Apr 5, 2017

நவதுர்க்கை - சித்திதாத்ரி



நவராத்திரி விழாவின் இறுதி நாளாம் நவமி அன்று 'சித்தி தாத்ரி'யை ஆராதனை செய்வர். சித்தி என்றால் சக்தி என்றும் தாத்ரி என்றால் தருபவள் என்றும் பொருள். சித்திதாத்ரி என்றால் பக்தருக்கு அனைத்து சித்திகளையும் தருபவள் என்று பொருள். மார்கண்டேய புராணத்தின்படி எட்டு விதமான சித்திகள் -அணிமா, மகிமா, கரிமா, லஹிமா, ப்ராப்தி, பிரகாமியம், வாசித்வம், ஈசத்வம் என எட்டு விதமான சித்திகளையும் பக்தருக்கு தருபவள் இவள்.

ஆதிசக்தியான பார்வதி, அயனும் அரியும் போற்றும் முழுமுதல்வி என்ற தத்துவத்தைக் காட்டுவதால் சித்திதாத்ரி என்று பெயர் பெற்றாள்.

தியானம், யோகம், ஞானம் அனைத்துக்கும் உரியவளான சித்திதாத்ரி தேவி நவதுர்க்கையின் ஒன்பதாவது வடிவமாகக் காட்சி கொடுக்கிறாள். பிரம்மா, விஷ்ணு, சிவபெருமான், தேவர்கள் போற்றிப் பூஜிக்கும் சித்திதாத்ரி தேவி மனிதனுக்கு பரமாத்மாவை அறிய வைக்கிறாள்.

எல்லாமும் ஒரு மகா சக்தியில் இருந்து தோன்றியதே என்ற தத்துவத்தை உணர வைப்பவள் இவள்.

தேவி புராணம் சிவன் இவளை வழிபாடு செய்து அனைத்து சித்திகளையும் பெற்று 'அர்த்தநாரீஸ்வரர்' ஆனார் என கூறுகிறது.

கயிலைநாதன் சிருங்கார தாண்டவம் ஆடியபோது நவரசங்களையும் அழகாக வெளிப்படுத்தினார். அப்போது தன் பாதங்களால் வரைந்த கோலத்திலிருந்து சித்திதாத்ரி என்னும் தேவி தோன்றினாள். ஒன்பதாம் நாள் வழிபடப்படும் இந்த அன்னை காசியில் "சித்திதாத்ரி சங்கடா' என்னும் கோவிலில் எழுந்தருளியுள்ளாள்.

அருள் யோகிகளுக்கு அனைத்து சித்திகளையும் தரும். நவராத்ரியின் எட்டு நாட்களில் மற்ற அனைத்து சித்திகளையும் அடைந்த அவர்கள் இவள் அருளால் பேரானந்தம் என்னும் பேற்றை எய்துவர்.

சித்திதாத்ரி தாமரை மலரில் அமர்ந்து இருப்பவள். நான்கு கரம் கொண்டு இருக்கும் இவள் இடது கரத்தில் கதை, சக்ரம் கொண்டும், வலக் கரத்தில் தாமரை, சங்கு ஏந்தியவள். சித்திதாத்ரியின் வாகனம் சிங்கம்.

நவராத்திரியின் மற்ற எட்டு நாட்களில் துர்கைகளை முறைப்படி பூஜை செய்யும் பக்தன் இறுதி நாளில் சித்திதாத்ரி பூஜை செய்வான். இவளை வழிபட்டால் மனதில் உள்ள ஐயம் நீங்கும்.

இவளை வழிபடுவோர் பேரானந்தத்தை அடைவர். அவர்களுக்கு தேவை என்ற ஒன்று இருக்காது. அவன் அம்பிகையின் கருணை மழையில் நனைவான். அவனுக்கு வேறு எதுவும் தேவைப்படாது.

சகல சௌபாக்கியங்களும் அள்ளிக் கொடுக்கும் சித்திதாத்ரி தேவி பக்தர்களுக்கு மோட்சத்தைக் கொடுக்கிறாள்.


தியான ஸ்லோகம் :


ஸித்த கந்தர்வ யக்ஷாத்யை: அஸிரைரபி |
ஸேவ்யமாநா ஸதாபூயாத் ஸித்திதா ஸித்திதாயிநீ ||


(சித்தர்கள், கந்தர்வர்கள், யக்ஷர்கள், அசுரர்கள், தேவர் கூட்டங்கள் எப்போதும் வழிபடும் சித்திதாயினி துர்க்கா அடியேனது எல்லா செயல்களிலும் வெற்றியை வழங்கட்டும்.)


மந்திரம்: ஓம் சித்திதாத்ர்யை நம:


அபிராமி அந்தாதி :


சித்தியும் சித்தி தரும் தெய்வம் ஆகித் திகழும் பரா
சக்தியும், சக்தி தழைக்கும் சிவமும், தவம் முயல்வார்
முத்தியும், முத்திக்கு வித்தும், வித்து ஆகி முளைத்து எழுந்த
புத்தியும், புத்தியினுள்ளே புரக்கும் புரத்தை அன்றே.


நீயே சகலத்திற்கும் சித்தியாவாய். அச்சித்தியைத் தரும் தெய்வமான ஆதி சக்தியாகவும் திகழ்கின்றாய். பராசக்தியாகிய நீ கிளைத்தெழக் காரணமான பரமசிவமும், அச்சிவத்தைக் குறித்துத் தவம் செய்யும் முனிவர்களுக்கு முக்தியும், அம் முக்தியால் ஏற்படுகின்ற விதையும், அவ்விதையில் ஏற்பட்ட ஞானமும், ஞானத்தின் உட்பொருளும், என் நின்று, சகல பந்தங்களினின்று, காக்கக்கூடிய தெய்வம் திரிபுர சுந்தரியாகிய உன்னைத் தவிர வேறு யார் உளர்?


முத்தாரம்மே சரணம் !

Posted by Mutharamman Satsangam

No comments:

Post a Comment