடியதும், அவர்களை வழி நடத்திச் செல்லும் கனியான் சாமியாடிகளுடன் மயானத்துக்குச் சென்று அங்கு வாழை இலையை போட்டு அதில் உணவுகளை வைத்தப் பின், சில சடங்குகளை செய்துவிட்டு அந்த உணவை உருண்டையாகப் பிடித்து நாலு பக்கமும் வீசுவார்.
அதற்கு முன்னால் அவர் தனது கையை கீறிக் கொண்டு அதில் இருந்து வெளிவரும் ரத்தத்தை அங்கு ஒரு பாத்திரத்தில் பிடித்து வைக்கப்பட்டுள்ள மிருகங்களின் ரத்தத்துடன் கலந்து அதை சுடலைக்குப் படைப்பார்.
தன் ரத்தத்தை இலையில் வைக்கப்பட்டு உள்ள உணவுடன் கலந்து அதற்குப் பிறகுதான் நாலு பக்கமும் வீசுவார். அந்த உணவுகள் பூமியில் விழாது என்றும் அவற்றை அங்கு சுற்றித் திரியும் பேய் பிசாசுகள் அப்படியே அவற்றை பூமிக்கு மேலேயே பிடித்துக் கொண்டு போய் விடும் என்றும் நம்புகிறார்கள்.
ஆகவேதான் சுடலை மாடனை பேய் பிசாசுகளின் அதிபதி என்றும், அவரால் மட்டுமே அவற்றைக் கட்டுப்படுத்தி வைக்க முடியும் என்றும் நம்புகிறார்கள்.
சுடலை மாடசாமி கோயில்களில் அசைவ உணவு வகைகள் படைக்கப்படுவதால் புரோகிதர்கள் மூலம் பூசைகள் செய்யப்படுவதில்லை. ஒரு சில கோயில்களில் மட்டும் ஓதுவார்கள் பூசைகள் செய்து கொண்டிருக்கின்றனர்.
அவர்கள் இந்தப் மிருகங்களைப் பலியிடும் நடைமுறைகளில் கலந்து கொள்வது இல்லை. ஆனால் இக்கோயில்களில் அதிகமாக அந்தக் கோயில் வைத்திருக்கும் சமூகத்தைச் சேர்ந்தவர்களே பூசைப் பணிகளைச் செய்து வருகின்றனர்.
சுடலை மாடசாமி கோயில்களுக்கு பெரும்பாலும் கூரை வேயப்படுவதில்லை. அப்படியே கூரை வேயப்பட்டிருந்தாலும் அவை எளிமையாகவே இருக்கிறது.
சுடலை மாடன் அன்னை பகவதியின் காவலனாகவும். ஏவலனாகவும் பணிபுரிந்து வருகிறார்.
அங்கிருந்து பிடி மண் மூலம் தென் தமிழ்நாடு முழுக்க இன்று சுடலை ஆண்டவன் பரந்து விரிந்து தன் ஆட்சியை நடத்தி வருகிறான்.
சுடலை ஆண்டவன் சன்னதியில் பொய் சத்தியம் செய்பவர்களுக்கும் அவர்கள் குடும்பத்தின் தலைமுறையும் பூண்டற்று போய்விடும் என அசைக்க முடியாத நம்பிக்கை இன்னும் மக்களிடம் ஆழமாக வேறூன்றி உள்ளது.
எல்லா தெய்வங்களுக்கும் போலவே பிரத்யேகமான வழிபாட்டு முறைகள் சுடலைக்கும் உண்டு. இவருக்கு நடு ஜாம படைப்பு என்பது மிக விசேஷமானது ஊன் கலந்த சோறு அர்த்த ஜாம பூஜையில் படைக்கப்பட்டாலும் முட்டை தேங்காய் கலந்த சாவாப்பலி என்ற உணவு இவருக்கு உண்டு.
இவருக்கு ஜாதி பேதமின்றி யார் வேண்டுமென்றாலும் பூஜை செய்யலாம் ..
முத்தாரம்மே சரணம் !
Mutharamman Satsangam
No comments:
Post a Comment