Apr 5, 2017

நவதுர்க்கை - காலராத்ரீ



வசந்த நவராத்திரி துர்கா பூஜையின் ஏழாம் நாளில் காளராத்திரியை வழிபடுகின்றனர். துர்கா தேவியின் ஒன்பது வடிவங்களில் மிகவும் பயங்கரமானது காளராத்திரி ரூபம் ஆகும். காள என்றால் நேரம், மரணம், என்றும் ராத்திரி என்றால் இரவு எனவும் பொருள்படும். காளராத்திரி என்றால் காலத்தின் முடிவு என பொருள்படும். ராத்ரி என்னும் சொல்லுக்கு இரவு என்ற பொருள் மட்டுமில்லாமல் மங்களம் என்னும் அர்த்தமும் உண்டு.கரிய நிறத்துடன் மங்களங்களை அள்ளித் தருவதாலேயும் இவளுக்குக் காலராத்ரி எனப் பெயர் ஏற்பட்டது.

அசுரர்களை வதம் செய்து பிரபஞ்சத்தைக் காப்பதற்கு காலதாத்ரி தேவி நவதுர்க்கையின் ஏழாவது வடிவமாக அவதாரம் எடுத்தாள். பொன்னிறமான கௌரி (பார்வதி) அசுரர்களை அழிக்க பொன்னிறத்தை மாற்றி கருப்பு வர்ணத்தவளாக  காளியாக தோன்றி, சும்ப நிசும்பர்களை அழித்தாள்.

ஈசன் தாருகாமுனிவர்கள் ஏவிய கஜாசுரனைக் கொன்று , அந்த யானைத்தோலை போர்த்திய உடலுடன், கைகளில் பல வகையான ஆயுதங்களை ஏந்தி சிவபெருமான் ஆடியது பூத தாண்டவம். இதிலிருந்து காளராத்ரி என்ற சக்தி வெளிப்பட்டாள். காசியில் காளிகாகலி என்ற இடத்தில் இவளுக்கு கோவில் உள்ளது..

யோகிகள் இவளின் அருள் கொண்டு ஏழாம் சக்ரமாம் 'சகஸ்ராகாரத்தை' அடைவர்.

துர்க்கையின் வடிவம் எதிரிக்கு அச்சத்தை ஏற்படுத்தக் கூடியது. பரட்டை முடி , கருத்தமேனி, மூன்று கண்கள், கழுதையின் மீது அமர்ந்தவாறு நெருப்பைக் கவசமாகக் கொண்டு கோபமான கோலத்தில் காலதாத்ரி தேவி காட்சி கொடுக்கிறாள். கழுத்தில் மின்னல் போன்றதான மாலை ஒளிவீசும். புலித்தோல் ஆடையணிந்து பயங்கரத் தோற்றத்தில் காட்சிதருவாள். இவள் நான்கு கரம் கொண்டவள். ஒரு கரத்தில் வஜ்ராயுதமும், மறுகரத்தில் வாளும் இருக்கும். மற்ற இரு கரங்களால் அபய வரத முத்திரைகளும் கொண்டிருப்பாள். பக்தர்களுக்கு அபயத்தையும் துஷ்டர்களுக்குப் பயத்தையும் அளிப்பாள்.

இவளின் பார்வை பட்டாலே பாவம் தொலையும் என்றும், பேய் பிசாசுகள் பயந்து ஓடும் என்றும் நம்புகின்றனர். பக்தருக்கு இவளின் உருவம் பயம் தராது. பக்தருக்கு நன்மை செய்வதால் இவளை 'சுபாங்கி' என்பர்.

தியான ஸ்லோகம் :

வாமபாதோல்லஸத் லோஹலதா கண்டக பூஷணா |
வர்த்தந் மூர்த்தத்வஜா க்ருஷ்ணா காலராத்ரிர் பயங்கரீ ||

(கழுதை வாகனத்தில் பெரிய உதடுகளுடன், பளபளக்கும் ஆபரணங்கள் அணிந்து பிரகாசமாக பவனி வரும் பயங்கரீ துர்கா என்னுடைய அறியாமையை போக்கட்டும்.)

மந்திரம்: ஓம் காளராத்ர்யை நம:

அபிராமி அந்தாதி :

பயிரவி, பஞ்சமி, பாசாங்குசை, பஞ்ச பாணி, வஞ்சர்
உயிர் அவி உண்ணும் உயர் சண்டி, காளி, ஒளிரும் கலா
வயிரவி, மண்டலி, மாலினி, சூலி, வராகி--என்றே
செயிர் அவி நான்மறை சேர் திருநாமங்கள் செப்புவரே.

பைரவர் வணங்கக்கூடிய பைரவி; பஞ்சமி; பாசத்தையும், அங்குசத்தையும் உடைய பாசாங்குசை; ஐவகை மலர் அம்புகளையுடைய பஞ்சபாணி; வஞ்சகரின் உயிரை மாய்த்து, அவர்கள் இரத்தத்தைக் குடிக்கின்ற மேலான சண்டி; மகா காளி; ஒளிவீசும் கலை பொருந்திய வயிரவி, சூரிய, சந்திர மண்டலத்திலுள்ளோர்க்கு மண்டலி; சூலத்தையுடைய சூலி; உலகளந்த வராகி என்றெல்லாம் அடியார் பல்வேறு நாமங்களைச் சொல்லி வணங்குவர். குற்றமற்ற வேதங்களிலும், நின் திரு நாமங்கள் இவ்வாறு கூறப்படுகின்றன. அதையே அடியார்கள் மீண்டும் மீண்டும் சொல்லி வாழ்த்தி வணங்கி வழிபடுகின்றனர்.

முத்தாரம்மே சரணம் !




Posted by Mutharamman Satsangam

No comments:

Post a Comment