Apr 27, 2017

அட்சய திருதியை (28.04.2017)

பவுர்ணமி அல்லது அமாவாசைக்குப் பிறகு வரும் மூன்றாவது திதி நாள் திருதியை. சயம் என்றால் தேய்தல் என்று பொருள். அட்சயம் என்றால் தேயாது, குறையாது, வளர்தல் என்று பொருள். 

சித்திரை மாத வளர்பிறையில் வரும் திருதியை நாளே அட்சய திருதியை எனப்படுகிறது. எல்லா நலன்களையும் குறைவிலாது அள்ளிக் கொடுக்கும் இந்தத் திருதியை நன்னாளை அட்சய திருதியை என அழைத்துப் போற்றிக் கொண்டாடுகின்றனர்.

அமாவாசைக்குப் பிறகு வரும் மூன்றாவது திதி நாளான திருதியைத் திருநாள் திருமகளுக்குரிய நாளாகத் திகழ்கிறது. அதிலும் தமிழ் மாதத்தில் , சித்திரை மாத அமாவாசைக்குப் பிறகு வரும் 3-வது பிறையான அட்சயத் திருநாள் மிகவும் மகிமைமிக்கது என சாஸ்திரங்கள் கூறுகின்றன. 

அட்சய திருதியை அன்று என்ன செய்ய வேண்டும்?

அட்சய திருதியையில், எதைச் செய்தாலும் வளர்ந்துகொண்டே இருக்கும். அன்று கொடுக்கும் தானம், அளவற்ற புண்ணியத்தைக் கொடுக்கும். அன்று பித்ருக்களுக்கு பிதுர்பூஜை என்று சொல்லக்கூடிய தர்ப்பணங்களைச் செய்து அவர்களின் ஆசியைப் பெற்றால், குடும்பமும் வாரிசுகளும் வளர்ச்சியடைவார்கள்.

இந்நாளில் வாங்கப்படும் எந்தப் பொருளும் இல்லத்தில் குறைவின்றி நிறைந்திருக்கும் என்பது நம்பிக்கை. எனவேதான் இந்நாளில் தங்கம் வாங்க விரும்புகின்றனர். ஆனால் இவ்வளவு விலை உயர்ந்த பொருளை அனைவராலும் வாங்க இயலாது. அதற்காக மனம் தளர வேண்டாம். நமக்கு மிகவும் உபயோகமான பொருட்களை வாங்கிப் பயனடையலாமே. அன்று உப்பு, அரிசி மற்றும் தேவையான ஓரிரு ஆடைகள், ஏதாவது ஒரு சிறு பாத்திரம் என வாங்கலாம். எப்படியும் நாம் மாதாமாதம் மளிகைப் பொருட்கள் வாங்கி ஆக வேண்டும். அதனை இம்மாதத்தில் மட்டும் இந்த அட்சயதிரிதியை நாளில் வாங்கி வளம் பெறலாமே. 

ஸ்ரீலட்சுமியானவள் வைகுண்டத்தில் மகாலட்சுமியாகவும், பாற்கடலில் ஸ்ரீலட்சுமியாகவும், இந்திரனிடம் சுவர்க்க லட்சுமியாகவும், அரசர்களிடம் ராஜ லட்சுமியாகவும், வீரர்களிடம் தைரிய லட்சுமியாகவும், குடும்பத்தில் கிரக லட்சுமியாகவும், பசுக்களில் கோமாதாவாகவும், யாகங்களில் தட்சிணையாகவும், தாமரையில் கமலையாகவும், அவிர்பாகம் அளிக்கும்போது ஸ்வாகா தேவியாகவும் விளங்குகிறாள். இப்படி சகல யோகங்களுக்கும் ஆதாரமாக விளங்குபவள் லட்சுமிதான். எனவே, அட்சய திரிதியை அன்று ஸ்ரீமன் நாராயணனின் இணைபிரியாத தேவி ஸ்ரீலட்சுமியைப் பூஜிக்க வேண்டும். 

நம் இல்லத்தில் சாஸ்திரப்படி பூஜை செய்பவர்களுக்கு திருவருளும் லட்சுமி கடாட்சமும் கிட்டும். அன்று செய்யும் தானதர்மத்தால் மரண பயம் நீங்கி உடல் நலம் உண்டாகும். அன்னதானத்தால் விபத்து விலகும். ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவினால் நம் குடும்ப குழந்தைகளின் கல்வி மேம்படும். தானதர்மங்கள் செய்தால் எம வேதனை கிடையாது. நலிந்தவர்களுக்கு உதவி செய்தால் மறுபிறவியில் ராஜயோக வாழ்க்கை அமையும். ஆடைகள் தானம் செய்தால் நோய்கள் நீங்கும்; பழங்கள் தானம் செய்தால் உயர் பதவிகள் கிடைக்கும். மோர், பானகம் அளித்தால் கல்வி நன்கு வளரும்; தானியங்கள் தானம் கொடுத்தால் அகால மரணம் ஏற்படாது. தயிர் சாதம் தானம் அளித்தால் பாவ விமோசனம் ஏற்படும். முன்னோருக்கு தர்ப்பணம் செய்தால் வறுமை நீங்கும். அட்சய திருதியை அன்று ஆலிலையில் மிருத்யுஞ்ஜய மந்திரத்தை ஜபித்து, அதை நோயாளிகளின் தலையணையின் அடியில் வைத்தால் நோய் விரைவில் குணமாகும் என்பது நம்பிக்கை.

அட்சய திருதியை நாளில், பூஜையறையில் குலதெய்வ - இஷ்ட தெய்வங்களை வணங்கி வழிபடும் போது, பூஜையில் தொழில் ஆவணங்கள், பணம் இவற்றையெல்லாம் வைத்து அவர்களுக்குரிய மந்திரங்களையும் உச்சரித்து, வலம்புரிச் சங்கில் தீர்த்தம், பால் போன்றவை வைத்து சாமிக்கு நிவேதனம் செய்ய வேண்டும். மேலும் இத்துடன் அருகம்புல், வில்வம், துளசி, மரிக்கொழுந்து, மல்லிகை, செந்தாமரை மலர்களாலும் வீட்டிலும் வியாபார ஸ்தலங்களிலும் வழிபட்டால், தொழில் முன்னேற்றமும் குடும்ப விருத்தியும் ஏற்படும். 

இந்த நாளில் ஏழை, எளியவர்களுக்கு அன்னதானம் செய்வது, நல்ல காரியங்களுக்கு உதவுவது, எந்த வகையிலாவது பிறருக்கு உறுதுணையாக இருப்பது இவற்றினாலும் தர்மதேவதையின் அருளைப் பெற்று, இந்த அட்சய திருதியையில் புண்ணியங்களைச் சேர்த்துக் கொள்ளலாம். 

திருமகள் அம்சமாக நல்ல மனைவி அமைய விரும்புவோர், தங்களுக்கு நல்ல மருமகள் வர விரும்பும் பெற்றோர், அட்சய திருதியையில், திருக்கோயிலில் வைத்து பெண் பார்க்கும் வைபவத்தையோ நிச்சயதார்த்தத்தையோ நடத்தினால் விரும்பியபடி மணமகள் அமைவாள்.

இவ்வளவு சிறப்பு வாய்ந்த திருநாளில், திருமகளைப் போற்றிப் பாடி அவள் கருணையை பெறுவோம் !

முத்தாரம்மே சரணம் !

Posted by Mutharamman Satsangam

No comments:

Post a Comment