Apr 5, 2017

நவதுர்க்கை - ஸ்கந்தமாதாவசந்த நவராத்திரி விழாவின் ஐந்தாம் நாளாம் பஞ்சமி அன்று 'ஸ்கந்த மாதா' என்று துர்க்கையை வழிபடுகின்றனர். ஸ்கந்த என்ற சொல் முருகனை குறிக்கும். மாதா என்றால் அன்னை. முருகனின் தாயாக இருப்பதால் ஸ்கந்த மாதா என்று இவளை கூறுவர்.

முறையற்ற தக்ஷனின் யாகத்தில் கலந்து கொண்ட தேவர்கள் அனைவரும் சூரபத்மனால் துன்புற்றனர். அந்த அசுர சக்தியை அழிக்க ஒரு தலைமகன் தோன்ற வேண்டியதால் சிவ பார்வதி திருமணம் நடந்தது. முருகனும் தோன்றினான்.தேவர்களுக்கும், மனிதர்களுக்கும் பகையாக விளங்கிய தாரகாசுரன் மற்றும் சூரபத்மனை வதைத்தவர் தேவசேனாபதியாகிய முருகன். அத்தகைய முருகனின் தாயான இவள் மிகவும் மதிக்கப் படுகிறாள்.

தேவாசுரர்கள் பாற்கடலைக் கடைந்தபோது வெளிப்பட்ட ஆலகால விஷத்தை அனைவரையும் காக்கும்பொருட்டு சிவபெருமான் உண்டார். அப்போது ஆடிய புஜங்க தாண்டவத்தின்போது வரையப் பட்ட கோலம் புஜங்க கோலம். இதிலிருந்து ஸ்கந்தமாதா தோன்றினாள். காசியில் ஜைத்புரா என்ற பகுதியில் இந்த அன்னைக்கு கோவில் உள்ளது.

ஸ்கந்தமாதாவை  விசுக்தி சக்கரத்தில்  சித்தத்தை வைத்துத் தியானித்துப் பூஜிக்க வேண்டும். விசுத்தி என்றால் கலப்படம் இல்லாதது, தூய்மையானது என பொருள் வரும். இவள் அருள் கொண்டு இந்த சக்ரத்தை அடைவோரின் மனம் தூய்மையான கருத்துக்களால் நிறையும். இவளை சரண் அடைந்தோரின் மனதில் இருந்து தூய்மையில்லாத கருத்துக்கள் வெளியேறி விடும்.

இவளின் வடிவம் பக்தரை மெய்மறக்க செய்யும். இவள் தூய்மையின் வடிவானவள். அன்னை மஞ்சள் வர்ணத்தவளாக நான்கு கரங்களை கொண்டவள். இரண்டு கரங்களில் தாமரை மலரை கொண்டவள். ஒரு கரம் பக்தருக்கு ஆசி வழங்கும். இவளின் மடியில் ஸ்கந்தன் குழந்தை வடிவாக ஆறுமுகத்தோடு காட்சி தருவான். அன்னையை சிங்கம் தாங்கி நிற்கும். இவள் சில நேரங்களில் தாமரை மலர் மீது அமர்ந்து தவம் செய்பவளாக காட்சி தருவாள். அதனால் இவளை 'பத்மாசினி' என்றும் கூறுவர்.

இவளை வணங்குவோர் மனமும், ஆத்மாவும் அமைதி பெறும். அவர்கள் தன்னுடைய துக்கங்களை மறப்பர். வாழ்வில் இறை இன்பத்தை அனுபவிப்பர். இவளின் ஆசிகள் உண்மையான வேண்டுதல்களை நிறைவேற்றும். தன்னை நம்புவோரை இவள் என்றும் கைவிட மாட்டாள். இவளின் அருள் மோட்சத்திற்கு இட்டுச் செல்லும் என்று நம்புகின்றனர்.

அக்னி சொரூபம் ஆன ஸ்கந்தனின் திரு அவதாரத்திற்குக் காரணகர்த்தா இவளே. அக்னி எவ்வாறு அனைத்துப் பொருட்களையும் சுட்டெரிக்கின்றதோ அவ்வாறே நம்மைச் சூழ்ந்து சுட்டெரிக்கும் துன்பத்தை இவள் சுட்டெரிப்பாள். அங்காரகனால் ஏற்படும் தோஷங்களையும் போக்குபவள் இவளே.

இந்த தேவியை நவராத்திரி காலங்களில் ஐந்தாம் நாள் வழிபடுவர். புத்திர பாக்கியம் தருபவள் இவள்.

தியான ஸ்லோகம் :

ஸிம்ஹாஸநகதா நித்யம் பத்மாஞ்சிதகரத்வயா |
சுபதாஸ்து ஸதா தேவீ ஸ்கந்த மாதா யசஸ்விநீ ||

(சிம்மாசனத்தில் அமர்ந்து தனது கரங்களில் தாமரை மலரை ஏந்தியுள்ள ஸ்கந்தனின் அன்னையான ஸ்கந்தமாதா துர்கா அடியேனுக்கு எல்லா சுபங்களையும் வழங்கட்டும்.)

மந்திரம்: ஓம் ஸ்கந்தமாத்ர்யை நம:

அபிராமி அந்தாதி:

ககனமும் வானும் புவனமும் காண, விற் காமன் அங்கம்
தகனம் முன் செய்த தவம்பெருமாற்கு, தடக்கையும் செம்
முகனும், முந்நான்கு இருமூன்று எனத் தோன்றிய மூதறிவின்
மகனும் உண்டாயது அன்றோ?--வல்லி. நீ செய்த வல்லபமே.

உனது கணவனாகிய சிவபெருமான் ஒரு காலத்தில் மன்மதனை அண்டமும், வானமும், பூமியும் காணும்படியாக எரித்தார். அப்படிப்படவருக்கும் நீ ஆறுமுகமும், பன்னிரு கைகளும் சிறந்த அறிவும் கொண்ட அழகனாகிய முருகனைப் பெற சக்தியைக் கொடுத்தாய். உன்னுடைய அன்புதான் என்னவோ!

முத்தாரம்மே சரணம் !Posted by Mutharamman Satsangam

No comments:

Post a Comment