Apr 5, 2017

நவதுர்க்கை - சந்த்ரகண்டா



வசந்த நவராத்திரி விழாவின் மூன்றாம் நாளில் துர்க்கையை சந்திரகாண்டா என ஆராதனை செய்கின்றனர். இதுவே அன்னையின் மூன்றாம் வடிவம் ஆகும்.

இவள் நீதியை நிலைநாட்டி சந்திர பிறையை அணிந்தவள் .'சந்திர' என்றால் நிலவு. 'காண்டா' என்றால் மணி என பொருள். சந்திர பிறை இவள் முன் நெற்றியில் மணி போல் இருப்பதால் இவளை 'சந்திர காண்டா' என அழைக்கின்றனர்.

திருவாலங்காடு தலத்தில் சிவனுக்கும் காளிக்கும் நடனப் போட்டி நடந்தபோது, ஒரு காலை தோளுக்கு இணையாக மேலே தூக்கி நடனமாடி தேவியைத் தோல்வியுறச் செய்தார். இந்த நடனம் ஊர்த்துவ தாண்டவம் எனப்படும். இந்த ஆட்டத்தின்போது கால்விரல்களால் வரையப்பட்ட பிரணவ ஒலிக்கோலத்திலிருந்து தோன்றிய அம்பிகை  சந்த்ரகண்டா. இந்த தேவிக்கு காசியில் சௌக் கடைத்தெரு அருகே கோவில் உள்ளது. மேலும், உத்தர பிரதேசத்தில் உள்ள சித்திரகந்த குல்லி என்னும் இடத்தில் சந்த்ரகண்டாவுக்கு தனிக்கோவில் உண்டு.

இவள் உடல் சக்கரங்களில் 'மணிபூர' சக்ரத்தில் இருப்பவள். நவராத்ரியின் மூன்றாம் நாள் யோக சாதனை செய்வோர் மணிபூரா சக்ரத்தை தேவியின் அருளோடு அடைவர். இதை அடைந்தோர் தெய்வீக சப்தத்தை கேட்பர். மணிபூர சக்ரத்தில் அவர்கள் சிறிது கவனமாக இருப்பர். அதனால் சந்திர காண்டா தேவியின் அருள் அவசியமாகும்.

முக்கண்ணனின் பத்தினியான இவளும் முக்கண்களைக் கொண்டு தலையில் பிறைச்சந்திரனைச் சூடிக் கொண்டு காக்ஷி கொடுக்கின்றாள். தங்கமயமான உடல் உடையவள். நாம் செய்யும் தீவினைகள் ஆகிய அசுரர்களைத் தடுக்க பத்து கரங்கரங்களிலும்  பல்வேறு ஆயுதங்களை ஏந்தியவண்ணம் புலிமீது அமர்ந்து காக்ஷி கொடுக்கின்றாள்.

மூன்று கண்களை உடைய இவளை வணங்கினால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி ஏற்படும். சந்திரகாந்தக் கல் எப்படி சந்திரனின் குளுமையைத் தன்னுள் வாங்கிக் கொண்டு நீரைப் பொழிகின்றதோ அப்படியே அம்பாள் நம் வெம்மையைத் தன்னுள் வாங்கிக் கொண்டு குளுமையான கருணை நீரைப் பொழிகின்றாள். இங்கே வெம்மை என்பது நம் வினைகளைக் குறிக்கின்றது. நம் தீவினைகளால் ஏற்படும் வெப்பத்தைத் தணிவித்துத் தன் கருணை மழையால் நம்மைக் குளிர்விப்பவள் இவளே.

இவளின் இரு கரங்கள் பக்தருக்கு அருள் செய்யும் விதமாக உள்ளன. இவளின் பார்வை பக்தரின் துன்பத்தை போக்கி இன்பம் தர வல்லது. சந்திர காண்டா தேவி போருக்கு தயாரான கோலத்தில் காட்சி தருபவள். அதனால் பக்தரின் துன்பத்தையும் விரைந்து தீர்த்து வைப்பாள். இவளை வழிபட தீயசக்திகள் அழியும்; மனதிற்கு சாந்தி கிட்டும்.

இவளின் அருள் கிட்டினால் பாவம் அழியும். இவள் கரத்தில் உள்ள மணியின் ஓசை பக்தரை ரட்சிக்கும். இவள் சர்வ சுபிட்சத்தையும் தந்து அருள் செய்வாள் என நம்புகின்றனர்.

ராகுவினால் துன்பம் நேருமோ என அஞ்சுபவர்கள் இவளைத் துதிக்கலாம். செவ்வாய்க்கிழமைகளில் இவளைத் துதித்தல் துன்பம், தடைகள் நீங்கி வாழ்வில் வளம் பெறுவார்கள்.

தியான ஸ்லோகம்:

பிண்டஜப்ரவராரூடா சண்ட கோபாஸ்த்ரகைர் யுதா |
ப்ரஸாதம் தநுதே மஹ்யம் சந்த்ர கண்டேதி விஸ்ருதா ||

(ஆக்ரோஷமான புலி வாகனத்தில் பவனி வந்து சண்டனை போரில் வென்றவளான சந்த்ரகண்டா அடியேனுக்கு அருளை தந்து காக்கட்டும்.)

மந்திரம்: ஓம் சந்த்ரகண்டாயை நம:

அபிராமி அந்தாதி:

அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வல்லி, அரு மறைகள்
பழகிச் சிவந்த பதாம்புயத்தாள், பனி மா மதியின்
குழவித் திருமுடிக் கோமளயாமளைக் கொம்பு இருக்க--
இழவுற்று நின்ற நெஞ்சே.-இரங்கேல், உனக்கு என் குறையே?

எவருக்கும் இணையில்லாத திருமேனியழகுடையவள். வேதப் பொருளிலே திருநடம் புரிந்த சிவந்த பாதத் தாமரைகளை உடையவள். குளிர்ந்த இளம்பிறையைத் தன் திருமுடிகளில் சூடிய கோமளவல்லி, இனிமையான கொம்பான தேவி இருக்க, நெஞ்சே! ஊக்கம் குறைந்து, ஏக்கம் கொள்ளாதே! உற்ற இடத்தில் ஊன்று கோலாக அன்னை இருக்க உனக்கு ஏன் குறை?

முத்தாரம்மே சரணம் !



Posted by Mutharamman Satsangam

No comments:

Post a Comment